காதலர் தினம்

காதலர் தினம்

நன்றி ” திண்ணை/ Thursday February 14, 2008

– அப்துல் கையூம்

உலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி.

வெரி சிம்பிள். “காதலர் தினம் ஒழிக”வென்று ஒரே ஒரு கூப்பாடு போட்டால் போதுமானது. இளசுகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை மன்சூர் அலிகான் மாதிரி வில்லனாக்கி விடுவார்கள்.

“ஏன் அப்பு? இந்த மாதிரி பிரச்சாரம் பண்ணுறதுக்கு எத்தனை பேரு கும்பளா கெளம்பி இருக்கீகே?” என்று இவர்கள் கேட்பது நம் காதில் விழுகிறது.

“காதலர் தினம் வேண்டுமா..
என்று வாதாடவே உங்களுக்கே
இந்த தினம் தேவைப்படும்போது
என்னைப் போன்ற
உண்மைக் காதலர்கள்
கொண்டாடுவதில்தான்
என்னய்யா குற்றம்..?”

இது ஜீவா தம்பி எழுதிய கவிதை. தம்பிகளா! வருஷம் முழுக்க 365 நாளும் காதல் செய்யுங்க. லீப் வருஷமா இருந்தா 366 நாளும் காதலிலே திளையுங்க. யாரு வேணாம்னு சொன்னது?

இன்னும் சொல்லப் போனால் காதல் சமாச்சாரத்திலே நம்ம முன்னோர்கள் சங்க காலத்திலேயிருந்தே ரொம்ப விவரமான பேர்வழிகளாகத்தான் இருந்திருக்காங்க.

தொல்காப்பியம், திருக்குறள், குறுந்தொகை இதிலே எல்லாம் பார்த்தோம்னா காதல் சமாச்சாரத்திலே நம்ம ஆளுங்க சும்மா பூந்து விளையாடி இருப்பாங்க.

காதல் வேணாமுன்னோ, காதலிக்கிறது பாவமுன்னோ எந்த கலாச்சாரமும் சொல்லலீங்க. “அன்பு காட்டுங்கள்; பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்” அப்படித்தான் அனைத்து பண்பாடுகளும் அறிவுறுத்துது.

காதலர் தினம் கொண்டாடுறதுக்கு பல திசைகளிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வருது. ஏன்னு யோசனை பண்ணிப் பார்த்தா அவுங்க சொல்லுறதுலேயும் நியாயம் இருக்கத்தான் செய்யுது.

“இது கலாச்சார சரிவு, மேலை நாட்டினருடைய வியாபார யுக்தி, இளைய சமுதாயத்தை சீரழிக்கிற செயல், நம் பண்பாட்டை பாழ்படுத்த வந்த சைத்தான்” அப்படின்னு சொல்லுறாங்க.

காதலர் தினம்ங்குற பேருல உலகம் பூரா நடக்குற ஓவர் ஆக்டிங் கூத்தை வச்சுத்தான் இதை தடை செய்யுங்கன்னு அவர்கள் போர்க்கொடி தூக்கி இருக்காங்க.

இதுபோன்ற கட்டாயாத் தடை விதிப்பதினாலே இந்த மோகம் சட்டுன்னு மறைஞ்சுடும்னு நெனக்கிறீங்களா? ஊஹும். அப்படி எந்த அற்புதமும் நடந்திடும்னு எனக்குத் தோணலே. நம்ம பசங்கக்கிட்ட “இத செய்யாதேடா தம்பி”ன்னு சொன்னா ஒண்ணுக்கு ரெண்டா செய்வானுங்க. இதுதான் இப்ப உள்ள மென்டாலிட்டி. பக்குவமா சொன்னா புரிஞ்சுக்குவாங்க.

இந்த நாளு வந்துடுச்சுன்னா பூ வியாபாரிங்க, உயர்தர உணவு விடுதிங்க, நட்சத்திர ஹோட்டலுங்க, கிரீட்டிங் கார்ட்ஸ் வியாபாரிங்க, நகைக்கடைக் காரங்க, எல்லாத்துக்கும் நரி முகத்துலே முழிச்ச மாதிரின்னு வச்சுக்குங்க. கல்லாப்பெட்டி நெரம்பி வழியும்.

ஒதுக்குப்புறத்தை தேடும் காதல் ஜோடிகள், ‘கேன்டி’களோடும், பூங்கொத்துகளோடும் அலையும் காதலர்கள், ‘கேன்டில் நைட் டின்னர்’ என்ற பெயரில் நெருக்கங்கள், இதெல்லாம்தான் இன்னிக்கு இவங்களோட முக்கிய குறிக்கோள்; பிரதான பொழுது போக்கு அம்சம் etc., etc.,

ரொம்பவும் அட்வைஸ் கொடுத்தால் நம்மையும் இவர்கள் அந்த பொல்லாத தாத்தாமார்கள் லிஸ்டிலே சேர்த்திடுவாங்களோங்குற பயம்தான். வேறென்ன?

பெருசுங்க அப்படி என்ன பொல்லாத காரியங்கள் பண்ணுனுச்சுன்னு கேக்குறீங்களா? அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க? அதுக அடிச்ச லூட்டி ஒண்ணா ரெண்டா?

கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்க்கிறேன். யப்பப்பா.. அதுங்க ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? மைனர் செயினை மாட்டிக்கிட்டு; அதுலெ புலிநகத்தெ தொங்க விட்டிடுக்கிட்டு; மல்லுவெட்டி என்ன? சில்க் ஜிப்பா என்ன? ரேக்ளா இல்லேன்னா வில்லுவண்டி கட்டிகிட்டு கூத்தியாளு வீட்டுக்கு விசிட் அடிக்கறது என்ன? இதுக கெட்ட கேட்டுக்கு ஒண்ணுக்கு ரெண்டு சின்ன வீடுங்க – ஸ்டெப்னி – வேற?

அந்த காலத்துலே அப்பாக்காரரு வீட்டுக்குள்ளே வந்தாலே பூகம்பம் கெளம்பும். அம்மா அவுங்க காலை கழுவுறதுக்கு செம்புலே தண்ணியை தூக்கிக்கிட்டு ஓடுவாங்க. அவரு உள்ளே நுழையும் போதே எள்ளும் கொள்ளும் வெடிக்கும். வீண் ஜம்பத்துக்கும் அதட்டலுக்கும் குறைச்சலிருக்காது. கெடந்து வானத்துக்கும் பூமிக்குமாக குதி குதின்னு குதிப்பாரு.

இவ்வளவுக்கும் வயலிலே சும்மா வெட்டியா கயித்து கட்டில்லே ஜாலியா உக்காந்து நடவு நடுற பொம்பளைங்களை சைட் அடிச்சிட்டு வந்திருப்பாரு. அதுக்குப் போயி இவ்வளவு ஓவர் பந்தா பண்ணுவாரு. இவரு ஒரு பைசா சம்பாதிச்சிருக்க மாட்டாரு, அவரோட அப்பா சம்பாதிச்சு வச்சிட்டுப் போன சொத்தாக இருக்கும்.

இந்த ஜெனரேஷன்லே பொறந்த நாம சிக்கனமா பட்ஜெட் லைஃப் நடத்துறோம். புள்ளைங்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்து வளர்க்குறோம். நம்மளோட கருத்தை அவங்கங்கிட்ட திணிக்கிறது கெடயாது. நல்லது கெட்டது பசங்களுக்கு நல்லாவே புரியுது.

இப்பல்லாம் புருஷன்மாருங்க மனைவிக்கு கிச்சன்லே ஹெல்ப் பண்ணுறாங்க. கால் கூட அமுக்கி விடறாங்க. பசங்களுக்கு ஹோம்வொர்க் சொல்லிக் கொடுக்குறாங்க, ஸ்கூல்லே போயி விட்டுட்டு வர்றாங்க. அப்பாவும் புள்ளையும் ஒண்ணா உக்காந்து டிவி பாக்குறாங்க. சல்மான்கான் கத்ரீனா கேஃப்பை பிரிஞ்சதுலேந்து, சஞ்சய் தத் வேற கல்யாணம் முடிச்சிக்கிட்ட விஷயம் வரைக்கும் ஓப்பனா டிஸ்கஸ் பண்ணுறாங்க.

நல்ல சமத்தான பொண்ணா பாத்து தேர்ந்தெடுத்து அப்பா அம்மா சம்மதத்தோட தாராளமா காதலிங்க. யாரும் வேணான்னு சொல்லலை. அவுங்களை கன்வின்ஸ் பண்ண வைக்கிறதுக்கும் ஒரு கெட்டிக்காரத்தனம் வேணும். பக்குவமா எடுத்துச் சொல்லணும். முதல்லே அம்மாக்கிட்ட சரண்டர் ஆயிடனும். அது ரொம்ப அவசியம். ஈஸியா கிரீன் லைட் விழுந்துடும்.

அதை விட்டுப்புட்டு “டார்லிங் ஐ லவ் யூ”ன்னு சொல்லி பத்திரிக்கை, ரேடியோ, டிவின்னு விளம்பரம் செஞ்சு தம்பட்டம் அடிக்கனுமாங்குறதுதான் என்னோட கேள்வி.

அந்த காலத்துலே, அப்பாவுக்கு முன்னாடி முகத்தை ஏறெடுத்து பார்த்து பேசக்கூட தைரியம் இருக்காது. தலையை குனிஞ்சுக்கிட்டேதான் பேசணும். தப்பித் தவறி தலையை தூக்குனா “என்னடா மருவாதி கெட்டத்தனமா முறைச்சு முறைச்சு பாக்குறே? முழியை பேத்துடுவேன்” அப்படின்னு எகிறுவாரு.

இப்பல்லாம் அப்பிடியா? அப்பாவும் மகனும் தோள்ளே கைபோட்டுக்கிட்டு ப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுறாங்க. பயந்து நடுங்க வேண்டிய தேவையே இல்லை. குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தேர்ந்தெடுத்துட்டு வந்து “டாடி! இந்த பெண்ணைத்தான் நான் விரும்பறேன்” னு சொன்னா மாட்டேன்னா சொல்லப் போறாரு?

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதுக்காக இந்து முன்னணி காரங்க 500 மஞ்சக் கயிறு (நல்ல வேளை மாஞ்சாக் கயிறு கொடுக்கலே) வாங்கி வச்சிருக்காங்க. காதலருங்கக்கிட்ட கொடுத்து கட்டுங்கப்பா தாலி; கொட்டுங்கப்பா மேளம்ன்னு சொல்லப் போறாங்களாம்.

முன்னமாவது பசங்க ‘பொக்கே’யும் கையுமா அலைஞ்சானுங்க. இப்ப மஞ்சக் கயிறு அதுவுமால்லே அலைவானுங்க?

தடுப்பு ஊசி போடுறது கேள்விபட்டிருக்கோம். இவுங்க ‘காதலர் தினம் தடுப்பு கமிட்டி’ன்னு அமைச்சு, பொது இடங்கள்ளே அத்துமீறி நடக்கிற இளைஞர் இளைஞிகளை போலீசுலே புடிச்சு கொடுக்கப் போறாங்களாம். இதுவும் ஒரு விதத்துலே அத்து மீறல்தானுங்களே?

பொது இடத்துல நடக்குற அழிச்சாட்டியங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், காவல்துறையும் மாவட்ட அரசு அதிகாரிகளும் இருக்கறப்போ முன்னணி காரங்களும் பின்னணி காரங்களும் இப்படி செய்யுறது நல்லாவா இருக்கு?

இந்தக் கூட்டத்துக்குள்ளே சமுக விரோதிகளும் பூந்துக்கிட்டு போலீஸ்லே புடிச்சு கொடுக்கப்போறேன்னு இளம்ஜோடிகளை அலைக்கழிக்க இம்சை அரசனா மாறுனா என்னாங்க செய்யிறது?

ஒரு சில இடத்துலே திருடனுங்களை புடிக்கிறோமுன்னு சொல்லிப்புட்டு வெளியூர்லேந்து வந்த அப்பாவி பசங்களை திருடன்னு நெனச்சி அடிச்சே கொன்னுப்போட்ட சம்பவமெல்லாம் நடந்திருக்குதானே?

சரி. விஷயத்துக்கு வருவோம். லவ் பண்ணறதுக்கு நாள் நட்சத்திரம் பார்க்கணுமா? பிப்ரவரி 14 – காதல் பொறந்த தினமா என்ன? யாரோ ஒரு வெள்ளைக்காரன் சொல்லிட்டு போயிட்டான். அதுக்காக இந்த ஒரு நாளை புடிச்சு வச்சிக்கிட்டு ஜம்பம் அடிக்கிறது எனக்கு என்னவோ சரியா படலீங்க.

சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பு இது. போன வருஷம் அமெரிக்காவிலிருந்து மட்டும் ஒரு பில்லியன் கிரீட்டிங் கார்ட்ஸ் இந்த மாசத்துலே சேல்ஸ் ஆனதாம். இதை வாங்குவது 85 சதவிகிதம் பொம்பளைங்கதானாம்.

புள்ளைகளா ! உங்களை வச்சு காசு பண்ணுறதுக்காக யாரோ செய்த வியாபார தந்திரம் இதுன்னு உங்களுக்கு தோணலியா?

1960-ஆம் ஆண்டுலே சுவீடன் நாட்டுலே இருக்குற ஒரு பூக்கள் உற்பத்தி செய்யுற கம்பேனி ‘அனைத்து இதயங்கள் தினம்’ங்குற பேருலே இந்த நாளை பிரபலப்படுத்தி பெரிய அளவிலே காசு பண்ணுனுச்சு.

ஜப்பான், கொரியா நாட்டிலே சாக்லெட் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருக்கிறதாம். இந்த நாளிலே பெண்கள் தங்களுடன் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆண்களுக்கு சாக்லெட் வாங்கி கொடுக்க வேண்டுமென்பது எழுதப் படாத சட்டமாக ஆகிவிட்டது. இதற்கு எசப்பாட்டு பாடும் விதமாக மார்ச் மாதம் 14-ஆம்தேதி ஆண்கள் வெள்ளை நிற சாக்லெட் வாங்கித் தர வேண்டும். இந்த நாளுக்கு ‘வெள்ளை தினம்’ என்று பெயர்.

டென்மார்க் மற்றும் நார்வே நாட்டுலே இதுக்கு பேரு Valentinsdag. அங்கே அவ்வளவு விமரிசையா கொண்டாடலேன்னாலும் ஜோடியா போயி ரொமாண்டிக் டின்னர் சாப்பிடறதுக்கும், பிரியாமனவர்களுக்கு சிவப்பு ரோஜா கொடுக்குறதுக்கும், ரகசிய காதலன்/காதலிக்கு வாழ்த்து அட்டைங்க கொடுக்கறதுக்குமாக இந்த நாளை ஒதுக்கி வச்சிருக்காங்க.

காதலர் தினம்ங்குற பேருல நடக்குற கூத்து, கும்மாளம், நம்ம நாட்டுக்கு ஒரு கலாச்சார சீரழிவுங்குறது உண்மைதானுங்களே? நியு இயர் கொண்டாட்டம்னு சொல்லி நட்சத்திர ஹோட்டலுக்கு முன்னாடி குடி போதையிலே நடந்த செக்ஸ் வக்கிர காட்சிகளையெல்லாம் இந்த டிவி காரங்க காட்டத்தானே செய்தாங்க.

அதே சமயம் தாக்கரே ஆளுங்க கிரீட்டிங்ஸ் கார்டு விக்கிற கடைக்குள்ளார புகுந்து சூறையாடுறதும் கலாட்டா பண்ணுறதும் பெரிய அநியாயமுங்க

அவருக்கு தாக்கரேன்னு பேரு வச்சது தப்பாப் போச்சுன்னு நெனக்கிறேன். (பால் தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாரும் ஒரு குட்டையிலே ஊறுன மட்டைதானுங்களே?) அவங்க ஆளுங்களுக்கு சான்ஸ் கெடச்சா போதும்னு ‘உன்னை தாக்குறேன்; என்னை தாக்குறேன்’னு வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்குறாங்க. இதுலே பாவம் நம்ம Big B வேற. இந்த ‘தாக்குற’ கோஷ்டிங்க கிட்ட மாட்டிக்கிட்டு ‘திரு-திரு’ன்னு முழிக்கிறாரு.

காதல் என்பது இரண்டு மனங்களோட சங்கமம். அந்த கெமிக்கல் ரியாக்ஷன் எல்லோர் முன்னாடியும் நடந்தா அது சங்கடம். சங்கடம் அவுங்களுக்கு மாத்திரம் இல்லே. அத பார்க்குற மத்தவங்களுக்கும் தர்ம சங்கடம்.

காதல் என்பது காதலன் காதலி மேலே வைக்கிற அன்புக்கு மாத்திரம் சொல்றதில்லே. அண்ணன் தங்கச்சி மேலே வச்சிருக்கிற பாசத்துக்கு பேரும் காதல்தான். அம்மா, அப்பா மேலே நாம வச்சிருக்கிற அன்புக்கு பேரும் காதல்தான்.

“Thinking of You”, “You Are Mine” “Forget me not” அப்பிடின்னு பத்திரிக்கையிலே விளம்பரம் பண்ணி நம்மோட காதலை ஊரறிய உலகறிய தம்பட்டம் அடிக்கனுமா என்ன? காதலென்ன பாக்கெட் ஷாம்பூவா. விளம்பரம் செய்வதற்கு?

எங்க அம்மாக்கிட்ட நான் போயி அம்மா ப்ளீஸ் “Forget-me-not” ன்னு சொன்னேன்னு வச்சுக்குங்க “அட கிறுக்குப்பய மவனே! இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்தே? திடீர்ன்னு உனக்கு என்னாச்சு?”ன்னு கேப்பாங்க.

தீபாவளி எதுக்கு கொண்டாடுறீங்கன்னு கேட்டா நீங்க டக்குன்னு சொல்லிடுவீங்க. பொங்கலு எதுக்கு கொண்டாடுறீங்கன்னு கேட்டா அதுக்கும் பதிலு சொல்லிடுவீங்க. வாலண்டைன் டே எதுக்கண்ணே கொண்டாடுறீங்கன்னு கேட்டா சரியான பதிலு வராது.

எதுக்காக கொண்டாடுறோம்னு தெரிஞ்சுக்காமலேயே, எல்லாரும் கொண்டாடுறாங்க அதுக்காக நாமளும் கொண்டாடுறோம்னு கொண்டாடுறது சரிதானான்னு சொல்லுங்க.

இந்த காதலர் தினம் பிஷப் புனித வாலண்டைன் ஞாபகார்த்தமா கொண்டாடுறாங்க. கிபி 269 ரோம் நாட்டிலே வீர மரணம் அடைஞ்சதா சொல்றாங்க. வாலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்கு துணை நின்று அவர்களோட காதலை நிறைவேற்றி வச்சாராம். அவர் மறைந்த தினம் இதுதானாம்.

நம்ம ஊருலே கல்யாணம் நடத்தி வைக்கிற வைக்கிற டவுன் காஜி இப்ராஹிம் ஹாஜியாரோ அல்லது புரோகிதர் சேஷகோபாலன் சாஸ்திரியோ அல்லது திருமண பதிவாளர் ராமசாமியோ இறந்துட்டாருன்னு வச்சுக்குங்க. அந்த நாள்தான் காதலர் தினம்னு சொன்னா எப்படி இருக்கும்?

எந்த வாலண்டைன் பேருல இதை கொண்டாடுறாங்க என்பது இன்னும் சர்ச்சையாகவே இருக்குது. ஜாப்ரி சாஸர் காலத்துலே வாழ்ந்த வாலண்டைனா? ஆரோலியன் சக்கரவர்த்தி ஆட்சிகாலத்திலே வாழ்ந்த Valentine of Temi-யா? சரியாகத் தெரியாது.

இதே பிப்ரவரி 14 தேதியிலே ஆப்பிரிக்காவிலே இன்னொரு வாலண்டைன் பாதிரியார் தன் சகாக்களுடன் ஆப்ரிக்காவில் கொல்லப்பட்டார் என்கிற செய்தியை கத்தோலிக்க கலைக்களஞ்சியத்திலே காண முடியுது,

காதல் கதையோடு சம்பந்தப்பட்டது ரோம் நகரத்தை சேர்ந்த வாலண்டைன்தான்னு போலண்டிஸ்ட் என்கிற அறிஞர் அடிச்சு சொல்லுறாரு.

பறவைகள் தங்களுக்குள் காதலை அறிவிப்பதும் கல்யாணம் பண்ணிக் கொள்வதும் இந்த மாதத்தில்தான் என்று வேறு கதை கட்டி விட்டிருக்காங்க.

சித்திரைத் திருநாள், பொங்கல் இந்த கொண்டாட்டத்துக்கெல்லாம் ஒரு பின்னணி இருக்கு. யாரோ செய்கிறார்கள் என்பதற்காக கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் புரிவதற்கல்ல காதல். காலம் முழுக்க புரிய வேண்டியது காதல்.

ஒரு விவரமான தம்பி இணயத்தில் எழுதியிருந்த கவிதையொன்று என்னை மிகவும் கவர்ந்தது.

காதலர் தினம்
பிப் 14
குழந்தைகள் தினம்
நவம்பர் 14
கூட்டி கழித்துப் பார்
கணக்கு சரியாய் வரும்!!!

தம்பி நன்றாக கணக்கு போட்டிருக்கிறது. Dating என்ற அம்சமும் இந்த நாளில் வைத்திருப்பது அதற்காகத்தானோ என்று புரியவில்லை.

இந்த காலத்து புள்ளைங்க படிச்சவங்க. படிச்சவங்க மாத்திரம் இல்லீங்க. உலகத்தை நல்லா புரிஞ்சவங்களாவும் இருக்காங்க. வாழ்க்கையிலே தடம் மாறுனா அதோட பாதிப்பு என்னவா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும். எய்ட்ஸை பத்தி கேட்டா நமக்கு பாடம்கூட அவங்க நடத்துவாங்க.

இதைக் கொண்டாடுவதா; வேண்டாமா? நமது கலாச்சாரத்துக்கு இது ஏற்றதா; இல்லையா?

முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான் புள்ளைங்களா. The Ball is in your court.

மந்திரம்

மந்திரம்

நன்றி : திண்ணை Thursday February 7, 2008

– அப்துல் கையூம்

மந்திரம் என்ற தலைப்பைக் கண்டதும் நான் ஏதோ காயத்ரி மந்திரம் அல்லது நமசிவாய மந்திரத்தைப் பற்றிய வேத உபன்யாசத்தை கதாகாலட்சேபம் நிகழ்த்தப் போகிறேன் என்று திண்ணையின் ஆன்மீக வாசகர்கள் எண்ணிக் கொண்டால் கண்டிப்பாய் மிஞ்சுவது ஏமாற்றம்தான்.

“ஏவுகணை வேகத்தில் உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில் மந்திரம், தந்திரம், மாயாஜாலம் என்று விட்டாலாச்சார்யா பாணியில் கட்டுரை அவசியம்தானா?” என்று வாசக அன்பர்கள் வினவக்கூடும்.

பிரபல நாவலாசிரியர் ஜே. கே. ரெளலிங் மந்திரவுலகம் பற்றி எழுதிய “ஹாரி பாட்டர் அண்ட் த ஆடர் ஆப் பீனிக்ஸ்” எனும் நாவல் 55 மில்லியன் விற்றுத் தீருகையில் என்னுடைய ‘மந்திரம்’ கட்டுரையை குறைந்தது ஐம்பத்தைந்து பேர்களாவது படித்து ரசிக்க மாட்டார்களா என்ற நப்பாசைதான். வேறென்ன?

குட்டி பத்மினியின் ‘மந்திர வாசல்’ தொலைக்காட்சித் தொடரை, பட்டி தொட்டிகளெங்கும் ரசித்த தாய்க்குலங்களில் ஒன்றிரண்டு பேராவது இந்த ‘மந்திரத்தை’ படிக்கலாம் அல்லவா?

மந்திரம் என்றால் இறைவனை பிரார்த்திக்கும் ஜெபம் என்ற அர்த்தம் மட்டும்தானா?

“மதன மாளிகையில், மந்திர மாலைகளாம், உதய காலம்வரை, உன்னத லீலைகளாம்” என்று கவியரசர் கண்ணதாசன், சிவாஜி நடித்த ‘ராஜபார்ட் ரங்கதுரை’ என்ற படத்திற்கு பாடல் எழுதினார். பள்ளியறையில் ஜெபம் என்ன வேண்டிக் கிடக்கிறது? அதற்கு அங்கே எங்கே நேரம்?

கவிஞரின் கற்பனையில் உதித்த மந்திரம் முற்றிலும் மாறுபட்டது. கண்ணதாசனுக்கு இதுபோன்ற மந்திர வார்த்தைகளை தந்திரமாய் கையாளுவது கை வந்த கலை.

மந்திரம் என்பது உள்ளத்தை ஒருமைப்படுத்தும் செயல். ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீது நாட்டத்தைச் செலுத்துவது; கவனத்தை செலுத்துவது என்று பொருள் கொள்ளலாம்.

பிறிதொரு இடத்தில் மந்திரம் என்ற வார்த்தைக்கு கவியரசர் அளிக்கும் விளக்கம் முற்றிலும் மாறுபட்டிருக்கும்.

“மந்திரம் உரைத்தாற் போதும் – மலரடி தொழுதால் போதும்
மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திரப் பதவி கூடும் – இகத்திலும் பரங்கொண்டோடும்
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்”

என்ற ஆதிசங்கரரின் அமுத வார்த்தைகளை அனுபவக் கவிஞர் அழகாக எடுத்து வைக்கிறார்.

“ஆடவரெலாம் ஆடவரலாம்” என்று அழைக்கும் போதும் “அத்திக்காய் காய் காய்; அத்-திக்காய் காய் காய்” என்று உரைக்கும் போது, “அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்” என்று பிரமிக்கும் போதும், கண்ணதாசனின் மந்திர வரிகளில் நாம் மயங்கிப் போகிறோம்.

கண்ணாதாசன் மாத்திரமா மன்மத மந்திரத்தை உதிர்த்தார்? கோடு போட்டால் ரோடு போடுகிற வாலிபக் கவிஞர் வாலி சும்மா இருப்பாரா? ‘என்னைப் போல் ஒருவன்’ என்ற படத்திற்காக; அதே சிவாஜிக்காக :

“வேலாலே விழிகள், இன்று ஆலோலம் இசைக்கும், சிறு நூலாலே இடையில், மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்” என்று டி.எம்.எஸ்ஸை மந்திரம் ஜெபிக்க வைத்தார்.

எனக்கு அறிமுகமான பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன். மந்த்ரா பேடியின் அதிதீவிர ரசிகன். அறை முழுதும் மந்த்ராபேடியின் (அம்மா, அப்பாவின் பயம்கூட இல்லாமல்) வால்போஸ்டரை wall முழுதும் ஒட்டி வைத்திருந்தான். “வேண்டாம்டா” என்று அவருடைய அம்மாவும் ‘வாள் வாள்’ என்று கத்திப் பார்த்து விட்டார். வால் பையன் கேட்பதாக இல்லை.

“இவன் உருப்படுற மாதிரி தெரியலே. ‘மந்திரிச்சு’ விட்ட கோழி மாதிரி அலையுறானே?” என்று அவருடைய அப்பாவும் நொந்து நூடுல்ஸாகி விட்டார்.

கோயிலுக்காக நேர்ச்சையாக மந்திரித்து விடப்பட்ட ஆடு, மாடு, கோழி முதலான வாயில்லா ஜீவன்கள் கொழு கொழுவென்று (கொழுப்பெடுத்து?) கோயிலை சுற்றிச் சுற்றி வரும். வால் பையனை ‘மந்திரிச்சு விட்ட கோழி’ என்று அவர் வர்ணித்தது பொருத்தமான பதமாகவே எனக்குப் பட்டது.

நிறைய அம்மாமார்கள் தங்கள் ஆசை புத்திரனுக்கு திருமணம் நடத்தி பார்த்து விட்டு புலம்புகிற வசனம் இது. “வந்தவ என்ன மாய மந்திரம் பண்ணினாளோ தெரியலியே? இப்படி முந்தானையை புடிச்சிக்கிட்டு இவன் அலையிறானே?”

தெரியாமல்தான் கேட்கிறேன்? புகுந்த வீட்டுக்கு வருகின்ற மாட்டுப்பெண் என்ன P.C.சர்க்காரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டா வருகிறாள்?

கூட்டுக் குடும்பத்தில், மனைவி கணவனிடம் மனம் விட்டு பேசக்கூடிய ஒரே இடம் அவர்களது படுக்கையறை. வீட்டு நடப்புகளை அங்குதான் அவர்கள் கருத்து பரிமாறிக் கொள்ள முடியும். (இதற்காக ஆட்டோ எடுத்துக் கொண்டு கண்ணகி சிலைக்கா போக முடியும்?) அந்த பரிபாஷைக்கு வீட்டார் வைக்கும் பெயர் “தலையணை மந்திரம்”. மற்றொரு புனைப்பெயர் “முந்தானை முடிச்சு”.

நிஜமாகவே ‘தலையணை மந்திரம்’ கற்றுத் தேர்ந்த சம்சாரமும் இருக்கத்தான் செய்கிறாள். அவளுக்கு எந்த நேரத்தில் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற சூட்சம மந்திரம் தெரியும். “என்னங்க..!” என்று அவள் இழுக்கும் தொகையறாவிலேயே இவன் மகுடி ஊதிய பெட்டிப்பாம்பாக அடங்கிப் போவான். (சொந்த அனுபவத்தை வைத்துத்தான் ஒருவன் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. கேள்வி ஞானத்தைக் கொண்டும் எழுதலாம் அல்லவா?)

குடும்பச் சொத்துக்காக ஒரு வழக்கை போட்டு விட்டு காலங்காலமாக கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையாய் நடக்கும் என் நண்பர் ஒருவருக்கு அவருடைய வழக்குறைஞர் எப்போதும் கூறும் ஒரே பதில் “இது ஒண்ணும் மந்திரத்துலே மாங்காய் வரவழைக்கிற சமாச்சாரம் இல்லீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க”.

மந்திரம் என்ற வார்த்தை ‘மந்த்ரா’ என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பிறந்தது, ‘மன்’ என்றால் மனது என்றும் “த்ரா” என்றால் வெளிப்பாடு என்றும் அர்த்தம். உள்ளத்திலிருந்து உச்சரிக்கும் வெளிப்பாடே மந்திரம்.

மந்திரம் என்பதற்கு ஆலோசனை என்ற பொருள் உண்டு. ஆலோசனையை வழங்குவதால்தான் அவனுக்கு மந்திரி (மன்+த்ரி) என்ற பெயரே வந்தது. இல்லத்தில் ஆண்ராஜ்ஜியமா அல்லது பெண்ராஜ்ஜியமா என்று தெரிந்துக் கொள்வதற்காக மதுரையா? சிதம்பரமா? என்று வினவுவதுண்டு. பதில் எதுவாக இருந்தாலும் ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்ற முன்னோர்கள் வாக்கை மெய்ப்பிப்பதாகவே இருக்கும். ஒன்று அவள் பிரதம மந்திரியாக இருப்பாள் அல்லது உள்துறை மந்திரியாக இருப்பாள். பதவி குறைந்தாலும் காரம் குறையாது.

கண்ணதாசன் கூறுகின்ற மந்திரத்திற்கும், புரோகிதர் கூறுகின்ற மந்திரத்திற்கும், வித்தைக்காரன் கூறுகின்ற மந்திரத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

வித்தைக்காரன் உச்சரிக்கும் மந்திரம் என்ற வார்த்தைக்கு ‘ஏமாற்றுதல்’ என்று அர்த்தம் என்பதை நான் சிறுவனாக இருந்த போதே அறிந்துக் கொண்டேன்.

எங்களூர் அலங்கார வாசலில், மாங்கொட்டையை கூடையால் மூடி வைத்துவிட்டு “இப்போது மாமரம் முளைக்கும்” என்பான் வித்தைக்காரன். “பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப் போகிறேன்” என்பான். அவன் சொல்வது எதுவுமே நடக்காது. பாதியில் அங்கிருந்து நழுவவும் பயம், ரத்தம் கக்கி செத்து விட்டால் என்ன செய்வது?

பால்ய வயதில் விஜயலட்சுமி டூரிங் டாக்கீஸில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் பார்த்தது நினைவுக்கு வந்தது. “அண்டா கா கஸம் அபூ கா ஹூகும் திறந்து விடு சீசே” என்றதும் குகைக் கதவு தானாகவே திறப்பது பார்க்க பிரமிப்பாக இருக்கும்.

திறப்பதற்கு மட்டும்தானா மந்திரம்? மூடுவதற்கும் மந்திரம் இருக்கிறது போலும். இதில் “மறைப்பதற்கு ஒன்றும் இல்லை” என்ற கருத்தை வெளிப்படுத்துவதற்காக “இதில் மூடு மந்திரம் எதுவும் கிடையாது” என்று கூறுவது உண்டு.

கண்ணதாசனை நிறைய பேருக்கு பிடித்துப் போனதற்கு காரணம் அவரது வெளிப்படைத்தன்மை. ”ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பல எண்ணத்தில் நீந்துகிறேன்” போன்ற தனிப்பாடல்களை படிக்கும்போதும், அவரது மனவாசம் போன்ற நூலில் மனதை பறிகொடுக்கும்போதும் அவரிடம் ‘மூடு மந்திரம்’ ஏதுமில்லை என்பதை நம்மால் உணர முடியும்.

‘மந்திரம்’ என்ற வார்த்தைக்கு, ஜெபம், ஸ்லோகம், பாசுரம், முணுமுணுப்பு, குறிக்கோள், இலக்கு, எண்ணம், கொள்கை, ஆலோசனை, அறிவுரை, கருத்து, திறம், நுட்பம், சூழ்ச்சி, சூட்சமம், செய்வினை, அதிரடி நிகழ்வு, என்று அர்த்தங்களை அள்ளி வீசிக் கொண்டே போகலாம். அடேங்கப்பா!. மந்திரத்திற்கு இத்தனை பைபாஸ் ரோடுகளா? என்று நம்மை வியக்க வைக்கும்.

மந்திரம் என்கிற வார்த்தையை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். வாழ்நாள் முழுதும், ஆரம்ப முதல் இறுதிவரை, மந்திரம் நம்மை துரத்தோ துரத்து என்று துரத்துகிறது.

குழந்தை பருவத்தில் பெயர் வைக்கும் போதும், வாலிபப் பருவத்தில் திருமணம் நடக்கும் போதும், இறுதிப் பயணத்தின் போதும் மந்திரங்கள் உச்சரிக்கப் படுகிறன.

“சர்வ மாங்கல்ய மாங்கல்யே, சிவே சர்வாத சாதிகே” என்ற வேதமந்திரம் இந்து மதத்தில் ஒரு திருமண பந்தத்தை உருவாக்கி விடுகிறதே?

படுக்கைக்கு போகும் போதும், பயணத்தின்போதும், பயம் வரும்போதும். பயன் அடைய வேண்டியும் மனிதன் மந்திரத்தை உச்சரித்த வண்ணம் இருக்கிறான்.

உயிரோடு இருக்கும்போது மட்டுமா? இறந்து போன பிறகும் மந்திரம் துரத்துகிறது. மந்திரம் ஓதாத திதி, திவசம் இருக்கிறதா என்ன?

தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தபோது அறிஞர் அண்ணா அவர்கள் நாத்திகமா? ஆத்திகமா? என்று குழம்பிக் கொண்டிருந்த வேளையில், 63 நாயன்மார்களில் ஒருவரான திருமூலரின் “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற வாக்கினை மூலமந்திரமாக ஏற்று தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். “கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற மூன்று வார்த்தை மந்திரம் அவருடைய தாரக மந்திரமாக திகழ்ந்தது.

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்” – இது புரட்சித் தலைவருக்கு புகழை ஈட்டித் தந்த பாடல் வரிகள். அந்த மூன்றெழுத்து மந்திரம் “அண்ணா” என்ற மூன்றெழுத்தா? அல்லது அப்போது அவர் சார்ந்திருந்த “தி.மு.க.” என்ற மூன்றெழுத்தா? ‘M.G.R.’ என்ற அவரது ஆங்கில மூன்றெழுத்தா? ‘உயிர்’ என்ற மூன்றெழுத்தா? இதுநாள்வரை சர்ச்சைக்குரிய விவாதமாகவே இது இருந்து வருகிறது.

கழகக் கண்மணிகளில் ஒருவரான நாஞ்சில் மனோகரனின் கையில் எப்போதும் ஒரு கருப்புக்கோல் இருக்கும். எந்த ஒரு ‘லாஜிக் இல்லா மேஜிக்கை’யும் செய்யாமலேயே “மந்திரக்கோல் மைனர்” என்ற பெயரைப் பெற்றார்.

உலகம் முழுவதும் காதல் சாம்ராஜ்யத்தின் மூன்றெழுத்து மந்திரமொன்று இருக்கின்றதென்றால் அது “ஐ லவ் யூ” என்ற மந்திரம்தானே? மோனலிசாவின் அந்த ‘மந்திரப் புன்னகை’தானே லியோனார்டா டா வின்சிக்கு புகழைத் தேடித் தந்தது?

ஒளவைப் பாட்டியின் மிகச் சிறந்த வாக்குகளில் ஒன்று “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை”. தகப்பனின் அறிவுரையை விட தலைச்சிறந்த அறிவுரை தரணியில் கிடையாது என்பதே இதற்குப் பொருள். தமிழில் “பாட்டி சொல்லே மந்திரம்” என்ற பழமொழி உள்ளது. அந்த பாட்டி ஒளவைப் பாட்டியாகவும் இருக்கலாம் அல்லது சீதாப்பாட்டியாகவும் (திருமதி. அப்புச்சாமி) இருக்கலாம்.

ஒளவை ஓதும் மந்திரத்திற்கும், கண்ணதாசன் பாடும் மந்திரத்திற்கும், உபநிசதம் கூறும் மந்திரத்திற்கும் வேறுபாடு இப்போது புரிந்திருக்குமே?

மாயஜாலம் புரிபவர்கள் மேடையில் தோன்றி தங்கள் திறமையை வெளிக்காட்டும் வியாபாரத் தந்திரமாக சில முழக்கங்கள் வைத்து இருப்பார்கள். “சூ! மந்திரக்காளி”யில் ஆரம்பித்து “ஓம் ரீம் ஜீம்” “ஜீ பூம்பா!” “abraka babra” வரை எத்தனையோ மந்திரங்கள் நமக்கு அத்துப்படியோ இல்லையோ நம் குழந்தைகளுக்கு அத்துப்படி. ஒவ்வொரு ‘மேஜிக் ஷோ’ நிகழ்ச்சியின் போதும் “Tell me the Magic Word” என்று குழந்தைகளை பார்த்துத்தானே அந்த மேஜிக் நிபுணர் கேட்கிறார்?

மாந்திரீகம் வேறு. மந்திரம் வேறு. முன்னது மாயம் சம்பந்தப்பட்டது, பின்னது மனது சம்பந்தப்பட்டது. மாய மந்திரத்தின் போலித்தன்மையை உணர்த்தவே “மந்திரம் கால்; மதி முக்கால்” என்ற பழமொழியை நம் முன்னோர்கள் அன்றே எழுதி வைத்தார்கள்.

“மந்திரவாதி மண்ட்ரக்” குறும்புச் சித்திரங்கள் எல்லாம் இன்று வந்ததுதானே? மாயஜாலக் கதைகளுக்கு முன்னோடிகள் என்றால் அராபியர்களைத்தான் சொல்ல வேண்டும். “1001 அராபிய இரவுகளை” மொழிபெயர்த்து இலக்கியமாக்கிய பெருமை மேலைநாட்டினரைச் சேரும்.

மந்திர விளக்கும், மந்திரக் கம்பளமும், மாயக்கண்ணாடியும் அவர்களின் கற்பனையில் உதித்ததுதானே? சாய்பாபாவையும், அசாருத்தீனையும் அறியாதவர்கள் கூட நம்மில் இருக்கக்கூடும். அலிபாபாவையும், அலாவுத்தீனையும் அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.

இன்றல்ல நேற்றல்ல, மூஸாநபி காலத்திலிருந்தே (Prophet Moses) மந்திரவாதிகள், மாயஜால வித்தை என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நெடுநாட்களாக என் மண்டையை குடையும் கேள்வி இது. மாந்திரீகத்திற்கும் எலுமிச்சைப்பழத்திற்கும் என்ன சம்பந்தம்? எத்தனையோ பழங்கள் இருக்கையில் இதை மட்டும் குறிப்பாக ஏன் இவர்கள் Trade Mark-ஆக தேர்ந்தெடுத்தார்கள்? சப்போட்டா பழத்தையோ, அன்னாசி பழத்தையோ வைத்து மந்திரம் செய்வதை கேள்வி பட்டிருக்கிறீர்களா? நம் வீட்டு வாசற்படியில் யாராவது ஒரு எலுமிச்சைப் பழத்தையும் ஒரு சிவப்பு மிளகாயையும் வைத்து விட்டுப் போனால் நமக்கு உதறல் எடுத்து விடுகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு தாரக மந்திரம் உண்டு. தொண்டர்களை தன் கட்சியின்பால் ஈர்ப்பதற்கு இந்த முழக்கங்கள்தான் முதலில் சென்று அவர்களை அடைகின்றன.

மந்திரம் இறைப்பற்றாளனை ஆன்மீக உலகுக்கு கொண்டு செல்லும் பயண அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. “The mind expands, deepens and widens and eventually dips into the essence of cosmic existence” என்று கூறுகிறார் ஒரு ஆங்கில அறிஞர்.

மனநிலையை ஒருமைப் படுத்தி சொல்லவொணா ஒரு அதிர்வலையை உண்டாக்கக் கூடிய ஒரு சக்தி மந்திரத்திற்கு உண்டு. மந்திரத்தின் மகிமையை வார்த்தையால் விவரிக்க முடியாது. உணரத்தான் முடியும்.

சூடு என்றால் என்னவென்றே அறியாத ஒரு குழந்தையிடம் “அந்த சட்டியைத் தொடாதே. அது சுடும்” என்று சொன்னால் அதனால் புரிந்துக் கொள்ள இயலுவதில்லை. என்றாவது ஒருநாள் கொதிக்கும் சட்டியைத் தொட்டு கையை உதறிக் கொள்ளும்போதுதான் சூட்டின் தாக்கத்தை அதனால் புரிந்துகொள்ள முடிகிறது. மந்திரமும் அப்படித்தான்.

பைபிளில் வரும் ஒரு வசனம் நம்மை ஈர்க்கிறது. “In the beginning was The word. And The Word was with God and The Word was God” – (The New Testament, Gospel of John)

அந்த வார்த்தை என்னவாக இருக்கக் கூடும்?

“உண்டாகுக” (குல்) என்று இறைவன் ஆணையிட்டதும் அண்ட சராசரங்கள் உருவானதாக திருக்குர்ஆன் சொல்கிறதே? அந்த வார்த்தைதானோ?

பரமபிதா, பரஞ்சோதி, மூலவன், அல்லாஹ் என்று அழைக்கப்படும் ஏக இறைவனின் மூல மந்திரத்தைத்தான் பைபிள் இப்படி குறிப்பிடுகின்றதோ?

இந்து சமயத்தின் நான்கு வேதங்களும் மந்திரத்தின் மகிமையைத்தான் போதிக்கின்றன. பெளத்த மதத்தின் அடிப்படை தத்துவமே மந்திரம்தான்.

சூஃபிகளும், துறவிகளும், இறைநேசர்களும் பரம்பொருளை தேடுதற்கு மந்திரத்தின் துணையைத்தான் நாடினார்கள். அதனை தியானம், ‘திக்ரு’, தவம் என்று வெவ்வேறு பெயரில் அழைத்தாலும் செயல் ஒன்றுதான்.

“உருளைகள்” என்ற தலைப்பில் ‘எழுத்துக்கூடம்’ என்ற யாஹூ குழுமத்தில் நானெழுதிய பின்வரும் கவிதையொன்று எனக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தது.

“தவசு மணி/ ருத்திராட்சம்/ ஜப மணி/  ஜப மாலை/ மிஸ்பாஹ்/  தஸ்பீஹ்/  ப்ரேயர் பீட்ஸ்/  ரோசரி/  பெயர்கள் வெவ்வேறு;/ நோக்கம் ஒன்றே!/ உருளைகள் – கனத்தை இலகுவாக்கி/, சுலபமாய் ஓட வைக்கிறதாம்/. இது நியூட்டன் விதி/. இந்த உருளைகள்/, மனிதனை இறைவன்பால் உருட்டி விடுகிறது/. முன்னது நியூட்டன் விதி/. பின்னது ஆன்மீகத் துதி.”/

தலாய் லாமா எழுதி ஜெஃப்ரி ஹாப்கின்ஸ் மொழிபெயர்த்த ‘காலச்சக்கர தந்திரம்’ (Kalachakra Tantra) என்ற நூலில் “மந்திரத்தின் துணையின்றி பெளத்த துறவி நிலையை அடையவே முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

ஏக இறைவனை அடைவதற்கு இஸ்லாம் ஒரு தாரக மந்திரத்தை போதித்திருக்கிறது. இஸ்லாத்தின் கோட்பாட்டின்படி ஆதி தீர்க்கதிரிசி முதல் இறுதி தீர்க்கதரிசிவரை ஒரே ஒரு தாரக மந்திரத்தைத்தான் போதித்து வந்திருக்கிறார்கள். அது “There is no God but Allah” என்பதே அது.

அல்லாஹ் என்பது முஸ்லீம்களின் பிரத்யேகக் கடவுள் என்பது பலரது தவறான எண்ணம். அல்லாஹ் என்றால் அரபு மொழியில் ஏக இறைவன் என்று பொருள். அரபுமொழி பேசும் கிருத்துவரும் சரி, யூதரும் சரி “இறைவன் நாடினால்” என்று சொல்வதற்கு “இன்ஷா அல்லாஹ்” என்றுதான் சொல்வார்கள். (தனக்கு பிடித்த வாக்கியம் இது என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அடிக்கடி கூறுவதுண்டு)

“God” என்று சொல்லுவதை விட அல்லாஹ் என்று சொல்லவே முஸ்லீம்கள் விரும்புவார்கள். காரணம் இஸ்லாத்தின் அடிப்படையில் இறைவனுக்கு ஆண்பால் பெண்பால் குறியீடு இல்லை. “God” என்பதற்கு “Goddess” என்ற பெண்பால் பதம் இருக்கிறது. God Mother, God Father என்ற வார்த்தைகளும் உண்டு. இறைவன் யாரையும் பெறவும் இல்லை, பெறப்படவும் இல்லை என்று கூறுகிறது இஸ்லாம்.

“நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி” – அவனுக்கு ஈடு இணையில்லை (Yajurveda 32:3) [Yajurveda by Devi Chand M.A. page 377]

“நா கஷ்ய கஸ்ஸிஜ் ஜனித நா கந்திப்பாஹ்” – அவனுக்கு பெற்றொரும் இல்லை, மேலோனும் இல்லை (Svetasvatara Upanishad 6: 9) [The Principal Upanishad by S. Radhakrishnan page 745] [Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page 263.]

வேதங்களிலேயே மிகப் பழமையானதாகக் கருதப்படும் ரிக்வேதம் இவ்வாறு கூறுகிறது. “இறைஞானிகள் ஓரிறைவனை பல பெயர்களால் அழைக்கிறார்கள்”. (ரிக்வேதம் 1:164:46)

ரிக்வேதத்தில் (Book II hymn 1 verse 3) இந்துமதம் அந்த இணையிலா ஏகனை ‘பிரம்மா’ என்றழைக்கிறது. பிரம்மா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு Creator, படைப்பாளி, அரபு மொழியில் காலிக் (Khaaliq) என்று பொருள்.

மற்றொரு இடத்தில் ‘விஷ்ணு’ என்ற அடைமொழியில் இறைவனை வேதம் அழைக்கிறது. விஷ்ணு என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு Sustainer, தாங்குபவன், நிலைநிறுத்துபவன். அரபு மொழியில் ‘ரப்’ என்று பொருள்)

அற்புதத் தன்மைகள், இறைப்பண்பு கொண்ட ஒரு சக்தியை பலப்பல பெயர்களிலே அழைப்பது சிறப்புதானே? இஸ்லாத்திலே 99 அழகிய திருநாமங்களைக் (அஸ்மாவுல் ஹுஸ்னா) கொண்டு அழைக்கின்றார்கள்.

ஒவ்வொரு முஸ்லீமுடைய இறுதி ஆசை என்னவெனில் அவனது உயிர் பிரியும்போது “லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற வேத மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.

வேத மந்திரங்களில் நாம் அறியாத அருஞ்சொற்பொருள்கள் ஆயிரம் உள்ளன. ஆராய்ந்தால் மந்திரத்தின் மகிமைகள் ஒவ்வொன்றாய் நமக்கு புரிய வரும்.

சித்தர்களில் ஒருவரான சிவ வாக்கியாரின் வரிகளை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகிறது. மந்திரம் பற்றிய அவரது கருத்தினை கவனியுங்கள்

“நட்ட கல்லை தெய்வ மென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணுமொ ணென்று சொல்லும் மந்திரங்க ளேதடா!
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளி ருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

ஒருவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு மந்திரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மாணவனுக்கு டாக்டர் ஆக வேண்டுமென்ற பேராவல் இருக்கின்றதென்றால் அதுவே அவனது தாரக மந்திரமாக இருத்தல் வேண்டும்.

பெரியோர்களிடம் ஆசி பெறுகையில் “நீ நல்லா இரு” என்று கூறுவார்களே அந்த மந்திர வார்த்தைக்கு ஈடு இணை ஏது?

அசரீரி வெளியிலிருந்து உள்ளே கேட்கும், மந்திரம் உள்ளிலிருந்து வெளியே கேட்கும். மந்திரம் மனதுக்குள் மின்சாரம் பாய்ச்சவல்லது. மந்திரம் ஆற்றலை பெருக்கக் கூடியது. அது பிரார்த்தனையின் கிரியாவூக்கி. அலைபாயும் மனதை ஒன்றுபடுத்தும் குழியாடி. ஆன்மீக பவனியின் பல்லாக்கு. அதற்கு எடையில்லை. ஆனாலும் அது உச்சரிப்பவனை சுமந்துச் செல்கிறது. இறக்கைகள் இல்லாமலேயே உயரப் பறக்கிறது. உள்ளத்தை உருக்குகிறது, ஒத்தடம் கொடுக்கிறது. உசுப்பியும் விடுகிறது. மந்திரம் உள்ளத்தை கழுவும் சவுக்காரம். அகற்றிடும் அகங்காரம்.

மந்திரங்களை போதிக்காத மதங்களோ மார்க்கங்களோ உலகில் இருக்க முடியாது. மந்திரங்களை பரிகசிக்கும் நாத்திகக் கொள்கை உடையவர்கள் கூட மந்திரங்களை கூறத்தான் செய்கிறார்கள். “என்னய்யா உளறுகிறீர்?” என்கிறீர்கள். அப்படித்தானே?

“கடவுள் இல்லை. இல்லவே இல்லை. கடவுளை நம்புபவன் காட்டு மிராண்டி” என்ற அவர்களது தாரக மந்திரமும் ஒரு மந்திரம்தானே?

கொட்டாவி

Yawning

நன்றி : திண்ணை / Friday January 25, 2008

– அப்துல் கையூம்

திண்ணையில் வெளிவரும் என் கட்டுரைகளை படித்து விட்டு பெண் வாசகி ஒருவர் (என் நண்பரின் மனைவியும் கூட) தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

“தும்மலை பத்தியெல்லாம் எழுதுறீங்களே? கொட்டாவியைப் பத்தி எழுதுனா என்ன?”

‘இது என்னடா இது வம்பாப்போச்சு’ என்று நினைத்துக் கொண்டேன். “மூக்கு” என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த நகைச்சுவைக் கட்டுரையில் தும்மலைப் பற்றி ஓரிரண்டு வரிகள் சேர்த்திருந்தது என்னவோ உண்மைதான்.

அதுக்காக காற்று பிரிவதற்கெல்லாம் கட்டுரை எழுத ஆரம்பித்தால் நம் கதை கந்தலாக ஆகிவிடாதா?

நல்ல ஒரு சங்கீத வித்வானாக ஆசைப்படும் ஒரு இசைக் கலைஞனை மார்கழி மாசத்துக்கு தெருவில் பாடிக்கொண்டு போகும் பஜனை கோஷ்டியாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறதே?

உங்க சப்ஜெக்ட்டுலே இன்னும் கொஞ்ச Depth வேணும் என்று அதிருப்திபடும் நண்பர் சலீம் போன்றவர்கள் தும்மல், விக்கல், கொட்டாவி, ஏப்பம் என்று நான் எழுதிக் கொண்டே போனால் ஏகத்துக்கும் கடுப்பாகி விடுவார்கள்.

ஒருக்கால் ஆழ்கடலில் வாழும் மீன்வகைகளைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினால், “ஆஹா.. இதுலே பயங்கர Depth இருக்கிறதே!” என்று சலீம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவாரோ என்னவோ தெரியாது.

இப்படியே கண் காது மூக்கு என்ற ரீதியில் போய்க் கொண்டிருந்தால் வசூல்ராசா எம்.பி.பி.எஸ். பாணியில் படிக்காமலேயே நாமும் ஒரு E.N.T. ஸ்பெஷலிஸ்ட் ஆகி விடலாமே என்ற எண்ணம் கூட தோன்றியது.

அந்த பெண் வாசகி தும்மலைப் பற்றி எழுதுங்கள் என்று ஆலோசனையை கூறியதோடு நிற்காமல் “குமரிப் பொண்ணு தனியாப் போனாலும் கொட்டாவி மட்டும் தனியாப் போவாதாம்” என்ற பழமொழியை வேறு பல்லவி மாதிரி எடுத்துக் கொடுத்தார். (கண்ட கண்ட விஷயத்துக்கெல்லாம் குமரிப் பெண்களை வம்புக்கிழுத்து வேடிக்கைப் பார்ப்பது இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.)

வாசகி, பதினாறு வயதினிலே வரும் குருவம்மா போன்று பழமொழிகளை சரளமாய் எடுத்து விடுவதில் வல்லவர். கொட்டாவி – ஒரு நல்ல ஆய்பொருள்தான். எனக்கு ‘பேய்க்கு கொமஞ்சான் (சாம்பிராணி) இட்டது போல்’ ஆகிவிட்டது. (இந்த பழமொழி உபயமும் அவர்தான்.)

கொட்டாவி தனியாக போவாதென்பது அனுபவத்தில் கண்ட உண்மை. ஆன்மீக கூட்டமொன்று நடக்கையில், சரி பரிசோதித்துத்தான் பார்ப்போமே என்று கொட்டாவி விட்டுப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்? என்னைப் பின்பற்றி ஒரு ஐந்து பேராவது ‘ரிலே ரேஸ்’ போன்று தொடர்ச்சியாக கொட்டாவி விட்டிருப்பார்கள். (எத்தனைப் பேர் அவரது ஆன்மீக அறிவுரையை பின்பற்றினார்கள் என்று சரியாகத் தெரியவில்லை)

கிருஷ்ண பகவான் வாயைத் திறந்து காட்டியபோது Google Earth-ல் தெரிவதுபோல் உலகமே தெரிந்ததாம். என் பக்கத்திலிருந்தவர் ‘ஆ’ வென்று வாய்ப் பிளந்த போது காரை படிந்திருந்த கடவாய்ப் பல்லில் பூசியிருந்த சிமெண்ட் உட்பட காட்சி தந்தது. நான் இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தால் ‘சங்கர் சிமெண்ட்’ ISI முத்திரை உட்பட தெளிவாய் தெரிந்திருக்கும்.

பிறர் கொட்டாவி விடுவதை நான் ரசனையோடு லயித்துப் பார்ப்பதுண்டு. “ஏன்யா! எதை எதை ரசிப்பது என்ற விவஸ்தையே கிடையாதா?” என்று நீங்கள் அங்கலாய்ப்பது எனக்கு நன்றாக புரிகிறது. ‘எதார்த்தவாதி வெகுசன விரோதி’ என்ற பழமொழியை எனக்காகத்தான் எழுதி வைத்தார்கள் போலும்.

மோவாயை உயர்த்தி, மூக்கை விடைத்து, ‘ஆ’வென்று வாயைப் பிளந்து, தாடையை தாழ்த்தி, அஷ்ட கோணலாய் இழுத்து, ஒரு கையால் சற்றே மூடி மறைத்து, ஒரு மெல்லிய முனகலுடன் ஒருவன் கொட்டாவியை பிரசவிக்கும் போது ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே’ என்று பாடும் அளவுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

தங்கப்பல் கட்டியிருப்பவர்கள் கொட்டாவி விடுவதை பார்க்கையில் கோலார் தங்கவயலை தரிசித்ததைப்போல் ஒரு பிரமிப்பு. சில ஜென்மங்கள் கொட்டாவி விட்டே சுற்றியிருக்கும் பொருட்களை அதிர்வுறச் செய்வார்கள். இன்னும் சிலர் ஆகாயத்தில் பறக்கும் வானூர்திகளை உள்ளிழுத்துக் கொள்ளும் ‘பெர்முடா முக்கோண’த்தைப் போல அட்டகாசமாக கொட்டாவி விடுவார்கள். (அச்சமயத்தில் நாம் சற்று தள்ளி நிற்பது உசிதம்)

என் பள்ளித் தோழன் பட்டாபி எப்பொழுதும் கொட்டாவி விட்ட வண்ணம் இருப்பான். அவனுக்கு வாத்தியார் வைத்த பெயர் ‘கொட்டாவி பட்டாபி’. சாதாரணமாக மாணவர்கள்தான் வாத்தியாருக்கு பட்டப்பெயர் வைப்பார்கள்.

இவர் வைக்காமல் என்ன செய்வார்? “For every action, there is an equal and opposite reaction” என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை எங்கள் மண்டையில் ஏற வைப்பதற்காக, சுவற்றின் மீது பந்தை வீசி மனுஷன் கஷ்டப்பட்டு எகிறி எகிறி பிடிக்கும் நேரத்தில் இவன் பாட்டுக்கு ‘ஹாய்..யாக’ கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தால் கடுப்பாக மாட்டாரா?

கொட்டாவி பட்டாபியை எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு நான் சந்திக்க நேர்ந்தது. துபாயில் பிஸினஸ் செய்வதாகச் சொன்னான். பரவாயில்லையே! கொட்டாவி விட்டே இவ்வளவு பெரிய ஆளாகி விட்டானே என்று வியந்துப் போனேன்.

ஆண்டாண்டு காலமாய் கொட்டாவி பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கொட்டாவி எதனால் ஏற்படுகின்றது என்ற கேள்விக்கு உருப்படியான பதிலை இதுவரை யாருமே தரவில்லை.

“ஆ’- ன்னு வாயைப் பொளந்து கொட்டாயி விடுறோமே? அதுக்கு பின்னாலே இவ்ளோ மேட்டரு கீதா’ன்னு நீங்களே மூக்கின் மீது விரலை வைப்பீர்கள்.

இந்த விஞ்ஞானிகளை நினைத்தாலே எனக்கு பற்றிக் கொண்டு வருகிறது. பூமி தட்டையாக இருக்கிறது என்று முதலில் சொன்னார்கள். பிறகு பூமி உருண்டை வடிவம் என்றார்கள். இப்பொழுது “சாரி.. சாரி நாங்க மிஸ்டேக்கா சொல்லிப்புட்டோம். பூமி முட்டை வடிவத்துலே இருக்குதுங்க” என்று மழுப்புகிறார்கள்.

“அவ்ளோ பெரிய விஷயத்தையெல்லாம் கண்டு புடிச்சு சொல்லுறீங்க. ஆனா இந்த பிஸ்கோத்து.. கொட்டாவி விஷயத்தெ சொல்ல மாட்டேங்கறீங்க. ஏங்க?” என்று கேட்டு அவர்களை ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்’ ஆக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு சிலநேரம் தோன்றும்.

ஓசோன் ஓட்டையின் இரகசியத்தைக் கூட அறிந்து கொள்ள முடிகிறது. நம் வாய் பிளக்கும் ஓட்டை இன்னும் மர்மமாகவே இருக்கிறது. பூஜ்யத்தை கண்டுபிடித்த நம் முன்னோர்கள்கூட இந்த பூஜ்யத்தை விட்டு வைத்திருப்பது ஆச்சரியம்தான்.

“எட்டாத பழத்திற்கு கொட்டாவி” என்பது வழக்கில் வந்த சொற்றொடர். கொட்டாவி என்பது கிட்டாத பொருளுக்காக விடும் ஏக்கப் பெருமூச்சு என்ற கருத்தில் இங்கே கையாளப்பட்டிருக்கிறது. விஞ்ஞான ரீதியில் இந்த வியாக்யானம் பொருந்தாது.

‘கெட்ட ஆவி’தான் உருமாறி கொட்டாவி என்று ஆகி விட்டதோ?. மக்கள் தொலைக்காட்சியில் வரும் அண்ணன் நன்னன்தான் இது போன்ற சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வேண்டும். ஆவியைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனும், மீடியம் சுந்தர்ராஜனும் இந்த ஆவியையும் கவனத்தில் கொள்வார்களாக.

கருவில் இருக்கும் குழந்தையின் நுரையீரலில் ஒருவித திரவம் சுரக்கிறது. இந்த திரவம் சிறுநீருடன் சேர்ந்து அம்னியோடிக் திரவத்தை உருவாக்குகிறது. இந்த திரவம் நுரையீரலை விட்டு வெளியேறாவிட்டால் நுரையீரல் பாதிக்கப்படும். அப்படி வெளியேற்றப்படாத குழந்தைகள் பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் பிறக்கும். கருவில் வளர்ந்த காலப் பழக்கத்தின் மிச்ச மீதியாகவே கொட்டாவி இருக்கிறது. அதற்கு வேறு காரணம் ஏதுமில்லை என்று அமெரிக்க டாக்டர்கள் கூறுகிறார்கள்.

இது உண்மையென்றால் நம் முன்னோர்களை தீர்க்கதரிசிகள் என்றுதான் சொல்லவேண்டும். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ என்று அவர்கள் சொன்னார்களே? கருப்பையை தொட்டில் என்று சூசகமாய் சொல்யிருக்கலாம் அல்லவா?

கொட்டாவி என்பது நமது மூளைக்கு ஓய்வு தேவை என்பதன் மணியடிப்பா?, நம்மை சுறுசுறுப்பாக்குவதற்காக உள்ள அனிச்சை செயலா? குறிப்பிட்ட கால இடைவெளியில் நுரையீரல் மற்றும் ரத்த குழாய்களில் பிராணவாயுவை மாற்றுகின்ற செயலா? மூளையானது நம் உடலில் பிராணவாயு குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து முடுக்கிவிடும் செயல்பாடா? மூளை மண்டலம் பிரகடனம் செய்யும் கவன ஈர்ப்புத் தீர்மானமா? ஊஹும் .. .. சொல்லத் தெரியவில்லை.

கொட்டாவி – மூளையை குளிர்விக்க தேகம் செய்யும் யாகம் என்பது அமெரிக்க உளவியல் நிபுணர் ஆண்ட்ரூ காலப்பின் கருத்து. (Evolutionary Psychology, vol 5, p 92).

கொட்டாவிக்கும் நம் இரத்த ஓட்டத்தில் இருக்கும் ஆக்ஸிஜன், கார்பம் டைஆக்சைடு மட்டத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. தயவு செய்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் என்கிறார்கள் வேறு சில விஞ்ஞானிகள்.

மற்றொரு சாரார் காதுக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள நரம்பு வழிப்பாதையும் அதற்குரிய மூளையின் பகுதியும்தான் கொட்டாவிக்குக் காரணமாகிறது என்கிறார்கள்.

உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி வருகிறது என்கிறார்கள் சிலர். இதனை ஏற்றுக் கொள்வதாய் வைத்துக் கொள்வோம்

ஆனால் ஒலிம்பிக் வீரர்கள் பந்தயத்திற்கு முன்னர் ஏன் கொட்டாவி விடுகிறார்கள் என்று புரியவில்லை. சோர்வாக இருந்தால் தோற்றுப் போய் விட மாட்டார்களா? அப்புறம் அவர்கள் பிரதிநிதியாய் போன நாட்டிற்காக ஒரு டீ கப் கூட வாங்கி வர முடியாதே?

விண்குடை வீரர்களில் (Paratroopers) அனேகம் பேர் வானிலிருந்து குதிப்பதற்கு முன் கொட்டாவி விடுகிறார்கள் என்கிறார் மேரிலாண்ட் பல்கலைக் கழக பேராசிரியர் ராபர்ட் புரொவைன்.

கொட்டாவி அதிக பட்சம் ஆறு வினாடிகள் நீடிக்கிறது. இதயத் துடிப்பை 30 சதவிகிதம் கூட்டுகிறது. அதுமட்டுமின்றி தோலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தி, தசையையும் இறுக்குகிறது என்று கூறுகிறது ஆராய்ச்சி.

இன்னுமொரு ஆராய்ச்சி கொட்டாவி நமது நுரையீரலில் உள்ள எண்ணை போன்ற பொருளை உறைந்து விடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்று கூறுகிறார்கள். இந்தக் கூற்றுப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம்.

உடலை சீராக பேணுவதற்கு ஆலோசனைகள் கூறும் மருத்துவர்கள் “உடற்பயிற்சி செய்யுங்கள்”, “நடை பயிலுங்கள்”, “யோகா செய்யுங்கள்” என்று அறிவுரை சொல்கிறார்களே தவிர “தெனக்கும் நன்னா கொட்டாவி விடுங்கோ” என்று பரிந்துரைப்பதிலையே. ஏன்?

கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். விடாமல் என்ன செய்யும்? தொலைக்காட்சி சானல்கள் – சுட்டி டிவி, பேபி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க் போன்ற பொழுதுபோக்கு எதுவுமே இல்லாமல் ‘அக்கடான்னு இருட்டிலேயே கிட’ என்று சொன்னால் அதற்கு போரடிக்காதா?

தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உணர்ச்சிபூர்வமான ஒரு சொற்பொழிவு ஆற்றுகையில் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த 13 வயது சிறுவன் தாளமுடியாமல் கொட்டாவி விட்டும், நெட்டி முறித்தும், சொடக்கு விட்டும் தன் பொறுமையின்மையை வெளிக்காட்டியதை டேவிட் லெட்டர்மேன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப, அது உலகெங்கும் ஒரு பெரிய பரபரப்பை உண்டாகியது. (புஷ்ஷுடைய பேச்சு எந்தளவுக்கு சுவராஸ்யமாக இருந்தது என்று நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.

[ காணக் கிடைக்காத இந்த காட்சியை இன்னும் காணாதவர்கள் கீழ்க்கண்ட சுட்டியில் கண்டு மகிழலாம் http://www.youtube.com/watch?v=ggMFwdQkK2k ]

கொட்டாவி என்பது நமது மூதாதையர்கள் வாயைத் திறந்து, பற்களை வெளிக்காட்டி மற்றவர்களை பயமுறுத்துவதற்காக கையாண்ட ஆயுதம் என்ற ஒரு வாதமும் இருக்கிறது.

இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான வாதமாக எனக்கு படுகிறது.

மனிதர்கள் மட்டுமின்றி மீன்கள், பறவைகள், பாம்புகள், விலங்குகள் குறிப்பாக, பாலூட்டி இனங்கள் எல்லாமே கொட்டாவி விடுகின்றன. அதற்கு இவர்கள் என்ன விளக்கம் கொடுக்க போகிறார்கள்?

பூனை கொட்டாவி விடுவதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். அதற்கு என்ன மாதிரி போரடிக்கிறதோ யார் கண்டது? யாகவ முனிவர் உயிரோடு இருந்தாலாவது “பூனை பாஷையை கொஞ்சம் மொழிபெயர்த்துச் சொல்லுங்க அய்யா” என்று வேண்டுகோள் விடுத்திருக்கலாம்.

1980-களின் பிற்பகுதிகளில் எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சோதனை செய்திருக்கிறார்கள். பாவம் இந்த எலிகள்! என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. ஆ.. ஊ.. வென்றால் எலிகளைப் பிடித்து பலிகடாவாக்கி விடுகிறார்கள். எலிகள் அதிகாலையில் (படுக்கையை விட்டு) எழுந்திருப்பதற்கு முன்பும், பசியாக இருக்கும் போதும் கொட்டாவி விடுகிறதாம். (நானும் பெட்காபிக்கு முன்பு ஜாலியாக கொட்டாவி விடுவதுண்டு)

ஆபத்தான கொட்டாவி காண்டாமிருகத்தின் கொட்டாவிதான்! அது கொட்டாவி விட்டால் வேறு எந்த விலங்கையாவது தாக்கப் போகிறது என அர்த்தம்.

ஜப்பானிலுள்ள கியோட்டோ பல்கலைக் கழகத்தில் மனிதக் குரங்குகள் கொட்டாவி விடும் வீடியோ படத்தை மனிதக் குரங்குகளிடம் (ஆறு பெருசுகள், மூன்று குட்டிகள்) போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அதை பார்த்த சற்று நேரத்திற்குள் இரண்டு குரங்குகள் அம்சமாக கொட்டாவி விட ஆரம்பித்து விட்டன.

“அப்ப டார்வின் அண்ணா சொன்னது கரிக்ட்டுதான். குரங்குதான் நமக்கு முப்பாட்டன்” என்ற அவசர முடிவுக்கு வந்து விடாதீர்கள். டார்வின் விட்டது ‘உடான்ஸ்’ என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இன்றைய விஞ்ஞானிகள் எடுத்து வைக்கிறார்கள். அதை இன்னொருநாள் வைத்துக் கொள்ளலாம்.

கிட்டத்தட்ட 55 சதவிகிதம் மனிதர்கள் ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து மற்றவர் விடுகிறார்கள். பார்த்துதான் விட வேண்டும் என்பதில்லை. பார்க்காமலேயும் விடலாம்

கொட்டாவி விடும் சப்தத்தை ஒலிப்பதிவு செய்து, அதை கண்பார்வையற்ற அன்பர்களை கேட்க வைத்தார்கள். என்ன ஆச்சரியம்? கொட்டாவி சப்தத்தைக் கேட்டதுமே இவர்களில் சிலருக்கு தானாகவே கொட்டாவி வந்து விட்டது.

கொட்டாவி ‘ஒட்டுவார் ஒட்டியா’ என்று கெட்டால் அதற்கும் சரியான விளக்கம் இல்லை. எல்லோரையும் அது தொற்றிக் கொள்வதில்லையே?

கொட்டாவி பற்றிய நினைப்பே ஒருவனுக்கு கொட்டாவியை வரவழைத்து விடும். கொட்டாவி பற்றிய இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது ஒருமுறையாவது நிச்சயம் கொட்டாவி விட்டிருப்பீர்கள். இதில் வெட்கப் படுவதற்கு ஒன்றுமில்லை.

நம் மூளையின் செயல்பாடுகள் பலவற்றை நம்மால் இன்னும் முழுமையாக அறிந்துக் கொள்ள முடியவில்லை. கொட்டாவியும் நம் மூளையின் இன்னும் கண்டுபிடிக்காத ஏதாவதொரு பகுதியின் செயல்பாடாக இருக்கக் கூடும்.

ஒருவரைப் பார்த்து கொட்டாவி விடும் மற்றவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அவருடைய மூளைக்கு எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறது; அதன் செயல்பாடுகள் அபாரமாக இருக்கிறது என்று அர்த்தம்.

கொட்டாவி பட்டாபி பாடத்தை கவனிக்காமலேயே எப்படி இவ்வளவு பெரிய பிஸினஸ்மேன் ஆனான் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?

நவீன காலத்தில் நம் மக்கள் அடிக்கடி ‘ஓ’ போடு என்று சொல்கிறார்களே? அதற்கு ஜாலியாக கொட்டாவி விடுங்கள் என்ற அர்த்தம்தானோ?

இதுவரை கொட்டாவி பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த கட்டுரையை படித்த பிறகு நிறைய ‘ஓ’ போடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இப்பொழுது எனக்கும் கொட்டாவி வர, எழுதுவதை நிறுத்தி விட்டு மனம் போன போக்கில் ‘ஓ’ வென்று கொட்டாவி விட்டு சுகத்தை அனுபவித்துக் கொண்டேன்.

மூக்கு

மூக்கு

நன்றி : திண்ணை / Thursday January 10, 2008

– அப்துல் கையூம்

‘ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன்

“ஹலோ யார் பேசறது?” – உரக்க கத்தினேன்

“நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்”

மூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா? நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்கு ஜலதோஷம் வந்து, நான் மூக்கால் பேசினால், என் குரல் எப்படி இருக்குமோ; அதே குரல். சந்தேகமேயில்லை என் மூக்கேதான்.

“என்ன விஷயம்?” – வியப்பு மேலிட வினவினேன்.

“சதா மூக்கை சிந்துவதை நிறுத்திவிட்டு என்னைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார். என் மகிமை உனக்கு புரியும். அதை நாலு பேருக்கு எடுத்துக் கூறு” அசரீரி மாதிரி அறிவித்து விட்டு ரிசீவரை ‘டக்’கென்று வைத்து விட்டது மூக்கு.

முகத்தை அஷ்டகோணத்தில் சுளித்து, பார்வையை சற்று தாழ்த்தி, என் மூக்கு நுனியை எட்டிப் பார்த்தேன். மூக்கு சிவந்திருந்தது.

மூக்கு, எட்டப்பன் பரம்பரையைச் சேர்ந்தது. கோபத்தையும், பதஷ்டத்தையும் மூக்கானது விடைத்தும், புடைத்தும், துடித்தும், சிவந்தும் காட்டிக் கொடுத்து விடும். கூடவேயிருந்து பழகும் நாக்கை சிற்சமயம் பல் கடித்து விடுகிறதே; அதுபோலத்தான் இதுவும்.

ஆச்சரியம் ஏற்படும்போது விரல்களுக்கு மூக்கு மானசீகமான அழைப்பு விடும். தானகவே மூக்கின் மேல் விரல் சென்று வீற்றிருக்கும். “அடி ! ஆத்தி?” என்று தென் மாவட்டத்து பெண்கள் வியக்கும் போதாகட்டும், “அடி ! ஆவுக்கெச்சேனோ?” என்ற வட்டார ராகத்தோடு எங்களூரில் தாய்க்குலம் ஆச்சரியத் தொனி எழுப்பும்போதாகட்டும், இயல்பாகவே அவர்களின் மூக்கின் மீது ஆள்காட்டி விரலானது கேள்விக்குறியாய் வளைந்து விடுவது கண்கூடு.

மூக்குதான் மூச்சை இழுக்கிறது; மூச்சை விடுகிறது.

சற்று நேரம் மூச்சை விட மறந்து பாருங்கள். “ஏன் மறந்து விட்டீர்கள்?” என்ற கேள்வியை யாராவது எழுப்பினால் கூட அதற்கு பதில் சொல்லும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன்? நேராகவே சொல்லி விடுகின்றேனே? மரணம் வந்து விடும்.

இப்போது மூக்கின் மகிமை உங்களுக்கு புரியத் தொடங்கியிருக்குமே?

கண்ணதாசன், இதயதாசன் என்ற புனைப்பெயரைப் போல, ஏன் யாரும் மூக்குதாசன் என்று புனைப்பெயர் வைத்துக் கொள்வதில்லை? மூக்கின் முக்கியத்துவத்தை முழுவதும் உணராததால் இருக்கலாம்.

“முத்துக்களோ கண்கள்; தித்திப்பதோ கன்னம்” என்று கவிஞர்கள் ஏனோ கண்ணைத்தான் அதிகம் புகழ்ந்து பாடுகிறார்கள். முத்துப்போன்ற கண்கள் என்கிறார்களே? அந்த முத்து எப்படி கிடைத்தது என்று அவர்கள் சற்று யோசித்துப் பார்க்கட்டும்.

மூக்கைப் பிடித்து, மூச்சை அடக்கி, ஆழ்கடலில் இறங்கி தேடியதில் கிடைத்ததுதான் அந்த முத்து. கண்களைப் பாடாதவன் கவிஞனாக முடியாது என்றாகி விட்டது.

புகழ்வதற்கு கண்; கேலி செய்வதற்கு மூக்கு – இது அநியாயம் அன்றோ?

பீரங்கி மூக்கு, கிளி மூக்கு, சப்பை மூக்கு, குடை மிளகாய் மூக்கு, தவக்களை மூக்கு என கிண்டல் செய்ய மூக்குதான் உகந்தது என்று நினைக்கிறார்கள் போலும். வாழ்நாள் முழுவதும் மூச்சிழுத்து நம்மை வாழ வைத்த உறுப்புக்கு காட்டும் மரியாதை இதுதானா?

மற்ற கவிஞர்கள் போலல்லாது, கண்ணதாசனிடம் எனக்குப் பிடித்தது, மூக்கையும் சேர்த்து பாடலில் எழுதியதுதான். “அடி ராக்கு, என் மூக்கு, என் கண்ணு. என் பல்லு ..என் ராஜாயீ..” என்றெழுதிய அவரை வாழ்த்துகிறது மனம்.

‘கண்ணே’ என்று காதலியை கொஞ்சுபவர்கள், ‘மூக்கே’ என்று கொஞ்சுவதில்லையே.. ஏன்?

சிறுவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது கூட “உன் மூக்கைப் பெயர்த்து விடுவேன்” என்றுதான் சவடால் விடுகிறார்கள். மூக்கு என்றால் அவர்களுக்கு அவ்வளவு இளப்பமா? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியா?

“மனிதனின் புற உறுப்புகளில் சிறந்தது எது?” என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். கண், கை, கால் என்று எல்லாவற்றையும் சொல்வார்கள்; மூக்கைத் தவிர.

மூக்கை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. “கண்தானம் செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுப்பார்கள். “இறந்த பிறகு நான் வேண்டுமானால் மூக்கை தானம் செய்கிறேனே” என்று சொல்லிப் பாருங்கள்.

“போயா நீயும் உன் மூக்கும்” என்று விரட்டியடிப்பார்கள். இந்த நவீன காலத்தில் எந்தெந்த உறுப்பையோ காப்பீடு செய்கிறார்கள். மூக்கை மட்டும் யாரும் இன்சூர் செய்வதில்லை.

ஒருக்கால் நடிகை ஸ்ரீதேவி செய்திருக்கலாம்,. அவர் மூக்கினை ஆபரேஷன் செய்த பிறகுதான் இந்திப் படவுலகில் ‘ஓஹோ’ என்று உச்சத்தை அடைந்தார் என்று சொல்கிறார்கள்.

சிலருக்கு இசை பிடிக்கும். சிலருக்கு இலக்கியம் பிடிக்கும். இதெல்லாம் ஒருவருக்கு இன்பம் பயக்கக் கூடியது, ஜலதோஷம் மட்டும் யாருக்கும் பிடிக்கவே கூடாது. பிடித்தால் அன்றைய தினம் அவர் பாடு திண்டாட்டம்தான். ‘சளி பிடித்தால் சனியன் பிடித்த மாதிரி’ என்று சும்மாவா சொல்வார்கள்?

முன்பெல்லாம் பாரதப் பெண்கள் மாத்திரம்தான் மூக்கு குத்திக் கொள்வார்கள். இப்பொழுது மற்ற நாட்டினரும் குத்துகிறார்கள். “என்ன எனக்கே காது குத்துகிறீரா?” என்று கேட்காதீர்கள். நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கண், காது, மூக்கு வைத்து எனக்கு பேசத் தெரியாது.

மேலை நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள், தூரக்கிழக்கு நாடுகளிலெல்லாம் நாகரிகம் என்ற பெயரில் மூக்குத்தி அணிய ஆரம்பித்து விட்டார்கள். மூக்கின் முக்கியத்துவம் நம்மவர்களுக்கு எப்பொழுதோ புரிந்து விட்டது. இப்பொழுதுதான் அவர்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.

இந்தியப் பெண்களிலே குறிப்பாக பாட்டியா (Bhatia) வகுப்பினர் அணியும் மூக்குத்தியை கவனித்தால் உங்களுக்குப் புரியும். ஒரு கேரட், இரண்டு கேரட், மூன்று கேரட் என்று எந்த அளவு பெரிய வைரத்தை மூக்குத்தியாக அணிகிறார்களோ அந்த அளவு அவர்களுடைய சமுதாய அந்தஸ்த்தை அது உயர்த்திக் காட்டும்.

தனக்கு வருகிற மனைவி ‘மூக்கும் முழி’யுமாக இருக்க வேண்டுமென்று ஒவ்வொருத்தனும் கனவு காண்கிறான். இங்கும் மூக்குதான் முன்னிலை வகிக்கிறது. என்ன முழிக்கிறீர்கள்? முழி பிறகுதான்.

“பெண் கிளி மாதிரி இருப்பாள்” என்று கல்யாணத் தரகர் கூறினால், பச்சை நிறத்தில் அவள் இருப்பாள், கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. நல்ல எடுப்பான மூக்கு என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கண்ணுக்கு அணிகின்ற கண்ணாடியை ‘மூக்கு கண்ணாடி’ என்றுதானே சொல்கிறோம்? மூக்கு அதனை தாங்கிப் பிடிப்பதால்தானே? குடும்பத்தை நீங்கள் தாங்கிப் பிடித்துப் பாருங்கள். ‘குடும்பத்தலைவன்’ என்று உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி.

ஓவியமானாலும் சிற்பமானாலும் அதனை தத்ரூபமாக வடிவமைக்க ஒரு கலைஞனுக்கு பெரிதும் உதவுவது மூக்குதான். குறும்புச்சித்திரம் வரைபவர்கள் மூக்கை சரியாக வரைந்துவிட்டு தலையையும் உடம்பையும் தாறுமாறாக வரைந்தால் கூட அது இன்னார்தான் என்று சரியாக நம்மால் ஊகித்து விட முடிகிறது.

ராஜாஜி, இந்திராகாந்தி, ஜிம்மி கார்ட்டர் – இவர்களை வரையுங்கள் என்று கார்ட்டூனிஸ்ட்களிடம் சொன்னால் அவர்களுக்கு அது தண்ணி பட்ட பாடு. அந்த பிரபலங்களின் வித்தியாசமான மூக்கு அவர்களின் வேலையை எளிதாக்கி விடும். (தமிழ்ப் பட நடிகர் நாசரை மறந்து விட்டேனே?)

மாட்டை அடக்க மூக்கணாங் கயிறு போடுகிறார்கள். மனம் போன போக்கில் சுற்றித் திரியும் இளஞனைப் பார்த்து “இவனுக்கு மூக்கணாங் கயிறு போட்டால்தான் வழிக்கு வருவான்” என்றால் “திருமணம் நடத்தி வைத்தால் திருந்தி விடுவான்” என்று அர்த்தம்.

நம் மூக்கில் ஒரு திரியை விட்டாலே நம்மால் தாக்கு பிடிக்க முடியவில்லை. “அச்சு.. பிச்சு..” என்று தும்முகிறோம். பாவம், அந்த மாடுகளின் மூக்கிலே மொத்த கயிற்றினை சொருகி. பாடாய்ப் படுத்துகிறார்கள் இந்த மனிதர்கள். (மேனகா காந்தியின் கவனத்திற்கு)

தும்முவது அபசகுனம் என்று எந்த பிரகஸ்பதி சொல்லிவிட்டு போனான் என்று தெரியவில்லை. அதுவே ஒரு சாஸ்திர சம்பிரதாயமாகி விட்டது.

“இன்று ஒரு முக்கியமான கச்சேரி. போகும் போதே இவன் தும்மி தொலஞ்சிட்டான். போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்” என்று திட்டித் தீர்த்து விடுவார் எங்க ஊர் சங்கீத வித்வான்.

கல்யாண வீட்டிலே தவில், நாதஸ்வரம் என்று காது சவ்வு கிழிந்து போகுமளவுக்கு ஒலி எழுப்புவது எதற்காகவென்று நினைக்கிறீர்கள்? யாராவது (அபசகுனமாய்?) தும்மித் தொலைத்தால் யார் காதிலும் விழுந்து விடக் கூடாதே என்ற நல்ல(?) எண்ணத்தில்தான்.

“தும்மலுக்காக யாராவது இவ்வளவு செலவு செய்வார்களா? போயா நீயும் உன் கண்டுபிடிப்பும்” என்று நீங்கள் உதாசீனம் செய்யக்கூடும். அதற்காக எனக்கு தும்மல் வந்தால் அதை நான் நிறுத்தப் போவதில்லை. (அச் .. .. .. ..சும்)

வாசற்படியில் நின்று தும்மக் கூடாதாம். புறப்படும்போது தும்மக் கூடாதாம். நல்ல காரியம் நடக்கும்போது தும்மக் கூடாதாம். பொருள் வாங்கும்போது தும்மக் கூடாதாம். (வேற எப்பத்தான்யா தும்முறது?)

நாசியில் திரி, மூக்குப் பொடி, துளசி, மகரந்த பொடி நுழைந்தாலோ அல்லது காற்றுத் துகள்களில் கலந்திருக்கும் அமிலங்களின் காரணத்தினாலோ மூக்கினுள் உறுத்தல் ஏற்பட்டு தானியக்கச் செயலாக தும்மல் வெளிப்படுகிறது.

தும்மினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்ற மூட நம்பிக்கை வேறு. தும்மலுக்கும், டெலிபதிக்கும் (Telepathy) எந்த தொடர்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

எனக்கு தெரிந்த கடைக்காரர் ஒருவர். கடைக்குள் புகுந்ததுமே மூக்கை உறிஞ்சுவார். “என்ன இது? ஏதோ மூச்சா ஸ்மெல் வருகிறதே?” என்பார். “சாம்பிராணியைப் போடு”, “ஊதுவத்தியை கொளுத்து”, “ரூம் ஸ்ப்ரே எடித்து அடி” என்று கடை ஊழியர்களைப் பார்த்து கட்டளை பறக்கும். நாளடைவில் எந்த ஒரு துர்நாற்றம் இல்லாதபோது கூட இதே பல்லவியை பாடுவது அவரது வழக்கமாகி விட்டது.

வாசனை என்று சொல்வதை விட நாற்றம் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தம். துரதிர்ஷ்டவசமாக நாற்றம் என்ற பதம் துர்நாற்றத்தை மட்டுமே குறிப்பதாக உருமாறி விட்டது. இதனை கலாச்சாரச் சிதைவு எனலாம்.

இயக்குனர்/நடிகர் சுந்தர் சி. யிடம் சென்று ‘உங்கள் மனைவியின் பெயர் நாற்றம்தானே (குஷ்பு)?” என்று சொல்லிப் பாருங்கள். மனுஷர் உங்களை பின்னி எடுத்து விடுவார்.

ஹாஸ்டலில் நாங்கள் தின்பண்டத்தை பிரித்தால் போதும். அடுத்த அறையிலிருக்கும் நகுதா “சும்மாத்தான் வந்தேன்” என்று ஆஜராகி விடுவான். எப்படித்தான் அவன் மூக்கில் வியர்க்கிறதோ? இரையைக் கண்டதும் கழுகின் மூக்கில் வியர்க்குமாம். (படித்து தெரிந்து கொண்டதுதான். நானே நேராகச் சென்று கழுகைப் பிடித்து, மூக்கைத் தடவி, சோதித்துப் பார்க்கவா முடியும்?)

மூக்குக்கு இருக்கும் மாபெரும் சக்தி – மோப்ப சக்தி. புலன் விசாரணையில் எத்தனையோ மர்மங்களின் முடிச்சை மோப்ப சக்தியினால் அவிழ்க்க முடிகிறதே? விலங்கினங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் அழகிய அருட்கொடை அது.

மோப்ப சக்தி நாய்க்கு மாத்திரமல்ல. எல்லா படைப்பினங்களுக்கும் இருக்கின்றன. இயற்கையின் விசித்திரத்தை தவறாக புரிந்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். பாம்பு பாலை உறிஞ்சிக் குடிக்கிறது என்பது சிலரது நம்பிக்கை.

இந்த அறியாமை இந்துக்களில் சிலருக்கு மட்டுமின்றி பிற மதத்தவரிடமும் பரவலாக காணப்படுகிறது. தமிழக – பாண்டிச்சேரி எல்லையில் வாஞ்சூர் என்ற சிற்றூர். மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன முஸ்லிம் பெண்கள் சிலர் அங்கு சென்று பாலையும் முட்டையையும் பாம்புக்கு வார்ப்பதைப் பார்க்க வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கும்.

இயற்கையிலேயே பாம்பின் நாக்கு பிளவு பட்டிருக்கும். பாம்பினால் உறிஞ்சிக் குடிக்க இயலாது. பாம்பு இரையை அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு அதற்கு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது. இன்னும் சற்று அசந்தால் “பாம்பு முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடும்” என்று கூட சரடு விடுவார்கள்.

பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதுதான் மெய். “பாம்பு பால் குடிக்கிறது” என்று கூறுவது வெறும் கட்டுக் கதை.

அநாவசியமாக மூக்கை நுழைப்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். மூக்கை நுழைப்பதால் சிலநேரம் வெற்றியையும் அடைய முடியும். ஓட்டப் பந்தயத்தின் இலக்கினை இருவர் ஒரே நேரத்தில் எட்டி விட்டதாக வைத்துக் கொள்வோம். வெற்றியை எப்படி நிர்ணயிப்பது? இன்றைய நவீன காலத்தில் கணினியின் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகிறார்கள். உருப்பதிவை கட்டம் கட்டமாக ஓட விட்டு யாருடைய மூக்கு முதலில் நுழைந்ததோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்.

வாகையை சூட்டித் தந்த மூக்குக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. தங்கப் பதக்கத்தை கழுத்து அணிந்துக் கொள்ளும். வெற்றிக் கோப்பையை கைகள் ஏந்திக் கொள்ளும். பயிற்சியாளரின் ‘சபாஷ் தட்டை’ முதுகு ஏற்றுக் கொள்ளும். ப்ரியமானவர்களின் ‘உம்மாவை’ கன்னம் ஏற்றுக் கொள்ளும். மூக்குக்கு – ஹி.. .. ஹி .. வெறும் நாமம்தான்.

ஓசியில் கிடைக்கிறதே என்று மூக்கு முட்டச் சாப்பிடுபவனை கண்டால் கோபம் வரும். ‘அவன் மூக்கை உடைத்தாலென்ன?’ என்று தோன்றும். வன்முறை – அடிதடியில் இறங்காமல் வாய்ப் பேச்சினாலேயே ஒருவனுடைய மூக்கை உடைக்க முடியும். அதுவொரு வசதிதானே?

அறிவு ஜீவிகளுக்குள் விவாதம் ஏற்பட்டு, வாய்ப் பேச்சு நீளும்போது ஒருவர் மற்றவர் மூக்கை உடைப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவையான நிகழ்ச்சிகளாக அமைந்து விடுவதுண்டு. அதனை ஆராய முற்பட்டால் ‘ரிப் வேன் விங்கிலி’ன் தாடி போன்று இதுவும் நீண்டு விடும்.

உயரத்திலிருந்து செங்குத்தாக கீழே விழும்போது ஆங்கிலத்தில் Nose Dive என்ற பதத்தை உபயோகப் படுத்துவார்கள். வளைந்த இடுக்கியை Nose Plier என்று அழைப்பார்கள். கொள்ளுப்பைக்கு Nose Bag என்று பெயர். அளவு கடந்த ஆர்வலருக்கோ Nosey Parker என்று பெயர். டால்பின்களில் ஒரு வகை பாட்டில் மூக்கு டால்பின்.

“உலகத்திலேயே மிகப்பெரிய மூக்கு உடையவர் யார்?” என்று நண்பர் பாண்டியிடம் புதிர் போட்டேன். பெக்கே.. பெக்கே.. என்று பேய் முழி முழித்தார். “அட.. நீர் தினமும் வழிபடும் பிள்ளையார்தானய்யா அது.” என்று புதிரை விடுவித்ததும் “இந்த சிம்பிள் விஷயம் இந்த மர மண்டைக்கு புரியாமல் போய் விட்டதே?” என்று நொந்துக் கொண்டார்.

முற்காலத்தில் நம்மவர்களிடையே மூக்குப் பொடி போடும் பழக்கம் பரவலாக இருந்து வந்தது. (Thank God) இப்பொழுது அது வெகுவாக குறைந்து விட்டது. “மனைவிக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளது. ஆகையால் எனக்கு விவாகரத்து வாங்கித் தர வேண்டும்” என்று கணவன் போட்ட ஒரு விசித்திர வழக்கை சமீபத்தில் பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது.

மூக்குப் பொடி போடுபவர்கள் மூக்கைத் துடைப்பதற்காகவே ஒரு கைக்குட்டையை கச்சிதமாக தைத்து வைத்திருப்பார்கள். ஒரு காலத்தில் வெள்ளை நிறத்தில் இருந்த அந்த துணியானது மரக்கலரில் உருமாறிப் போயிருக்கும். என்னைப் போன்று ‘குளோசப்பில்’ அந்த கண் காணா காட்சியை கண்டவர்களுக்குத்தான் அந்த அவஸ்தை புரியும்.

காரம், மணம், குணம் நிறைந்த மூக்குப் பொடி பெரும்பாலும் மட்டையில்தான் வரும். சிலபேர் மூக்குப்பொடி நிரப்பி வைப்பதற்காகவே வெள்ளியில் மூக்குப்பொடி டப்பா வைத்திருப்பார்கள். கண்ணுக்கு அழகூட்டும் மையே வெறும் தகர டப்பாவில் வசிக்கும்போது, கேடு விளைவிக்கும் இந்த பாழாய்ப் போன மூக்குப்பொடி மட்டும் ஆடம்பரமாக வெள்ளி டப்பாவுக்குள் வாசம் செய்கிறதே என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.

வாழ்க்கையின் யதார்த்தமும் அதுதானே? சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அரசியல்வாதிகளும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நயவஞ்சகர்களும் ஆடம்பர பங்களாவில் வசிப்பதில்லையா?

மூக்குப்பொடி பழக்கமுள்ள பிரபலங்களில் அறிஞர் அண்ணாத்துரை இங்கே குறிப்பிடத்தக்கவர். மேடையில் பேசுவதற்கு முன்னால் “சுர்ரென்று” ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு வந்து ‘மைக்’ முன் நின்றால் ‘காட்டச் சாட்டமாக’ அவருடைய பேச்சிலே ‘தூள்’ கிளம்பும்.

தமிழகத்தில் மூக்கறுப்பு போர் என்று ஒன்று நிகழ்ந்திருக்கிறது. கர்நாடக மன்னருக்கும், மதுரை மன்னருக்கும் நடந்த இந்தப் போரில் பிடிபட்ட வீரர்களின் மூக்கை அறுத்து மூட்டை மூட்டையாக மைசூருக்கு அனுப்பிவைத்ததாகச் சான்றுகளிருக்கின்றன. என்ன அநியாயம் இது? மூ(ர்)க்கத்தனமாக அல்லவா இருக்கிறது?

மூக்கு என்பது நம் முகத்தில் வெறும் அலங்காரத்துக்ககாக மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் சீனாவின் வடகிழக்கு நகரில் வசிக்கும் வாங்சுன்டாய் எனும் சாகஸ மனிதர் மூக்கில் கயிற்றைக் கட்டி, காரை 10 மீட்டர் தூரம் இழுத்துக் காண்பித்தாராம். தமிழ்நாட்டில் அவர் பிறந்திருந்தால் மூக்கையா அல்லது மூக்கையன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்திருப்பார்கள்.

ருஷ்ய எழுத்தாளரான கோகல், ‘மூக்கு’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். மலையாள மொழியில் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய ‘உலகப் பிரசித்திப் பெற்ற மூக்கு’ என்ற கதையை நாகூர் ரூமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதுபோலவே டக்ளஸ் ஆடமின் (Douglas Adam) கடைசி நூலில் (The Salmon of Doubt) இடம் பெற்றிருக்கும் மூக்கு பற்றிய கட்டுரை சுவராஸ்யம் நிறைந்தது.

யார் கண்டது? நாளை எனது ‘மூக்கையும்’ ஏதாவதொரு நோஸ்ட்ராடாமஸ் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கலாம். அமெரிக்காவில் இருக்கும் நண்பர் மூக்கு சுந்தர் அதற்கு பாராட்டு தெரிவிக்கலாம்.

இராமனைப் பார்த்ததும், காதல் கொண்டு, அவனிடத்தில் காமம் ஒழுகப் பேசிய சூர்ப்பனகை தண்டனையாக மூக்கு அறுபட்டாள் என்பது எல்லோரும் அறிந்ததே. சபையில் ஒருவன் அவமானப்பட்டால் ‘நன்றாக மூக்கறுபட்டான்’ என்று சொல்வது வழக்கமாகி விட்டது.

மூக்கோடு மூக்கு உரசி முகமண் கூறும் பழக்கம் அராபியர்களிடத்தில் மட்டுமின்றி வேறு சில நாட்டவரிடத்திலும் காண முடிகிறது.

“Chick Peas” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கொண்டைக்கடலையை என் மனைவி மூக்குக் கடலை என்றுதான் அழைக்கிறாள். நான் அவளுக்கு மூக்குத்தி வாங்கித்தர மறந்ததை அடிக்கடி இதன் மூலம் எனக்கு நினைவுறுத்துகிறாளா என்று தெரியவில்லை.

மாம்பழ வகைகளில் ஒன்று கிளி மூக்கு மாம்பழம். எங்களூர் பள்ளி வாத்தியார் ஒருவருக்கு மாணவர்கள் வைத்த பட்டப் பெயர் ‘மூக்கு நீட்டி சார்’.

நண்பர்களிடையே அரட்டை அடிக்கும்போது மதுரையைப் பற்றிய பேச்சை எடுத்துப் பாருங்கள். மதுரை மல்லி, மதுரை முனியாண்டி விலாஸ், மதுரை முத்து என்று ஆரம்பித்து கடைசியில் மதுரை மீனாட்சியம்மனின் சிவப்புக்கல் மூக்குத்தியில் போய் முடிந்துவிடும்

ஒருவன் ஜாலியாக தன் கைத்தடியைச் சுழற்றியவாறு சென்று கொண்டிருத்தானாம், அது இன்னொருத்தனின் மூக்கு நுனியில் பட்டு விட்டது. “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டதற்கு “என் கைத்தடியை சுழற்றுவதற்கு எனக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. அதை கேட்க நீ யார்?” என்று கேட்டானாம்.

“Your freedom ends; where my nose begins” – “உனது சுதந்திரம் என் மூக்கு நுனிவரையில்தான்”. இந்த பதிலானது இன்று எல்லோராலும் எடுத்தாளப்படும் பழமொழியாகி விட்டது.

“ஈராக் கலவரம் முதல் எய்ட்ஸ் ஒழிப்புவரை – சிந்தனையச் செலுத்த எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட்டு விட்டு வெறும் மூக்கைப் பற்றிப் பேசி எங்களுக்கும் ஜலதோஷம் பிடிக்க வைத்து விட்டீர்களே?” என்று நீங்கள் தும்மலாம்.

அமெரிக்கா ஈராக்கில் மூக்கை நுழைத்ததால்தானே பிரச்சினையே? ஒருவர் விஷயத்தில் மற்றவர் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே போதுமானது. உலகத்தில் பாதி பிரச்சினைக்கு மேல் தீர்வு கண்டு விடலாம். உலக நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கென போர்த்தளவாடங்கள் வாங்கும் பணத்தை ஏழைகளுக்குச் செலவிட்டால் போதும். பூமியில் பட்டினிச்சாவு அறவே ஒழிந்து விடும்.

கட்டுரையை முடித்து விட்டு என் நுனி நாக்கால் மூக்கு நுனியைத் தொட்டேன். மூக்கு சந்தோஷத்தால் சிவந்திருந்தது. அதற்கு புரிந்திருக்கும் என் நற்பணி.

ராக்போர்ட் சிட்டி

நன்றி : திண்ணை / Friday January 4, 2008

– அப்துல் கையூம்

ம்லைக்கோட்டை

1

அன்று ஆகஸ்ட் 14, 2007

ஓடிக் களைச்சுப் போயி, “புஸ்”ஸுன்னு பெருமூச்சு விட்டு, நுரை தள்ளியபடி வந்து நின்னுச்சு நான் வந்த ரயிலு. திருச்சி ஜங்ஷனுலே காலடி எடுத்து வச்சதுமே விவரிக்க முடியாத ஒரு குஷி. திருச்சின்னு சொன்னாலே எனக்கோர் ஈர்ப்பு. ஒரு பந்தபாசம். என் தாய் பிறந்த ஊர். அதனாலோ என்னவோ. வெளிநாட்டுலே திருச்சிக்காரங்களை கண்டா ஓடிப் போயி கட்டிப் புடிச்சுக்கலாமேன்னு தோணும். ஏன்னு கேட்டா சொல்லத் தெரியாது.

“சரியான கந்தக பூமி. அதப்போயி புடிச்சிருக்குன்னு சொல்லுறியே?. கிறுக்குப் பயடா நீ ?” திருச்சியோட மகிமை தெரியாதவங்கதான் இப்படி நாக்கிலே நரம்பிலாம பேசுவாங்க.

இந்த முறை இந்தியா வந்ததுக்கு ஒரு இனிமையான அனுபவம். அலுமினி அஸோசியேஷனிலேந்து வந்த அழைப்பிதழை ஒருதரம் பாசத்தோட பார்த்துக்கிட்டேன். நாளைக்குத்தான் அந்த நிகழ்ச்சி. ஓல்ட் பாய்ஸ் எல்லாரும் ஒண்ணு கூடி அவங்களோட மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொள்ள போறாங்க.

இன்னிக்கி ஒரு நாள் ஊர் பூரா ரவுண்ட் அடிச்சு பழைய பசுமையான நினைவுகளை மறுபடியும் ரீசார்ஜ் செய்ய முடிவு பண்ணினேன்.

காவிரி தியேட்டர் மேம்பாலத்து மேலே போவும்போது ஆட்டோக்காரரு பெருமையா சொன்னாரு “அதோ பாத்தீங்களா சார்! அந்த மொட்டை மாடியிலேதான் காக்காவுக்கு சாதம் வக்கிற மாதிரி மலைக்கோட்டை படத்துக்கு ஷூட்டிங் எடுத்தாங்க. காக்கா லேசுலே வர மாட்டேன்னுடுச்சு. (அதுக்கு எவ்ளோ வேலையோ?) இந்த ரோடு பூரா ப்ளாக் பண்ணிட்டாங்க”. சொல்லும்போதே அவரு முகத்துலே ஒரு பரவசம். படம் ரிலீசான அன்னிக்கி ஸ்கிரீன்லே பூவை வாரி இறைச்சிருப்பாருன்னு தோணுது.

திருச்சிகாரங்களுக்கு பிரதான பொழுது போக்குன்னு சொன்னா, அது தியேட்டருலே போயி படம் பாக்குறதுதாங்க. இதே பாணியை மத்த ஊருக்காரங்களும் கடைப்பிடிச்சாங்கன்னா திருட்டு வி.சி.டி. அறவே ஒழிஞ்சுடும்.

சென்னைவாசிகளாவது போரடிச்சா பீச்சுக்குப் போயி சுண்டல் வாங்கிச் சாப்பிடுவாங்க. பாவம் இவுங்க எந்த சமுத்திரத்துக்கு போவாங்க? சொல்லுங்க.

அவுங்க ‘தலை’யோட படம் ரிலிஸாகுற அன்னிக்கி கட்-அவுட்டுக்கு போடுற மாலையை கிளிட்டன் பேண்டு வாத்தியத்தோட ஊர்வலமா ஊரையே ஒரு ரவுண்டு வந்து பெருசா அலம்பல் பண்ணிடுவாங்க. அவ்ளோ பெரிய மாலையை எல்லாத்துக்கும் காட்டலேன்னா ஊர்க்காரங்க கோவிச்சிக்கிடலாம் இல்லியா? குஷ்புவுக்கே கோவில் கட்டுனவங்கன்னு சொன்னா சும்மாவா?

சினிமாவுலே மெட்ராஸை காட்டணும்னா எல்.ஐ.ஸி.யை க்ளோசப்புலே காட்டுவாங்க. திருச்சின்னு சொன்னா மலைக்கோட்டையை Zoom போடுவாங்க. ரசிகர்களும் சூசகமா “ஓஹோ! இது திருச்சியிலே நடக்குற கதை”- ன்னு பக்குவமா புரிஞ்சிக்கிடுவாங்க. (கோவையை காட்டனும்னாதான் பாவம் டைரக்டரு திண்டாடிப் போயிடுவாரு)

ஆட்டோவிலே உக்காந்தபடி திருச்சியோட மாற்றத்தை கவனிச்சிக்கிட்டே வந்தேன். சீனப் பெருஞ்சுவர் மாதிரி வருஷக்கணக்கா கட்டுன சில மேம்பாலங்களோட வேலை முடிஞ்சிருக்கு. (அப்பாடா! இப்பவாவது முடிச்சாங்களே)

ஒரு காலத்துலே “ஜோஸப் காபி”-ங்குற தகர போர்டை முதுகிலே மாட்டிக்கிட்டு அந்த வெள்ளி நிற டவுன் பஸ் ஜங்ஷனுக்கும் மெயின்கார்ட் கேட்டுக்கும் இடையே ஓடிக்கிட்டு இருக்கும். இப்பவும் அதே வெள்ளி நிறம்தான். ஆனா முதுகுலே டின்னு வேற பேருல கட்டியிருந்தாங்க. அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் சர்வீசு. வேற ஊருலே இதுமாதிரி பார்க்கவே முடியாது.

புதுசு புதுசா துணிக்கடை, நகைக்கடை, சூப்பர் மார்க்கெட்டுங்க கண்ட மேனிக்கு முளைச்சிருந்துச்சு.

தேவர் ஹால் – இங்கேதான் உருது முஷாயிரா (கவியரங்கம்) முதல் சிலோன் லைலாவோட ரிக்கார்ட் டான்ஸ்வரை எல்லாமே நடக்கும். அது இப்ப ஷாப்பிங் காம்ப்ளெக்ஸா மாறியிருந்துச்சு.

ஒரு வெளிநாட்டுக்காரருக்கிட்டே “உங்க ஊரு டிராபிக், இந்த ஊரு டிராபிக். – இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”ன்னு கேட்டாங்களாம்.

“எங்க ஊருலே வண்டி பெட்ரோல்லே ஓடுது. உங்க ஊருலே வண்டி ஹாரன்லே ஓடுது”ன்னு பதில் சொன்னாராம். அது வாஸ்தவம்தான். ஆட்டோக்காரரு ‘பாம் பாம்’ன்னு ஹாரன் அடிச்ச மேனிக்கு ஓட்டிக்கிட்டே போனாரு.

தெப்பக்குளம் போஸ்ட் ஆபிஸ்கிட்டே இறக்கி விட்டுட்டு 40 ரூவா வாங்கிக்கிட்டாரு. எனக்கு ரொம்பா நாளா ஒரு ஆசை. மத்த ஊருங்க மாதிரி இந்த ஊருலேயும் மீட்டரை பாத்து காசு கொடுக்கணும்னு. அது இந்த ஜென்மத்துலே நிறைவேறும்னு தோணலே.

போரடிச்சா பேசாம மெயின் கார்டு கேட் பக்கம் ஒரு ரவுண்டு போயிட்டு வந்தீங்கன்னா போதும். ஜாலியா டைம் பாஸ் ஆயிடும். உள்ளே பூந்ததுமே “சார் சவுதி ரியாலு இருக்கா?, டாலரு இருக்கான்னு?” கேட்டு பர்மா பஜாருகாரங்க இம்சை அரசனா மாறிடுவாங்க.

மெயின் கார்டு கேட்லே (மருத்துவர் ஐயாவின் கவனத்துக்கு : எதுக்கெதுக்கோ தமிழ்ப் பெயரு வைக்கிறாங்களே, இதுக்கு வைக்க மாட்டாங்களா?) அந்த பிளாட்பாரத்துலேதான் பார்வையில்லாத ஒருத்தரு புல்லாங்குழலை வச்சுக்கிட்டு “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே”ன்னு வாசிச்சிக்கிட்டு இருப்பாரு. டிசம்பரு மாசம் சென்னை மியூஸிக் அகாடமியிலே 500 ரூவா டிக்கட் வாங்கி புளூட் ரமணி வாசிக்கிறதை இங்கே ஓசியிலே கேட்டுட்டு போயிடலாம்.

“ஏன்யா ஞான சூன்யம்! அந்த ஆளு வாசிக்கிறதும் இந்த ஆளு வாசிக்கிறதும் ஒண்ணாய்யா?” இதப் படிச்சிட்டு நம்ம பிரண்டு வி.என்.எஸ். இப்படித்தான் திட்டப்போறாரு.

“அந்த ப்ளுட்டுலேயும் காத்துதான் வருது. இந்த ப்ளுட்டுலேயும் காத்துதான் வருது. கண்ணு தெரியாத ஒருத்தரு இவ்ளோ தத்ரூபமா வாசிக்கிறாருன்னா அத பாராட்ட வேணாமா? அட போங்க சார்”-ன்னு சொல்லி அவரை ஈஸியா சமாளிச்சுடுவேன்.

சிந்தாமணியிலே சுடச்சுட வெஜிடபிள் சமுசாவை சாப்பிட்டுட்டு, கரும்பு ஜூஸையும் குடிச்சிட்டு, வெளியே வந்ததுமே பொடிப்பசங்க அந்துருண்டை பாக்கட்டையும், கைக்குட்டையையும் வச்சிக்கிட்டு “வாங்கிங்குங்க சார்” ன்னு பின்னாடியே துரத்திக்கிட்டு வந்தானுங்க. பாரதிராஜா படத்துலே வர்ற மாதிரி கைக்குட்டையை கொடுத்து காதல் பண்ணலாம்னு பாத்தா அந்த வயசும் நமக்கு தாண்டிடுச்சு.

கொஞ்சம் இந்தாண்ட வந்ததுமே பழைய ஞாபகம் வந்துடுச்சு. தெப்பக்குளம் ஓரமா ஒரு ஐயர் கத்திரிக்கா பஜ்ஜி சுடுவாரு. அத வாங்குறதுக்கு கஸ்டமருங்க போட்டி போட்டுக்கிட்டு நிப்பாங்க. இப்ப அந்த இடத்துல வரிசையா பழ வண்டி நின்னுக்கிட்டு இருந்துச்சு.

“ஓஹோ ! அந்த ஐயாரா? இப்ப அவரு ஆண்டாள் தெருவுலே கடை போட்டிருக்கிறாரு. நேரா போயி விசாரிங்க.”

ஒவ்வொரு ஆளா விசாரிச்சிக்கிட்டு போயி கடைசியா கண்டுபிடிச்சுட்டேன். வாவ்! அதே ருசி!. டேஸ்ட் கொஞ்சங் கூட மாறவேயில்லே.

மறுபடியும் மலைக்கோட்டை ரோடுலே நடந்து வந்தப்ப அக்கம் பக்கத்து ஊருலேந்து ஜனங்க கூட்டம் கூட்டமா, ஏதோ பிக்னிக் வந்த மாதிரி சாரதாஸ் வாசல்லே நின்னுக்கிட்டு இருந்தாங்க. எவர்சில்வரு தூக்குலே புளியோதரை அல்லது எலுமிச்சப்பழ சாதம்னு நெனக்கிறேன். விசேஷத்துக்கு துணிமணி எடுக்க வந்திருக்காங்க. எல்லாம் சரி. அதுக்காக இப்படியா ஊரையே திரட்டிக்கிட்டு வர்றது? இந்த மாதிரி ஷாப்பிங் போற கலாச்சாரத்தை இங்கீலீஸ்காரன் பார்த்தா வாழ்க்கையையே வெறுத்துடுவானுங்க.

சிங்காரத்தோப்புன்னு ஒரு இடம். மாந்தோப்பு, புளியந்தோப்பு, சவுக்குத்தோப்பு மாதிரி பச்சைப் பசேல்னு ஒரு புல்வெளி, அடர்த்தியான மரங்கள், சலசலன்னு ஒரு ஓடை, குயில் கூவுற சத்தம், குளு குளுன்னு காத்து – இப்படி நீங்க ஏடா கூடமா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. (கீரை வடைன்னு சொன்னா கீரை இருக்குது. ஆமை வடைன்னு சொன்னா அதுல ஆமையா இருக்கு? அது மாதிரி தான் இதுவும்)

‘சூப்பர்’ங்குற வார்த்தையை அதிகமா யூஸ் பண்ணுறது என்னவோ திருச்சிகாரங்கதான். “சூப்பர் பிகர்” “சூப்பர் படம்” “சூப்பர் அயிட்டம்” இப்படி எல்லாத்துக்கும் சூப்பர் போடுவாங்க. அங்கே உள்ள ஒரு பஜாருக்கு பேரு சூப்பர் பஜாரு. அப்படி என்ன சூப்பர் சாதனம் அங்கே கிடைக்குதுன்னு கேக்குறீங்களா? வேற என்ன? ஜட்டி, பனியன், நைட்டி, இதுங்கதான். அதை தவிர மின்விசிறி, விளக்கு இதுங்க கிடைக்கும். அம்புடுதேன்.

ஒரு காலத்துலே காந்தி மார்க்கட் பக்கம் வெல்லச் சர்க்கரையை மலை மாதிரி குவிச்சு வச்சு தொழிலாளிங்க அதுலே மண்வெட்டியாலே கொத்தி அதுலேயே மூக்கையும் சிந்துவாங்க. அப்ப விட்டதுதான். அதுக்கப்புறம் வெல்லக்கட்டியை நான் டேஸ்ட் பார்க்கவேயில்லீங்க.

சவுக் பகுதியிலே பழைய புஸ்தகக் கடைங்க நெறயா இருக்கும். வாடகைக்கு எடுத்து படிக்கலாம். சொற்பக் காசுதான். கண்ணதாசனோட மனவாசம். வனவாசம் போன்ற சுயபுராணம், மு.வ.வோட கரித்துண்டு நாவல்., கல்கியோட சிவகாமியின் செல்வன் இந்த கதையெல்லாம் இப்படி படிச்சு தெரிஞ்சிக்கிட்டதுதான்.

நவாப் பள்ளிக்கு எதிரே சாயங்கால நேரத்துலே ஜாதி மத வித்தியாசம் பாக்காம பொம்பளைங்க சின்னக் குழந்தைகளை இடுப்பிலே வச்சிக்கிட்டு நிப்பாங்க. தொழுதுட்டு வர்றவங்க வேத வரிகளை ஓதி ஊதுவாங்க. மத நல்லிணக்கத்துக்கு ஒரு சின்ன சாம்பிள்தான் இது.

லேடீஸ் சமாச்சாரம் விக்கிற கடைங்க கூட அப்படியேதான் இருக்கு. ஒரே ஒரு வித்தியாசம்தானுங்க. அன்னிக்கி கருப்பு நெறத்துலே நீளமான சவுரி முடி வித்துக்கிட்டு இருத்துச்சு. இப்ப சுருள் சுருளா, கலர் கலரா சவுரிமுடி. (இதுலேந்து என்ன புரியுதுன்னா அந்த காலத்துலேந்து இந்த காலம் வரை நெறய லேடீஸ்கிட்ட ஒரு-G, நாலு-T இல்லேன்னு புரியுது)

டவுன்ஹாலுக்கு பக்கத்துலே இருக்குற மரத்துலே குருவிங்க கும்பலா உக்காந்து அரட்டையடிக்கும். இந்தாண்ட பூட்டுச்சாவி ரிப்பேரு பண்ணுறவரு உக்காந்து எதையோ நோண்டிக்கிட்டிருப்பாரு. அந்தாண்ட ஒருத்தரு திருப்பாச்சி அறுவாளை தீட்டிக்கிட்டு இருப்பாரு. அவரு இளநீ விக்கிறவரு.

முப்பது வருஷத்துக்கு முன்னாடி இந்த இடம் எப்படி இருந்துச்சோ அப்படித்தான் இப்பவும் இருக்குது. இன்னுமொரு 30 வருஷம் கழிச்சு வந்து பாத்தாலும் அப்படியேதான் இருக்கப் போவுதுங்குறது என்னோட கணிப்பு.

 
2

ஆகஸ்ட் 15, 2007

டோல்கேட்டை ஆட்டோ நெருங்குனதுமே மனசுக்குள்ளே ஒரு சந்தோஷம். ஒரு இளமைத் துள்ளல்.

‘ஜாலி ஜமால்’ என்று மாணவர்கள் பெருமை பட்டுக் கொள்ளும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி – ஒரு பரவசமிக்க சரணாலயம். ஜாலியா வாழ்க்கையே அனுபவிச்சுக்கிட்டே கல்வி ஞானத்தையும் வளர்த்துக்கலாம்.

பழைய மணவர்கள் கலந்துக் கொள்ளும் அலுமினி மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்துச்சு. ஹோட்டல் ராதாஸ்லே ஒரு கப் காபி ஆர்டர் பண்ணிட்டு பழைய ஞாபகங்களை ஒவ்வொண்ணா அசை போட்டேன்.

ஆங்கில புரொபஸர் உஸ்மானி எப்பவும் கோட் சூட் போட்டுத்தான் காலேஜுக்கு வருவாரு. “நான் ஏன் தெனக்கும் கோட் போட்டுக்கிட்டு வர்றேன்னு சொல்லுங்க பார்ப்போம்” அப்பிடின்னு கிளாஸ்லே ஒரு புதிரு போடுவாரு.

“கெளரவத்துக்காக”, “புரொபஸருன்னு தெரியறதுக்காக”, “For Good Looking”, இப்படி பசங்க ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொல்லுவானுங்க.

“நோ ! நோ ! யூ ஆர் ராங்”ன்னு சொல்லிட்டு கோட்டை நீக்கி காட்டுவாரு. சட்டையிலே சின்னதா ஒரு ஓட்டை இருக்கும். “ இதோ பாத்தீங்களா ஓட்டை ! இதை மறைக்கத்தான் நான் இந்த கோட் போட்டிருக்கேன்னு குட்டை போட்டு உடைப்பாரு. ஒளிவு மறைவு இல்லாத அவரோட வெகுளித்தனமான பேச்சு எனக்கு ரொம்பவும் புடிக்கும்.

தியேட்டருக்கே இதுவரை போகாம இருந்த யூசுப்சாரை, டியூஷன் பசங்க நாங்க வற்புறுத்தி ராக்ஸி தியேட்டருக்கு “புதிய வார்ப்புகள்” படம் பார்க்க கூட்டிக்கிட்டு போனப்போ “அடேங்கப்பா என்னப்பா இது? தியேட்டருலே எல்லாமே இம்மாம் பெருசா தெரியுது?”ன்னு சோடா புட்டி கண்ணாடியை தூக்கி விட்டு கமென்ட் அடிச்சது இன்னும் பசுமையா நினைவிலே இருக்கு.

நாங்க படிக்கும்போது ‘காலேஜ் டே’ அன்னிக்கி சீஃப் கெஸ்டா ஒரு கலெக்டரு வந்தாரு. அவரு ஒரு காலத்துலே ஜமால்லே படிச்சவராம். ஹாஸ்டல்லே போடுற குஸ்காவை பத்தி புகழோ புகழ்ன்னு புகழ்ந்து தள்ளுனாரு. ‘குஸ்கா’ன்னு சொன்ன தாளிச்ச நெய்ச்சோறு – கொஞ்சம் மஞ்சளா இருக்கும் அவ்ளோதான். அப்படி அதுலே என்னதான் சுகத்தை கண்டாரோ தெரியலே. இதப்போயி இந்த மனுஷன் அரைமணி நேரமா பாராட்டி பேசுறாரேன்னு நெனச்சேன்.

அந்த காலத்துலே நாங்க அடிச்ச லூட்டி ஒண்ணா ரெண்டா? பொன்மலைப் பட்டியிலே ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துட்டு வந்து சைக்கிள்ளே லைட் இல்லாம போலீஸ்கிட்டே மாட்டிக்கிட்டது ஞாபகம் வந்துச்சு.

காலேஜ் பசங்க இன்சூரன்ஸ் பாலிஸி வச்சில்லேன்னாலும் அவங்களுக்குள்ளே சில பாலிஸி வச்சிருந்தாங்க. போட்டோ புடிக்கனும்னா மாடர்ன் ஸ்டுடியோ. துணி தைக்கிறதுக்கு டாம் டைலர். தம்-சாய் குடிக்கனும்னா கிராண்ட் ஹோட்டல், நான்வெஜ்ஜுக்கு ராஜா ஹோட்டல், இப்படி அவுங்களுக்குள்ளே தனித்தனி பாலிஸி.

சங்கிலியாண்டபுரம் போயி மணி கடையிலேதான் முடியை வெட்டிக்கிட்டாதான் அவனுங்களுக்கு ஆத்ம திருப்தி. நானும் ஒரு தடவை எதிர்காத்துலே கஷ்டப்பட்டு சைக்கிளை மிதிச்சிக்கிட்டு போனேன்.

லோக்கல் ஆசாமி ஒருத்தரு வாசல்லே பந்தல் போட்ட ஒரு வீட்டை காண்பிச்சு என்னோட பொது அறிவை மேம்படுத்தினாரு.

“அதோ பாத்தீங்களா! அதுதான் எம்.ஆர். ராதாவோட வீடு”.

கொஞ்ச தூரத்துலேதான் மணியோட சலூன். ‘ஸ்டெப் கட்’ ஆச்சே, படியிலே உக்காந்துக்கிட்டு வெட்டுவாரோன்னு பாத்தா அவரும் எல்லாரையும் மாதிரி சேர்லே உக்கார வச்சுத்தான் வெட்டுனாரு.

பெல்பாட்டம் அணியாதவனை செவ்வாய் கிரகத்து ஜந்துவை பாக்குற மாதிரி பசங்க கேவலமா பார்ப்பானுங்க. யாரு ரொம்ப பெரிய பெல்பாட்டம் வைக்கிறானோ அவன் முற்போக்குவாதின்னு அர்த்தம். அல்தாஃப் 40 இஞ்ச் வைத்து தைப்பான். ஒரு சின்னப் பையனை பேண்டுக்குள்ளார வச்சு தாராளமா கிட்நாப் பண்ணலாம்.

டின்னர் பெரும்பாலும் “Hotel-de-Broadway” யிலேதான். டோல்கேட்லே இருக்குற கையேந்தி பவனுக்கு நாங்க வச்ச செல்லப் பேரு அது. புரோட்டாவை சப்ளையரு அவரோட அழுக்கு கையாலே பிய்ச்சுப் போடுவாரு. பிய்ச்சுப் போடலேன்னா அதுக்கொரு சண்டை. “

“நீ அந்த ஆளுக்கு பிய்ச்சுப் போட்டியே? எனக்கு ஏன் போட மாட்டேங்குறே?”

அட வாழைப்பழ சோம்பேறிங்களா? சொந்த கையாலே புரோட்டவை பிய்க்கிறதுக்கு கூட அலுப்பு படுறானுங்களேன்னு நொந்துப் போயிடுவேன்.

பாலக்கரை பிரபாத் டாக்கீஸுக்கு முன்னாடிதான் அந்த ஜிகர்தண்டா தள்ளு வண்டி நிக்கும். ஸ்பெஷல்னு சொன்னா போதும். அந்த பாய் நைஸா குனிஞ்சு எவர்சில்வர் பாத்திரத்துலேந்து பாலாடை பாதர்த்தத்தை எடுத்து சூப்பரா கலந்து கொடுப்பாரு. உண்மையிலேயே ஈரல்குலையை குளிர்விக்கிற மாதிரி சூப்பரா இருக்கும்.

தீபாவளி வந்துடுச்சுன்னா என் பிரண்டு குணசேகரன் வாங்கோழி பிரியாணி சாப்பிடுறதுக்கு பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டலுக்கு ஓடிப் போயிடுவான். மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு வந்து “சூப்பரா இருந்துச்சு மச்சி” ன்னு முகத்துக்கு நேரே சூடா ஒரு கொடுமையான ஏப்பத்தை விடுவான். “ஏண்டா.. நீ சாப்பிட்டுட்டு வந்தது வாங்கோழியா? இல்லே நெருப்புக் கோழியா?” ன்னு தமாஸ் பண்ணுவேன்.

வடமாநிலத்து மாணவன் ஒருத்தன் எங்கக் கூட படிச்சிக்கிட்டு இருந்தான். அவன் பேரு அஞ்சும். வேகமாக நடந்து போய்க்கிட்டிருந்த அஞ்சுமை நிறுத்தி “ Are you fasting?”-ன்னு ஆரிப் கேட்டிருக்கான். அது ரம்ஜான் மாசமும் கிடையாது. “No, no, I am not fasting” அப்பிடின்னு சொல்லிட்டு விருட்டுனு அவன் போயிட்டான்.

“எங்கேடா வேகமா போயிக்கிட்டு இருக்கிறேன்னு கேக்குறதுக்கு என்கிட்ட I am not fasting-ன்னு பொய் சொல்றான் பாத்தியா?. இவனெல்லாம் ஒரு பிரண்டா?”

பின்னால நடந்து வந்த என்கிட்ட ஆரிப் குறை கூறினான்.

“போகட்டும் விட்டுத் தொலைடா. அவன் இங்கிலீஷ்லே கொஞ்சம் வீக். அதுக்காக நீ ஏன் பெருசா பீல் பண்ணுரே” ன்னு ஆறுதல் சொன்னதும்தான் ஆரிப் சமாதானமடைஞ்சான்.

ஆரிப்புடைய ஆங்கிலப் புலமையை பத்தி அவசியமா இங்கே குறிப்பிடணும். ஜங்ஷன் பக்கத்துலே “Hotel Ashby” ன்னு ஒரு ஹோட்டல். அதை இந்த பிரகஸ்பதி “ஹோட்டல் அஸ்ஹாபி”ன்னு இங்கிலீஷ்லே எழுத்துக் கூட்டி படிப்பாரு. ‘அஸ்ஹாபி’ன்னா நபித்தோழர்கள்ன்னு அர்த்தம். நமக்குத் தெரிஞ்சு எந்த நபித்தோழரும் இந்த ஊருலே ஹோட்டல் ஆரம்பிக்கலியேன்னு மண்டையை போட்டு உடைச்சுக்குவேன்.

ஒருதடவை ஹிந்து பத்திரிக்கையை கையிலே வச்சிக்கிட்டு “சொமெடிமஸ்” ன்னு சத்தம் போட்டு வாசிச்சான் ஆரிப். இப்படி ஒரு வார்த்தையை வாழ்க்கையிலே நாம கேள்விப்பட்டதே இல்லையேன்னு எட்டிப் பார்த்தா அது “Sometimes” –ங்குற வார்த்தை. “சாப்பாடுப் போடப்படும்”ன்னு எழுதியிருந்ததை ஒருத்தன் “சாப்பா-டுப்போ-டப்ப-டும்” ன்னு வாசிச்சானாம். அது மாதிரி ஆயிடுச்சு.

குளத்தூரார் பிரியாணி, கற்கண்டு பால், சிங்காரத்தோப்புலே மாடி மேல இருக்கிற குஜராத்தி மெஸ், ராயல் ஓட்டல் பாயா – இத எதை மறக்குறது சொல்லுங்க?
“எக்ஸ்க்யூஸ் மீ சார்”

ஒரு கப் காபி குடிச்சிட்டு இவ்ளோ நேரம் இந்த மனுஷன் டேபிளை ஆக்கிரமிச்சுக்கிட்டு உக்காந்து இருக்குறானேன்னு சப்ளையரு நெனச்சானோ என்னவோ. பில்லை வச்சிட்டு டக்குன்னு டம்ளராலே சிக்னல் காண்பிச்சான். புரிஞ்சிக்கிட்டு இடத்தை காலி செய்தேன்.

மீட்டிங் ஆரம்பிக்கிற நேரம். சாஹுல் ஹமீது சார் அடையாளம் கண்டுபிடிச்சுட்டு ‘வாங்க வாங்க’ன்னு வரவேற்றாரு. நிறைய புரபொஸர்ஸ் ரிடையர்ட் ஆகி போயிட்டாங்க. நம்மள கூப்பிட்டு மரியாதை நிமித்தமா மேடையிலே உக்கார வச்சு “இவரு வெளி நாட்டுலே இருக்காரு. புஸ்தகங்கள்ளாம் எழுதியிருக்காருன்னு” அறிமுகப் படுத்துனாங்க. விலாவிலே இறக்கை முளைச்ச மாதிரி ஒரு பீலிங்.

நம்மள விட சீனியர் ஓல்ட் பாய்ஸ் – பல்கலைக்கழக துணை வேந்தரு, ஓய்வு பெற்ற நீதிபதி, அரசியல்வாதி, பிசினஸ்மேன் எல்லாரும் மேடையிலே உக்காந்து இருந்தாங்க.
தங்களோட பழைய அனுபங்களை பகிர்ந்துக்கிட்டாங்க. மனசை நெகிழ வச்சது. அவுங்க முகத்துலே ஒரு களை. சின்னப் பசங்களா மாறியிருந்தாங்க.

நான் பேசும்போது புரொபஸர் நஞ்சுண்ட மூர்த்தியிலேந்து, யூசுப் சார், DJ வரை எல்லாத்தையும் நினைவுபடுத்தி பேசினேன்.

அலுமினி அஸோசியஷன் முடிஞ்சவுடனே சாஹுல் ஹமீது சார் சொன்னாரு.

“உங்களுக்கு ஒரு குட் நியூஸ். நீங்க குஸ்கா சாப்பிட்டுத்தான் போவணும்”.

“மவனே நீ சரியா மாட்டிக்கிட்டே!” மனசாட்சி இடையில் புகுந்து பகை மூட்டி விட்டது. அதை பொருட்படுத்தாமல் குஸ்காவை சாப்பிட ஆரம்பிச்சேன்.

ருசியென்றல் ருசி. அப்படியொரு ருசி. இதப் போயி நல்லாயில்லேன்னு சொன்னோமே? அன்னிக்கி ஓல்ட் பாய்ஸ்லே ஒருத்தரா வந்த அந்த கலெக்டர் பாராட்டி பேசுனது உண்மைதான்னு தோணுச்சு. அந்தந்த சூழ்நிலையிலேதான் அந்தந்த இனிமை நமக்கு உண்மையிலேயே புலப்படுது.

பக்கத்து மேசையிலே 50+ & 60+ ஓல்ட் பாய்ஸ் குஸ்கா, கோழி, மட்டன், சுவீட் எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டிகிட்டு இருந்தாங்க. அவங்கள்ள முக்கால்வாசி பேருக்கு ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சுகர் எல்லாமே இருக்கும்னு நெனக்கிறேன்.

இந்த நேரத்துலே அதப் பத்தி எதையும் அவுங்க கவலைப் படுற மாதிரி தெரியலே. நடையிலே ஒரு இளமை மிடுக்கு, முகத்துலே ஆனந்தம், பேச்சிலே நையாண்டி, குறும்பு – இதையெல்லாம் அவங்கக்கிட்ட பார்க்க முடிஞ்சுது.
3

இரண்டு நாட்கள் விசிட்டை முடிச்சிட்டு திருச்சியை விட்டு பிரிந்தேன். பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷனுலேந்து சென்னையை நோக்கி புறப்பட்டுச்சு. கோட்டை ரயில்வே ஸ்டேஷனை தாண்டியதுமே மலைக்கோட்டை தெரியுதான்னு ஜன்னல்லேந்து எட்டிப் பார்த்தேன். வச்ச பார்வை தீராம அதையே பாத்துக்கிட்டு இருந்தேன்.

கூட்ட நெரிசல்லே குஞ்சம் வச்ச துருக்கி தொப்பியை அணிஞ்சிக்கிட்டு போனா எப்படி ஒருத்தரு தனியா தெரிவாரோ அதே மாதிரி தூரத்திலும் மலைக்கோட்டை தனித்து காட்சி தந்துச்சு.

ஆட்டோகிராப்

ஆட்டோகிராப் - கையூம்

நன்றி : திண்ணை Thursday December 13, 2007

– அப்துல் கையூம்

ஆட்டோகிராப் என்றதுமே சேரனின் திரைப்படம்தான் ‘சட்’டென்று நமக்கு நினைவில் வரும். வாழ்க்கையில் நாம் சந்தித்த – நமக்கு பிடித்தமான – நபர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருப்போம். அதை பாதுகாத்து வைத்திருக்கும் சுகமே அலாதியானது.

புரோநோட்டு அல்லது காசோலையில் காணப்படும் கையெழுத்துகளுக்கு ஒரு விலையுண்டு. ஆனால் ஆட்டோகிராப் கையெழுத்துக்கள் விலைமதிப்பற்றது. அந்த கிறுக்கல்கள் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைக்கும் சுறுக்கெழுத்து அவைகள்.

ஆங்கிலத்தில் ‘கிராஃப்’ என்றாலே தொடர்புகளை காட்டும் வரைபடம் என்று பொருள். 20 பக்கங்கள் கொண்ட ஐந்தொகை காட்டும் வரவுச்செலவு கணக்கை ஒரு சிறிய ‘கிராஃப்’ வரைபடம் முழு சாராம்சத்தையும் உணர்த்திவிடும்.

நட்பின் ஆழத்தை நாசுக்காய் உணர்த்தும் தற்கையெழுத்துச் சுவடிக்கு ‘ஆட்டோகிராப்’ என்ற அர்த்தமுள்ள பெயரிட்டார்களே, அவர்களுடைய முதுகில் ஒரு சபாஷ் போட வேண்டும். ஆழ்ந்த உட்கருத்தோடு சூட்டப்பட்ட பெயர் என்பதினால்.

‘அன்னம் விடு தூது’, ‘புறா விடு தூது’ ‘நாரை விடு தூது’ என்று காப்பியங்களில் நாம் படித்திருப்போம். நட்புக்கு ஆட்டோகிராப் விடும் தூது அளவிட முடியாது. தூது சென்றடைந்தவனை அது இறக்கை கட்டி பறக்க வைக்கும். அத்தூது ஆழ்மனதையும் ஊடுருவும் சக்தி படைத்தது.

ஆட்டோகிராப் என்பது நட்பிலக்கணத்தின் மேற்கோள் புத்தகம்; கடந்துப் போன நினைவுகளின் கையடக்க கைப்பிரதி; ஆழமான உறவுகளின் ஆவண ஏடு; அர்த்தமுள்ள அகராதி; பள்ளிச் சரித்திரத்தின் குறிப்புதவி நூல் (Reference book); சங்கமத்தின் சங்கப் பலகை; உணர்வுகளின் ஓலைச்சுவடி; இளம் பிராயத்தின் இதிகாசம்; தோழமையின் தொல்காப்பியம். இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகத்திலேயே மிகச் சிறிய வசீகரமான கவிதை உண்டெனில் அது ஆட்டோகிராப் வசனமாகத்தான் இருக்க முடியும். சந்தம் இருக்கின்றதோ இல்லையோ பந்தம் இருக்கும். விடலைப் பருவத்தின் வியாக்யானத்தை அந்த ஓரிரு வரிகள் விவரித்து விடும். புரட்டிப் பார்க்கையில் மனதில் ஒரு சொல்லவொணா தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை ஒரு நிமிடம் நிலை குலையச் செய்துவிடும்.

சமய கிரகந்தங்களுக்கு எதிர்ப்பதம் என்னவென்று எனைக் கேட்டால் தயக்கமின்றி “ஆட்டோகிராப்” என்று பதிலுரைப்பேன். வேதங்கள் மனதை இலகுவாக்கும். அதற்குமாறாக ஆட்டோகிராப்போ மனதை கனக்க வைத்து விடும். ஒவ்வொரு புரட்டலின் போதும் ஆழ்மனதில் மூச்சுக்காற்றினூடே ஒரு விசும்பல் ஒலியும் சேர்ந்தெழும்.

டயரிக்கும் ஆட்டோகிராப்பிற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. முன்னது தேதி சொல்லும். பின்னது பழைய சேதி சொல்லும். டயரி உள்ளத்தை பதிவு செய்யும். ஆட்டோகிராப் உள்ளத்தின் ஆழத்தை பதிவு செய்யும். வருடம் கழிந்ததும் டயரியின் மதிப்பு போய்விடும். வருடங்கள் கூடிப்போக ஆட்டோகிராப்பின் மதிப்பும் கூடிக்கொண்டே போகும்.

ஆட்டோகிராப்பில் உயிர் எழுத்துண்டு. மெய்யெழுத்துமுண்டு. சுருங்கச் சொன்னால் உயிருக்குயிரான எழுத்துக்கள்; பசாங்கு இல்லாத மெய்யான எழுத்துக்கள். மொத்தத்தில் அவை உயிர்மெய் எழுத்துக்கள். ஆச்சரியம் என்னவெனில் அத்தனையும் மெல்லினங்கள்.

வல்லினத்தில் வசனம் எழுதும் நண்பர்களும் உண்டு. ஆனால் உள்ளர்த்தம் சுத்தமாக இருக்கும். ஒரு நண்பன் என் ஆட்டோகிராப்பில் “நீ என் செருப்புக்குச் சமம், விவரம் அடுத்த பக்கத்தில்” என்று எழுதியிருந்தான். ‘ஜோட்டால்’ அடித்ததுபோல் இருந்தது. கொதித்துப் போனேன். அடுத்த பக்கத்தை படித்ததும் அப்படியே நெகிழ்ந்துப் போனேன்.

“Friends are like shoes, some loose, some tight, some fit just right.
They help you walk through life. Thanks for being my size”

Colourful Memories என்று சொல்லுவார்கள். வண்ணமயமான எண்ணங்களை இந்த ஆட்டோகிராப் சுவடி தாங்குவதாலோ என்னவோ பல வண்ணங்களில் காகிதங்கள் கலந்திருக்கும். அந்த ‘கலர் பக்கங்கள்’ நம் கண்முன்னே விரித்துக் காட்டும் மெகா தொடரில் ‘பிளாக்-அண்ட்-ஒயிட்’ பிளாஷ்பாக் காட்சிகள் இடம்பெறும்.

ஆட்டோகிராப்பின் நீல நிற காகிதத்தில் என் நண்பனொருவன் இப்படி எழுதியிருந்தான் :

“This Page is Blue
My friendship is true”

சமீபத்தில் அறிவுமதியின் அற்புதமான கவிதையொன்றை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. (நினவிலிருந்ததை வைத்து எழுதுகிறேன். வார்த்தைகள் சிலது மாறியிருக்கலாம்.)

“அவள்
ஆட்டோகிராப்பில்
கையெழுத்திட்டாள்.
அது
பிரிவதற்கான உடன்படிக்கை என்பதை
அறியாமலேயே”

எத்தனை ஆழமான வரிகள்? தேசத்தின் உறவுக்காக உடன்படிக்கை போடுவதுண்டு. நேசத்தின் பிரிவுக்காக போடப்படும் உடன்படிக்கை என்பது விந்தையன்றோ?

தஞ்சை சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் நான் ஆரம்ப பள்ளிப் படிப்பை முடிக்கையில் பள்ளித் தோழி சுபா என் ஆட்டோகிராப்பில் எழுதிய வார்த்தைகள் இது :

When twilight drops her curtain
And pins it with a star,
Remember that you have a friend
Though she may wander far.

இரவு வேளைகளில் அந்த வானத்துக் கறுப்பு திரைச்சீலையில் குத்தப்பட்டிருக்கும் அந்த நட்சத்திர குண்டூசியை காணும்போதெல்லாம் சுபாவின் முகம் என் கண்ணில் பளிச்சிடும். அதே கண்சிமிட்டல். அதே குறுகுறு பார்வை.

பள்ளிவாழ்க்கையின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகளில் அதிகமான நண்பர்கள் எழுதும் வாசகம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

“There are many Silver ships
There are many Golden ships
But the best ship is friendship”

எனது கல்லூரி வாழ்க்கையின் அடையாளமாக நான் பாதுகாத்து வைத்திருந்த ஆட்டோகிராப்பை புரட்டியபோது நண்பன் ரஃபி எழுதிய வாசகம் என்னைக் கவர்ந்திழுத்தது.

“உன் நினைவுகள்
என் மனதில்
போட்டோகிராப்பாய்
பதிந்திருக்க
நீயேன் வீணாக
ஆட்டோகிராப்பை
நீட்டுகிறாய்”

என்று எழுதியிருந்தான். அன்று அவனுள் பீறிட்டெழுந்த கற்பனை வேகம் இன்று அவனை நாகூர் ரூமி என்ற பெயரில் நாடறிந்த ஒரு எழுத்தாளனாக அடையாளம் காட்டி இருப்பதை நினைக்கையில் மனதுக்குள் ஒரு மத்தாப்பு.

ஒரு சில பழைய பாடல்கள் நம்மை கடந்த காலத்திற்கு ‘பிக்னிக்’ அழைத்துச் செல்லும். ஒரு சில சினிமா படங்கள் சொல்லாமல் கொள்ளாமலேயே நம்மை ‘தரதர’வென்று இழுத்துச் சென்று இளமைக் கால மணற்வெளியில் ‘சம்மர் கேம்ப்’பே போட்டுவிடும்.

“பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித் திரிந்த பறைவைகளே!” என்ற பாடல் வானொலியில் ஒலிக்கும்போதெல்லாம் என் பள்ளி வாழ்க்கைக்கு சர்ரென்று ஒரு ‘U-Turn’ எடுத்து அவசர அவசரமாக ஓடிச்சென்று என் வகுப்பிலுள்ள குட்டி மேஜை நாற்காலியில் அமர்ந்து அந்த கரும்பலகையில் காட்சிதரும் இளமைக்கால திரைப்படத்தில் மூழ்கி விடுவேன்.

40+ ஆசாமிகளுக்கு இந்தப் பாடல் என்றால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் “முஸ்தபா முஸ்தபா” பாடலை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். “மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்தான்” என்ற வரிகூட ஆட்டோகிராப்பில் காணப்படும் வாசகமாகத்தான்  தோன்றுகிறது.

பாலுமகேந்திராவின் “அழியாத கோலங்கள்” படத்தை பார்த்துவிட்டு தூக்கமிழந்து பலநாட்கள் தவித்திருக்கிறேன். ஒன்றாகவே இருந்து ஒன்றாகவே பழகிய சிறுவயது நண்பர்களில் ஒருவன் – அந்த குண்டுப்பையன் – இறந்து விடுவான். அதை தொடர்புபடுத்தி உயிரோடு இருந்த என் நண்பன் உண்மையாகவே இறந்து விட்டால் நாமும் இதுபோல அழுது புரள்வோமோ என்று கற்பனைச் செய்து தலையணையில் முகம் புதைத்து குலுங்க குலுங்க அழுதிருக்கிறேன். இப்பொழுது நினைத்தால் படுஅபத்தமாகப் படுகிறது. அன்று அந்த சோக நினைவுகள் ஒரு சுகத்தை அளித்ததென்னவோ உண்மை.

சமீபத்தில் பார்த்த “பள்ளிக்கூடம்” திரைப்படமும் அதேபோன்று ஒரு தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. தங்கர்பச்சனின் கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு வெகுளியான குணச்சித்திர பாத்திரத்தை ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சந்தித்திருக்கக்கூடும்.

இரவு வேளையில் படுக்கையில் மல்லாந்து படுத்துக் கொண்டு மென்மையான, காலத்தால் அழியாத; இன்னிசை மழையில் இலயிக்கையில் மனதை யாரோ மயிலிறகால் இதமாய் வருடிக் கொடுப்பதைப் போன்ற ஒரு சுகமான உணர்வு ஏற்படும்.

அன்றிரவு பஹ்ரைன் வானொலியில், வாய்ஸ் எஃப். எம். 104.2 அலைவரிசையில், ஜக்ஜித் சிங்கின் ஒரு ‘ஜபர்தஸ்த்’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. “ஓ காகஸ் கி கஷ்தி. ஓ பாரிஷ் கா பாணி” என்று குழைந்து குழைந்து பாடி மனுஷர் என் இதயத்தை இலகுவாய் பிசைந்துக் கொண்டிருந்தார். இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் உடம்புக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றம் ஏற்படும். இளமைக்காலத்தில் நான் சுவைத்த அந்த காக்காய்க்கடி கமர்கட்டின் வாசத்தை என் நாசி மானசீகமாய் உணரும். “ஆயிரம் தாமரை மொட்டுக்களே! வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்!” என்று பாடிய வண்ணம் என்னைச் சுற்றி வெள்ளை உடை தரித்த தேவதைகள் ஒன்று கூடி ‘டிஸ்கோ டான்டியா’ ஆடுவார்கள்.

அந்த அற்புதமான கஜலின் அர்த்தங்களை அருந்தமிழில் மொழிபெயர்த்து அசைபோட்டுப் பார்த்தேன். கடைவாயில் கடலை மிட்டாயாய் இனித்தது.

“என் சகல செல்வத்தையும் பிடுங்கிக்கொள்
நான் சம்பாதித்த புகழ் அத்தனையும் பறித்துக் கொள்
என் வாலிபத்தை வேண்டுமானலும் எடுத்துக் கொள்
ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம்
என் குழந்தை பருவத்தை மாத்திரம் திருப்பித் தந்து விடு
மறக்க முடியாத அந்த மழைத் தூறல்
ஆஹா.. அந்த காகிதக் கப்பல்.”

ஜக்ஜித்சிங்கின் அந்த கொஞ்சல் மொழி என்னை என்னவோ செய்தது. Nostalgic ஜுரத்தில் ஜன்னி கண்டு குளிர்க்காய்ச்சல் வந்தது போல் ஒரு பிரக்ஞை. அந்த பால்ய பருவம் திரும்பவும் வருமா? கவலை என்றால் ‘கிலோ என்ன விலை?’ என்று கேட்கின்ற வயதல்லவா அது? கரைந்து போன காலம் திரும்ப வராததுதான். ஆனால் மனமென்ற சிறையில் மறுபடியும் பூட்டி வைத்து, அந்த மலரும் நினைவுகளை அசைபோட்டு அழகுற ரசிக்க முடியுமே?. அந்த பழைய ஞாபகங்களில் அப்படியே மூழ்கிட முடியும். இயந்திர வாழ்க்கையை கணநேரமாவது மறக்க முடியும். நிகழ்காலத்து பிரச்சினைகளை சற்று நேரம் மூட்டைகட்டி வைக்க உதவும் காயகல்பம் அல்லவோ அது?

கரைந்துப் போன அந்த ‘காலச்சுவடு’கள் கவண் எறியாய் (Catapult) ஏன் என்னைத் தாக்குகிறது? பம்பரமாய் ஏன் எனக்குள் சுழல்கிறது? எனக்குள்ளே இந்த கேள்வியை வேள்வி நடத்தி பார்த்தேன். அவ்வரிகள் ஆன்மாவிலிருந்து பீறிட்டெழும் அனுபவம் கலந்த வரிகள் என்பதினாலா? இல்லை; இதயத்தில் புதைந்துக் கிடக்கும் என் இளம் பிராயத்து நினைவுகளை ஏர்க்கலப்பையாய்க் கிளறுவதாலா? சரியாக சொல்லத் தெரியவில்லை.

சிறுவனாக இருக்கையில், புதிதாக வாங்கிய என் பம்பரத்தை தரையில் வட்டத்தின் நடுவில் வைத்து நண்பர்கள் அவரவர்கள் பம்பரத்தை சுழல வைத்து ‘அபிட்’ என்று ஆணியால் ஓங்கி குத்துகையில் என் இதயமே வெடிப்பது போல் இருக்கும்.

நியு காலேஜில் படிக்கையில் ராகிங்கின் போது ஒருவன் “நீச்சல் தெரியுமா?” என்று கேட்க, “தெரியும்” என்று நான் சொல்ல “ எங்கே தரையில் நீச்சல் அடித்து காட்டு” என்று அவன் சொல்ல, “இல்லை எனக்கு தண்ணீரில்தான் அடிக்கத்தெரியும்” என்று நான் சொல்ல, ஒரு டம்ளர் தண்ணீரை தரையில் ஊற்றி “இப்போது அடி பார்ப்போம்” என்று அவன் கூற, அந்த அனுபவம் எனக்கு இதயம் தாங்கும் இதயத்தை – ஒரு மனோபக்குவத்தை அளித்தது.

அண்மையில் நான் கேள்வியுற்ற ஒரு சேதி என் மனதில் பேரிடியாய் தாக்கியது. பலகாலம் என்னோடு ஒன்றாகப் பழகிய என் வகுப்புத் தோழன் ரஸ்மாரா. கம்பத்தைச் சேர்ந்தவன். இவன் அகால மரணம் எய்தி விட்டான் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. உண்மையென்று அறிந்ததும் என்னையறியாமல் தேம்பித் தேம்பி அழுதேன்.

அன்று எதிர்பாராத விதமாக ஆட்டோகிராப் ஒன்று என் கண்ணில் தென்பட்டது. அதில் அவன் எழுதியிருந்த வார்த்தைகள் வாழ்க்கையின் அர்த்தங்களை எனக்கு கற்பித்தது.

“உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருளிருக்கும்”

கண்ணதாசனின் வரிகளை எழுதியிருந்தான்.

“ஓ இறைவா!” அவன் ‘பிரிவு’ என்று குறிப்பிட்டது இந்த பிரிவைத்தானா? என்னை அறியாமலே கண்ணீர்த் துளிகள் உருண்டோடின.

அருகே நின்ற என் ஆறு வயது மகள் மோனா கேட்டாள் “ஏன் டாடி அழுவுறீங்க?” . அவளது பிஞ்சு விரல்களை என் கன்னத்தை வருடியது.

“ டாடி இந்த பழைய புஸ்தகத்தே மேலேந்து எடுத்தேனா? அதான் கண்ணுலே தூசி விழுந்துடுச்சு. நீ போய் படிடா கண்ணு” என்று சமாளித்தேன்.

பஞ்ச் டயலாக்

கட்டபொம்மன்

நன்றி : திண்ணை/ Thursday December 6, 2007

அப்துல் கையூம்

அன்னிக்கி நானும் என் நண்பர்களும் ஒண்ணா உக்காந்து இந்தியன் கிளப்புலே அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தோம். (நமக்கு கை வந்த கலை அது ஒண்ணுதானுங்களே?) டிங்கி ஜுரத்துலே அடிப்பட்டு சொங்கியா உக்காந்திருந்த பாபுவை போட்டு சரவணன் கலாய்ச்சிக்கிட்டு இருந்தாரு.

“உடம்பை நல்லா கவனிச்சிக்குங்க. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க பாத்தீங்களா?”

“அருமையான பஞ்ச் டயலாக் சார்”. வழக்கப்படி கனி ஒத்து ஊத ஆரம்பிச்சாரு.

ஒரே வாரத்துலே ஓமக்குச்சியா உருமாறிப் போன பாபு இதக் கேட்டு இன்னும் கொஞ்சம் சோர்ந்து போயிட்டாரு பாவம். ஒருத்தரை போட்டு டிஸ்கரேஜ் பண்றதுக்கு நம்ம ஆளுங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்?

“சுவரை வச்சுத்தான் சித்திரம் எழுத முடியும். எதுக்கும் நீங்க கொஞ்ச நாளு ரெஸ்ட் எடுங்க பாபு. அப்புறமா கிளப்புக்கெல்லாம் வரலாம்” – இது பாண்டியோட அட்வஸு (இந்த அழகுலே சுகர் ‘கும்’முன்னு ஏறியிருக்கிற ஆசாமி இவரு)

பாண்டியனோட தர்பாருலே குத்தம் கண்டுபிடிச்சே பேரு வாங்குன புலவர் நக்கீரர் இருந்தாரே, அது மாதிரி எங்க நண்பர் குழாமிலே சுப்பிரமண்யம் இருந்தாரு.

“சுவருலேதான் சித்திரம் வரைவீங்களா? வரையுணும்னா வெத்து பேப்பருலே இல்லாட்டி கேன்வாஸ்லே வரையிறதுதானே?”

“சார் ஒரு பேச்சுக்கு சொன்னேன் சார்”

“அது என்ன ஒரு பேச்சுக்கு, ரெண்டு பேச்சுக்கு? உங்கள மாதிரி ஆளுங்க தெரு சுவத்தெ நாசம் பண்றாங்கன்னுதான் ‘சுவற்றில் எழுதாதே’ ‘STICK NO BILLS’ ன்னு ஊரு பூரா எழுதி வச்சிருக்கானுங்க”. – சான்ஸ் கெடச்சதுதான் போதும்னு மனுஷன் விளாசித் தள்ளிட்டாரு.

“ஆஹா! சரியான போட்டி” – இது பாபு

“ஆரம்பிச்சுட்டாரய்யா ! ஆரம்பிச்சுட்டாரய்யா !” (ராகத்தோடு படிக்கவும்) – இது சலீமோட பஞ்ச்.

“ரிப்பீட்டு” – இது பாண்டியன்

“இதுக்கு பேருதான் நெத்தியடி” – இது கனி

அன்னிக்கி ராத்திரி நித்திரை வராம பெட்டுலே புரளும்போது இவுங்க ஆளுக்காளு அடிச்ச பஞ்ச் டயலாக்குதான் என் மூளையிலே ரீல் ரீலா ஓடிக்கிட்டு இருந்துச்சு.

“பஞ்ச்”ன்னு சொன்னாலே அந்தக் காலத்துலே குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி, ஜோ பிரேஸியருக்கு ஒண்ணு விட்டாரே அதுதான் எனக்கு நெனவு வரும். ஒரு புலி நம்மளை அறைஞ்சா எவ்வளவு பலமா இருக்குமோ அந்த மாதிரி ஒரு வேகம் அவரு விடுற கும்மாங் குத்திலேஇருக்குமாம். அவரு விட்ட அந்த நாக்-அவுட் குத்துலே ‘ஜோ’வோட (‘ஜோ’ ன்னு சொன்னா ஜோதிகா இல்லீங்க) பல் எகிறிப் போய் விழுந்துடுச்சு. மறக்க முடியாத பஞ்ச் அது.

மறக்க முடியாத வசனங்களுக்கு ‘பஞ்ச் டயலாக்’ங்குற காரணப்பெயரை யாரு வச்சாங்கன்னு தெரியலே. சமீப காலமா இந்த பஞ்ச் டயலாக் மேனியா ஓவராவே போயிக்கிட்டு இருக்குதுங்க. இது ஆரோக்கியமானதா இல்லையான்னு அன்புமணி ராமதாஸ்தான் சொல்லணும். (ஏன்னா அவருதானே ஹெல்த் மினிஸ்டர்?)

இப்பல்லாம் நம்ம பங்காளி பாண்டி முன்னமாதிரி “வாங்க உக்காந்து பேசலாம்”ன்னு சொல்லுறதே இல்லே. “பழகலாம் வாங்க”ன்னு சாலமன் பாப்பையா ஸ்டைலிலேதான் விளிக்கிறாரு. இவரு ஒரு காலத்துலே பாப்பையாங்கிற பேரைகூட ‘பப்பாயா’ன்னுதான் உச்சரிப்பாரு. பப்பாயான்னு சொன்னா பழத்தோட பேருய்யா. அப்படி சொல்லக் கூடாதுன்னு அவரை திருத்துறதுக்குள்ளார எனக்கு தாவு கழன்டு போயிடுச்சு.

ஒருநாள் நண்பர் ஒருத்தரோட வீட்டுக்கு கேசுவல் விசிட் அடிச்சேன். யாராவது வரமாட்டாங்களான்னு காத்துக்கிட்டு இருந்தாருன்னு நெனக்கிறேன். போய் சோபாவிலே உக்காந்தேனோ இல்லையோ தன்னோட ரெண்டு வயசு கடைக்குட்டியை கூப்பிட்டு சவுண்ட் வுட்டாரு.

“எங்கே மாமாவுக்கு முன்னாடி அத பேசிக்காட்டு”ன்னாரு. பையன் லேசுலே படியிற மாதிரி இல்லே.

“நா சொல்ல மாட்டென் போ”ன்னு அடம்பிடிச்சிட்டு தண்ணிக் காட்ட ஆரம்பிச்சுட்டான். அப்பாக்காரரு விடற மாதிரி இல்லே. அவன் ஓட, இவரு ஓட அந்த வீடே சேப்பாக்கம் ஸ்டேடியமா மாறிடுச்சு.

“பரவாயில்லீங்க பையன் ரொம்ப கூச்சப்படுறான். உட்டுடுங்க”

ஊஹும். அவரு கேக்குற மாதிரி இல்லே. ஒரு முடிவோட இருந்தாரு. கடைசியா பி.டி.உஷா மாதிரி ஓடிப் போயி பையனை கோழியை அமுக்குற மாதிரி ஒரே அமுக்கா அமுக்கிட்டு வந்தாரு.

“எங்கே மாமாவுக்கு அத சொல்லிக்காட்டு”.

அவன் மறுபடியும் ஜல்லிக்கட்டுக் காளை மாதிரி முரண்டு புடிக்க,

“நீ சொன்னீன்னா மாமா உனக்கு ஐஸ்க்ரீம், சாக்லேட் எல்லாம் வாங்கித்தரும்”.

நம்மள அஃறினை ஆக்கியதோடு நிக்காம தண்டச்செலவுக்கு வேற வழி வகுத்துடுவாரோன்னு ‘பக்’குன்னுச்சு மனசு. மனசை தேத்திக்கிட்டு புள்ளையாண்டான் ஏதோ சுலோகம் இல்லேன்னா திருக்குறள் சொல்லப் போறான்னு சஸ்பென்ஸா காத்திருந்தேன்.

பையன் ரிவர்ஸ் கியருலே கொஞ்சம் பின்னாடி போனான். முடியை ஸ்டைலா கோதிவிட்டுட்டு

“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”ன்னு பஞ்ச் டயலாக் உட்டான். அப்பாருக்கு வாயெல்லாம் பல்லு. பெருமை தாங்க முடியலே. எனக்கு அழுவுறதா சிரிக்கறதான்னு தெரியலே.

ஒரு தபா (மெட்ராஸ்காரரு கீர்த்தியோட பேசி பேசி நமக்கும் இந்த ‘தபா’ ஒட்டிக்கிச்சு) அந்த அஞ்சு வயசு பொண்ணு ரஸினாகிட்ட “ஒரு ரைம்ஸ் சொல்லு பாப்பா”ன்னு ரிக்வெஸ்ட் பண்ணுனதுக்கு “சொல்லுறேன். ஆனா நம்மள வச்சு காமடி கீமடி பண்ணுலேல்லே” ன்னு வடிவேலு ஸ்டைலிலே கேக்குறா.

இப்பல்லாம் வரவர இந்த பஞ்ச் டயலாக் லொள்ளு தாங்கவே முடியலீங்க. அன்னிக்கி பாருங்க குடும்ப நண்பர்களோட நான் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தப்போ என் நண்பரோட குண்டு பையன் சல்மான் உள்ளே வந்தான். எண்டர் ஆகும்போதே ‘டங் டங்’குன்னு சாணி மிதிக்கிற மாதிரி நடந்து வந்தான். ஏண்டா இப்படி நடக்கிறேன்னு கேட்டதுக்கு “சும்மா அதிருதில்லே” ன்னு பஞ்ச் டயலாக் பேசறான். என்னாத்தே சொல்லுறது?

‘என்னாத்தே’ன்னு சொன்னதும் இன்னொன்னு ஞாபகம் வருது. ‘என்னாத்தே’ கன்னையான்னு ஒரு நடிகர். ஒரு படத்துலே “என்னாத்தே பேசி, என்னாத்தே செஞ்சு” இப்படியே நெகடிவ்வா பேசிக்கிட்டே இருப்பாரு. அப்புறமா அந்த வார்த்தையே அவரோட பேருலே பெர்மனட்டா ஒட்டிக்கிச்சு. ‘படாபட்’ ஜெயலட்சுமி, ‘பக்கோடா’ காதர், ‘டணால்’ தங்கவேலு – இந்த காரணப்பெயர் எல்லாமே இவுங்க பேசுன பஞ்ச் டயலாக்கை வச்சு பேமஸ் ஆன பெயருங்கதான்.

இன்னொரு நண்பரோட பையன் பத்தாவதுலே கோட்டடிச்சுட்டான். “ஏண்டா பெயில் ஆனே?”ன்னு அப்பாரு கேட்டதுக்கு “லைஃப்லே இதெல்லாம் சகஜமப்பா”ன்னு பஞ்ச் டயலாக் பேசிட்டு அப்படியே ஹாய்யா போயிட்டான். இதுக்கு முன்னாடி ஒருமுறை ராத்திரி நேரத்துலே ஊரு சுத்திட்டு லேட்டா வீட்டுக்கு வந்திருக்கான். அடுத்த நாள் அப்பாரு கண்டிச்சிருக்காரு.

“நேத்து எத்தனை மணிக்குடா வீட்டுக்கு வந்தே?ன்னு கேட்டதுக்கு

“நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்குமே தெரியாது”ன்னு மிமிக்ரி பண்ணியிருக்கான். எங்கே போயி முட்டிக்கிறது?

ஒளவையாரு இருக்காங்களே அவுங்க மேலே எனக்கு ஒரு சின்ன மனசுவருத்தம். ‘அறம் செய விரும்பு’ ; ‘ஆறுவது சினம்’ – இப்படியெல்லாம் சூப்பரா அட்வைஸ் கொடுத்துட்டு கடைசியா “தையல் சொல் கேளேல்” ன்னு ஒரு பஞ்ச் டயலாக் அடிச்சிட்டு அக்கடான்னு போயிட்டாங்க.

இதிலே வேடிக்கை இன்னான்னா அவங்களே ஒரு பொம்பளையா இருந்துட்டு “பொம்பளை பேச்சை கேக்காதீங்க”ன்னு சொல்லுறாங்க. அப்டீன்னா இந்த அம்மாவோட அட்வைஸை யாருங்க கேப்பா?

எங்கேயோ பொறந்த ஷேக்ஸ்பியரு “யூ டூ புரூட்டஸ்”ன்னு சீசர் ஆண்டனியை பாத்து பேசுற மாதிரி எழுதுன டயலாக்கை இன்னிக்கும் நாம ஞாபகம் வச்சு பேசுறோம்.

சிலபேரு மேடையிலே பேசுறதுக்குன்னே புள்ளையார் சுழி மாதிரி ஒரு சில பஞ்ச் டயலாக் பிக்ஸ் பண்ணி வச்சிருப்பாங்க. “என் ரத்தத்தின் ரத்தமே”, “உடன்பிறப்புக்களே” அல்லது “என் இனிய தமிழ் மக்களே” ன்னு ஆரம்பிச்சாங்கன்னா அது யாரு சொன்னதுன்னு ஈஸியா யூகிச்சிடலாம்.

சிலபேரு முடிக்கும்போது பஞ்ச் டயலாக் சொல்லிட்டு மங்களம் பாடுவாங்க. சிவாஜிசாரு முடிக்கும்போது “ஜெய்ஹிந்த்”ன்னு சொல்லுவாரு. எனக்கு அவருக்கிட்டே ரொம்ப புடிச்ச அயிட்டமிது. இன்னொரு பிரமுகரு “அண்ணா வாழ்க”ன்னு சொல்லிட்டு பேச்சை முடிப்பாரு

சில டயலாக் காலத்தாலே அழியாத வசனமா அப்படியே நிலைச்சு நின்னுடுமுங்க.

“ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்”னு எப்பவோ கலைஞரு எழுதுன வசனம் இன்னிக்கும் பேசப்படுதுன்னு சொன்னா அதுலே ஒரு பஞ்ச் இருக்குதுன்னுதானே அர்த்தம்?

அந்த காலத்துலே, நாகூர்க்காரரு ரவீந்தர் “மணந்தால் மஹாதேவி இல்லையேல் மரணதேவி”ன்னு நாடோடி மன்னன் படத்துலே எழுதுன வசனம் அப்ப பரபரப்பா பேசப்பட்டுச்சு.

“சங்கே முழங்கு”ன்னு பாவேந்தரு சொன்ன ரெண்டே வார்த்தையிலே இன்னாமா ஒரு பஞ்ச் பாத்தீங்களா? “வெங்காயம்”ன்னு பெரியார் சொன்ன சிங்கிள் வார்த்தை பஞ்ச்தானே?

காலேஜ்லே படிக்கிற காலத்துலே பசங்க எல்லாருமே “ஆத்தா ஆடு வளத்தா. கோழி வளத்தான்னு சொல்லிட்டு ஏதோ புளுகிராஸ் மெம்பரு மாதிரி வசனம் பேசிக்கிட்டு அலைஞ்சானுங்க. பசங்க யாராவது போட்டுக் கொடுத்துட்டா “பத்த வச்சிட்டியே பறட்டை?” ன்னு டயலாக் அடிப்பானுங்க.

அடுத்த ரஜினி படம் வெளிவரப் போவுதுன்னா மொதல்லெ அதுக்கு என்ன பஞ்ச் டயலாக் வக்கிறதுன்னு ஒரு கோஷ்டியே கும்பளா உக்காந்து மூளையை போட்டு கசக்குது. அந்த அளவுக்கு இந்த பஞ்ச் டயலாக் மோகம் தமிழ்நாட்டு மக்களை சுனாமி மாதிரி போட்டு உலுக்குதுன்னுதானே அர்த்தம்?

பஞ்ச் டயலாக்கை படத்துலே ஹீரோதான் பேசுணும்னு இல்லீங்க. பாரதிராஜாவோட ஒரு படத்துலே செருப்பு தைக்கிற தொழிலாளியா வர்ற குணச்சித்திர கேரக்டரு “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி”ன்னு சொல்லுவாரு. பசக்குன்னு பெவிகால் மாதிரி நம்ம மனசுலே ஒட்டுற பஞ்ச் டயலாக் அது.

விவேக் நடிச்ச பாத்திரங்கள்ளே “பஞ்ச் பாலா”ங்குற ஒரு கேரக்டரு. அவருடைய கலைப் பாதையிலே அது ஒரு மைல்கல்லுன்னு வேணா சொல்லலாம் (இந்த காலத்துலே கிலோ மீட்டருலேதான் எழுதி வச்சிருக்காங்க)

“தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை”ன்னு கட்டபொம்மன் சொன்னது நம்ம மனசுலே ஆழமா பதிஞ்சிடுச்சு. நெசமாவே கட்டப்பொம்மன் இந்த வசனத்தை சாகுற நேரத்துலே சொல்லியிருப்பாருன்னு நெனக்கிறீங்களா?

Moral of the Story இதுதாங்க. யாரு வேணும்னாலும் பஞ்ச் டயலாக் பேசிட்டு போங்க. நோ ப்ராப்ளம். ஆனா எப்ப பேசணுமோ அப்ப மட்டும் பேசுங்க. அனாவசியமா தொண்டை தண்ணியை வேஸ்ட் பண்ணாதீங்க. பஞ்ச் டயலாக் பேசுறதுதான் வாழ்க்கையோட குறிக்கோளுன்னு மாத்திரம் நெனச்சுடாதீங்க.

கடைசியா முடிக்கும்போது ஒரு பஞ்ச் டயலாக்கோட மெஸேஜ் சொல்லலாம்னு பாத்தா இவ்வளவு நேரம் நான் அட்வைஸ் பண்ணுனதுக்கே அர்த்தமே இல்லாம போயிடுமோன்னு பயமா இருக்கு.

‘ஜெய் ஹிந்த்’.

சிறுகதை எழுதப் போய் ..

Writer

Thursday November 15, 2007

– அப்துல் கையூம்

நாகூர் ரூமியின் கட்டுரையை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. “ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?” இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு.

எனக்கும் சிறுகதை எழுதவேண்டும் என்று நெடுநாளாக ஆசை. ஆனால் எப்படி தொடங்குவது?, எப்படி தொடர்வது? எப்படி முடிப்பது? ஒன்றுமே புலப்படவில்லை.

‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி’ என்பார்களே அதுபோல இந்தக் கட்டுரை தற்செயலாக என் கண்ணில் பட்டது. அதிலிருந்த கருத்துக்கள் வேறு என் ஆர்வத்தை அல்வாவை கிண்டுவதுபோல் கிண்டி விட்டிருந்தது.

முதலில் எதையாவது எழுதிப் பழக வேண்டுமாம். அன்றாடம் ஐந்து பக்கங்கள் எழுதுவது என்று முடிவெடுத்து பெர்னார்ட்ஷா எழுதினானாம். எழுதி எழுதிப் பழகினால் பெரிய எழுத்தாளன் ஆகலாம் என்பதை நாகூர் ரூமியின் எழுத்திலிருந்து தோராயமாக புரிந்துக் கொண்டேன்.

என் நண்பர் பாண்டி நாராயணன், தினமும் ஐந்து பக்கங்கள் ராம ஜெயம் எழுதுவார். “இப்போது ராமர் பாலம் தொடர்பாக எங்கு பார்த்தாலும் ஒரே பிரச்சினையாக இருக்கிறது, நீங்களும் உங்களுடைய கருத்துக்களை பத்திரிக்கையில் எழுதுங்களேன்” என்று சொன்னதற்கு கிடந்து பேய் முழி முழிக்கிறார்.

நான் பள்ளியில் படிக்கும்போது சில சமயம் வீட்டுப்பாடம் எழுதாமலிருந்து ஐந்து பக்கங்கள்வரை ‘இம்போஸிஷன்’ தண்டனை பெற்றிருக்கிறேன். அந்த அனுபவம் இப்போது கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது

எழுதுவதற்கு நேரம் இரவுதான் உகந்ததாம். அமைதி, தொந்தரவின்மை, நிசப்தம் இவையெல்லாம் தங்குதடையின்றி எழுத அவருக்கு உதவியதாம். இரவு எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருந்து விட்டு வீட்டில் கணினியின் முன் கம்பீரமாக அமர்ந்தேன்.

ஏதோ ஒரு வீரச்செயலை செய்யத் துணிந்து விட்ட தைரியம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் “உனக்கு இது வேண்டாத வேளை” என்று எதிரணியில் அமர்ந்து மனசாட்சி கூச்சல் குழப்பம் செய்துக் கொண்டிருந்தது. ‘வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்டோமோ’ என்ற சந்தேகம் பிறந்து விட்டது.

உட்காரும்போதே தூக்கம் கண்ணை சொக்கியது. “தூங்காதே தம்பி தூங்காதே” என்று மனதுக்குள் பாடிக்கொண்டே என்னை நானே தூண்டி விட்டுக் கொண்டேன். இந்த விஷயத்தில் தூண்டுதல் மிகவும் முக்கியமாம். அதுவும் அதில் எழுதியிருந்தது.

நம்மை யாரும் எழுதுவதற்கு தூண்டப் போவதில்லை. அது மட்டும் நிச்சயமாக எனக்கு தெரிந்திருந்தது. காரணம், அந்த அளவுக்கு எனக்கு வேண்டப்பட்டவர்களை பேசியே சாகடித்திருக்கிறேன். உண்மை இப்படியிருக்க யாராவது துன்பத்தை விலை கொடுத்து வாங்குவார்களா?

“எதைப்பற்றி எழுதுவது? எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். அதில் ஒரு வரி வரும். அது என்னை என்னவோ செய்யும். உடனே ஒரு கதை. ரோட்டில் ஒரு நாய் போகும். அல்லது எதிர்வீட்டில் உள்ளவன் தன் வீட்டுக்குள் கேட்காமல் புகுந்த ஆட்டை கட்டிப்போட்டு கதறக்கதற அடிப்பான். அதைப் பார்க்கவோ அதற்காக பரிந்து பேசவோ நேரிடும். அது என்னவோ செய்யும்.” என்றெல்லாம் பயங்கரமான டிப்ஸை நாகூர் ரூமி வாரி வாரி வழங்கியிருந்தார்.

அடேங்கப்பா… கதைக் கருவை வரவழைப்பதற்கு இப்படியெல்லாம் ஒரு வழி இருப்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டேன்.

வீட்டுக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றேன். மணி பன்னிரண்டு ஆகியிருந்தது. கும்மிருட்டு. நம்முடைய நேரத்துக்கு ஒரு நாயையும் தெருவில் காணவில்லை. “நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்று சொல்வார்களே அது இதுதான் போலிருக்கு.

அட.. அது போகட்டும். அடுத்த வீட்டில் யாராவது ஒருத்தன் ஒரு ஆட்டையாவது கட்டிப்போட்டு கதற கதற அடிப்பான் என்று பார்த்தால் அதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை.

தெருவெங்கும் ஒரே நிசப்தம். யாருடைய வீட்டிலும் விளக்கு எரியவில்லை. நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். உம்…கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு என்னைப் போல் சிறுகதை எழுதுகின்ற தலையாய பிரச்சினை எதுவும் இல்லை போலும்.

எனக்கு நாகூர் ரூமியின் மீதுதான் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்” என்பார்களே, மனுஷன் அதுபோல ‘அக்கடா’ன்னு கிடந்த என்னை உலுக்கி உசுப்பி விட்டு விட்டார்.

தெருவே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. நடுநிசியில் எதிர்வீட்டு ஜன்னலையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். என் கதைக் கருவுக்கு தீனி கிடைப்பதற்கான வழியையே காணோம்.

அக்கம் பக்கத்து வீட்டில் யாராவது அவர்களுடைய மனைவியை போட்டு இரண்டு சாத்து சாத்துனாலாவது “அவன்.. அவள்..அது..” என்ற தலைப்பில் சுவராஸ்யமான கதை ஒன்றை இந்நேரம் தொடங்கி இருப்பேன்.

போதாத குறைக்கு எதிரே இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வாட்ச்மேன் கண்ணில் வேறு பட்டுவிட்டேன். என்னை ஒரு மாதிரியான சந்தேகப் பார்வை பார்த்தான். எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப் போய்விட்டது.

எதிர் வீட்டில் ஒரு அழகான மாமி வேறு குடியிருந்தார். என்ன நினைத்தானோ பாவி தெரியவில்லை. நம்மை ஒரு ஜொள்ளுப் பார்ட்டியாக முடிவு பண்ணியிருப்பானோ? பயந்துப்போய் என் வீட்டில் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டேன்.

நாளையிலிருந்து என்னைக் கண்டால் சலாம் போடுவனோ என்னவோ அதுவும் தெரியாது.

ஆசை தீர நாகூர் ரூமியை ஒருமுறை மனதார திட்டித் தீர்த்துக் கொண்டேன். எல்லாம் இந்த மனுஷனால் வந்த வினை. இப்படி எதையாவது எழுதி விட்டு என்னைப் போன்ற அப்பாவிகளை மாட்டி விடுவதுதான் இவர்கள் வேளை.

மணி ஒன்றாகி விட்டது. தூரத்தில் எங்கிருந்தோ ஆந்தையின் அலறல் வேறு பயமுறுத்திக்கொண்டிருந்தது. கணினியில் வெற்றுப் பக்கத்தை திறந்து வைத்துக்கொண்டு, வெறித்து பார்த்தவாறு புரோட்டா மாவை பிசைவதுபோல் மூளையைப் போட்டு நன்றாக பிசைந்துக் கொண்டேன். கருக்கலைப்புதான் நடந்ததேயொழிய புதிய கரு எதுவுமே உதிக்கவில்லை.

அரும்பு மீசை முளைத்த பருவத்தில் தட்டச்சு கற்றுக் கொண்டது உதவியாக இருந்தது. அந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை ‘நர்ஸரி’ என்று சூசகமாகச் சொல்லுவோம். காரணம் அதை நடத்திக் கொண்டிருந்தவர்களுடைய பெயர்கள் முறையே பேபி. குழந்தை, பாப்பா என்பதாவது. அங்கு பயில வந்த இளவட்டங்கள் பெரும்பாலும் ‘சைட்’ அடிப்பதற்காகவே வந்தனர் என்பது வேறு விஷயம்.

asdfg.. asdfg.. என்று அடித்துப் பழகி ஓரளவு வேகமாக அடிக்குமளவுக்கு தட்டச்சு பயிற்சி வளர்ந்திருந்தது. என்ன பிரயோஜனம்? என்ன எழுதுவது என்று தெரியவில்லையே? சட்டியில் இருந்த்தால்தானே அகப்பையில் வரும்?

சாட்டை, சேணம் எல்லாம் வாங்கியாகி விட்டது. கடிவாளமும் தயார். குதிரைதான் இன்னும் வாங்கவில்லை. யோசித்து யோசித்துப் பார்த்து மணி இரண்டாகி விட்டது. தூக்கம் வராமலிருப்பதற்காக ஒரு வெற்றிடக் குடுவையில் (Flask) தேனீரை நிரப்பி வைத்து வயிற்றில் அடிக்கடி எரிப்பொருள் நிரப்பிக் கொண்டேன்.

எனக்குப் பரிச்சயமான பெண்மணி ஒருவர் மல்லிகா பத்ரிநாத்துடைய சமையல் குறிப்பு அடங்கிய புத்தகத்தை அடுப்பங்கறையில் ஒளித்து வைத்துக் கொண்டு பரிட்சைக்கு ‘பிட்’ அடிப்பதைப் போல் பார்த்துப் பார்த்து சமையல் செய்வார். (பாவம் அவர் கணவர்!)

என் நிலைமையும் அப்படி ஆகி விட்டது. நாகூர் ரூமியுடைய புத்திமதிகளை நகல் எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த குறிப்புகளை அடிக்கடி ஓரக்கண்ணால் ஒத்துப் பார்த்த வண்ணம் எழுத உட்கார்ந்தேன். கற்பனைக் குதிரை கிளம்ப அடம்பிடித்துக் கொண்டிருந்தது.

ஆழம் பார்க்காமல் காலை விட்டது என் தவறுதான். இதற்காக வேலைமெனக் கெட்டு “ஈ-கலப்பையை” வேறு பளுக்குறை (Download) செய்து வைத்திருந்தேன். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் யாராவதுதான் இதனை கண்டுபிடித்திருக்கவேண்டும்.

இங்கிருந்தபடி கலப்பையை இவர்கள் பிடித்திருந்தால் இந்தியாவில் ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி இருக்கலாமோ? வெளிநாட்டில் இருந்துக் கொண்டு இப்போது ஈ-கலப்பையால் இணையதளத்தை உழுதுக் கொண்டிருக்கிறார்களே? அதனாலென்ன? இவர்கள் சர்வதேச அளவில் புரட்சியை செய்துக் கொண்டிருக்கிறார்களே என்று பெருமை அடைந்துக் கொள்ளலாம்.

கணிணியில் திறந்து வைத்த வெற்றுப் பக்கம் தன் கன்னித்தன்மையை இழக்கா வண்ணம் இன்னும் கைப்படாத ரோஜாவாகவே இருந்தது. தூக்கத்தை விரட்டியடிக்க மீண்டும் ஒருமுறை தேனீர் அருந்திக் கொண்டேன். மணியைப் பார்த்தேன். நான்கு ஆகி இருந்தது. சிறுகதை என்னிடமிருந்து பிறப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை.

நாகூர் ரூமி அடியில் எழுதியிருந்த ஒரு கருத்து எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. என் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழியையும் காண்பித்தது.

“ஒரு சிறுகதைக்கு முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமாம். இன்னும் முடியவில்லை என்று தோன்றுகிற மாதிரிகூட ஒரு முடிவு அமையலாமாம்.”

ஆஹா,, அற்புதமான ஒரு ஐடியா என் மண்டையிலிருந்து பிரகாசமாக உதித்தது. சிறுகதைதானே பிறக்கவில்லை. அதனாலென்ன? இந்த இரவு நேரத்தில் இவ்வளவு நேரம் நான் பட்ட அவஸ்தையை அப்படியே வடித்தேன். இதுவும் பிரசுரிக்கத்தக்க ஒரு படைப்பாக அல்லவா மாறி விட்டது? இன்னும் முடியவில்லை என்ற மாதிரியே இருந்தது. அதுதானே தேவை.

கடைசியாக நாகூர் ரூமி சொல்லியிருந்தது இதுதான் :- “சொல்லவரும் விஷயத்தை முடிக்கும் இடத்தில் எழுத்தாளன் இருக்க வேண்டுமாம்”. நன்றாக அதனை புரிந்துக் கொண்டேன். முடிக்கும் தறுவாயில் மறக்காமல் என் பெயரையும், மின்னஞ்சல் முகவரியையும் முறையே எழுதி விட்டேன்.

சட்டுவம்

பரோட்டா

Thursday November 8, 2007

– அப்துல் கையூம்

நான்தான் சட்டுவம் பேசுகிறேன். சட்டுவம் எப்படிப்பா பேசும்? என்றெல்லாம் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது. சுட்டி டிவியிலே ஆடு, மாடு, கோழி, குதிரையெல்லாம் டயலாக் எடுத்து விடலாம். ஈசாப் நீதிக் கதையிலே முயல், நரி, தவளைகள் யாவும் பேசலாம். ஆனால் சட்டுவமாகிய நான் பேசக்கூடாதா? இது என்னப்பா அநியாயம்?

நான் எங்கே பிறந்தேன்? எங்கே வளர்ந்தேன்? என்று சரியாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் தற்போது நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு எதிரில் உள்ள பாபா பாய் கடையில் புரோட்டா மாஸ்டருடைய கையில் மாட்டிக் கொண்டு முழி முழின்னு கிடந்து முழிக்கிறேன். மனுஷன் என்னை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகிறார் என்பதை அறிந்தால் நிச்சயம் நீங்கள் எனக்காக ஒரு சொட்டு கண்ணீராவது விடுவீர்கள்.

நாகூரில் கொத்துப் புரோட்டா என்ற ஒரு அயிட்டம் உண்டு. வெளியூர்க்காரர்கள் நாகூர் வந்தால் இதை இங்கே சாப்பிடாமல் போக மாட்டார்கள். அதற்காக நான் ஆடுகிற ஆட்டம் இருக்கிறதே? அப்பப்பா.. புரோட்டா மாஸ்டர் இன்னொரு சட்டுவத்தையும் எனக்கு ஜோடியாக ஏந்திக் கொண்டு ‘தகதிமி தக தை’. ‘தகதிமி தக தை’ என்று நடனமாட வைப்பார்.

சும்மா சொல்லக் கூடாது. அவரது நட்டுவாங்கத்தில் நான் நன்றாகவே நடனமாடக் கற்றுக் கொண்டேன். அந்த சுதிலயம், நடனபாவம், நடன முடிவில் முத்தாய்ப்பான அந்த சங்கதியுடன் கூடிய முத்திரை இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்கென்றே சிலபேர்கள் கடைக்கருகே கூடி விடுவார்கள்.

அதுவும் வெளிநாட்டு ஆசாமிகளாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்ததுபோல் ‘ஆ’.. வென்று வாயைப் பிளந்துக் கொண்டு நின்று விடுவார்கள்.

நான் ஜோடி சேர்ந்து ஆடுகையில் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜயந்திமாலாவும், பத்மினியும் இணைந்து போட்டி நடனம் ஆடுவது போல் பிரமாதமாக இருக்கும்.

அப்போது கடை முதலாளி பாபா பாயின் முகத்தை உன்னிப்பாக கவனிப்பேன். பி. எஸ், வீரப்பா பாணியில் ஒரு விதமான கலாரசனையோடு தலையாட்டியவாறு ரசித்துக் கொண்டிருப்பார். ‘வசிஷ்டர் வாயாலே பிரும்ம ரிஷி பட்டம்’ வாங்கியது போன்ற ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும். என் பார்வைக்கு அவர் தொப்பி அணிந்த சுப்புடு போல காட்சி தருவார். இன்னும் உற்சாகத்தோடு நான் குதித்து குதித்து ஆடுவேன்.

இன்றைய பரதத்தை ‘தஞ்சாவூர் நால்வர்’ என அழைக்கப் படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் உருவாக்கினார்களாம்.

அதனால்தானோ என்னவோ குறிப்பாக தஞ்சை மாநிலத்தில் என்னை ஆளாளுக்கு இப்படி ஜதி போட்டு நாட்டியம் ஆட வைக்கிறார்கள். நான் சலங்கை கட்டாத பத்மா சுப்ரமண்யம், சேலை கட்டாத ருக்மிணி தேவி என்று எனக்கு நானே முதுகில் சபாஷ் போட்டுக் கொண்டாலும் அது மிகையாகாது.

டிஸ்கோ சாந்தி, ஜெயமாலினி எல்லாம் ஆடுவாரே அது மாதிரி ‘தையா தக்கா’ என்று காலில் சுடுதண்ணீரை கொட்டிக் கொண்டதைப்போல் கிடந்து நான் குதிப்பதில்லை. என்னுடைய ஆட்டத்தில் ஒரு நளினம் இருக்கும். கலையம்சம் இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மோலாக தாளம் தப்பாமல் சீராக ஆடுவதற்கு கடும் பயிற்சி எடுக்க வேண்டும். சில ஊர்களில் சட்டுவத்திற்கு பதிலாக எவர்சில்வர் டம்ளரைக் கொண்டு கொத்துப் புரோட்டா போடுவதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.

பாபா பாய் கடையில் நம்முடைய பொழப்பு இருக்கிறதே? அதை ஏன் கேட்கிறீர்கள்? தொடர்ச்சியாக 24 மணி நேர வேலை. நட்டநடு ராத்திரியில் ஒரு மணிக்கு, இரண்டு மணிக்குக் கூட யாராவது வந்து “ஓய்.. சூடா ஒரு கொத்துப் புரோட்டா போடுங்கனி” என்று பந்தாவாக ஆர்டர் கொடுப்பார். எப்படித்தான் இவர்களுக்கு செரிமானம் ஆகிறதோ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

போதாத குறைக்கு புது மாப்பிள்ளைக்கு வேண்டி இவ்வூரில் ஜாமப் பசியாறல் என்று நடுராத்திரியில் விருந்து வேறு படைப்பார்கள். தெம்புக்காகவாம். அதிலும் இந்த கொத்துப் புரோட்டா ஒரு முக்கியமான பங்கு வகிக்கும்.

“ஏண்டாப்பா… உனக்கு இந்த ஒரு அயிட்டத்தை விட்டா வேறு உணவு வகையே தெரியாதா?” என்று நான் அலுத்துக் கொள்வதுண்டு. யாராவது புரோட்டா ஆர்டர் கொடுத்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிக ரிஸ்க் எடுக்காமல் அசல்ட்டாக புரோட்டாவை ஸ்டைலாக புரட்டி புரட்டி போடுவதோடு நம்முடைய வேலை முடிந்து விடும்.

ஆனால் கொத்துப் புரோட்டா என்று சொல்லும் போது அப்படி இல்லையே? அலாரிப்பு, ஜதிஸ்வரம், ஸப்தம், பாதவரணம், தானவர்ணம் என்று ஆலாபனையோடு மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் என் நாட்டியம் குச்சிப்புடி, குறவஞ்சி, தில்லானா என்று தொடர்ந்து இறுதியில் ‘டண்டணக்கா டண்டணக்கா’ என்று டப்பாங்குத்தில் போய் முடியும்.

ஆட்டம் முடிவதற்குள் டங்குவார் அறுந்துவிடும். டங்குவார் என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்காதீர்கள். எனக்கு சொல்ல வராது. அகராதியிலும் அதற்கான அருஞ்சொற்பொருள் கிடையாது. எல்லோரும் சொல்லுகிறார்களே என்று நானும் பேச்சுக்கு சொல்லி விட்டேன். பெண்டு கழன்றுவிடும் என்று சொல்வார்களே, அதுமாதிரி ஒரு அர்த்தம்.

நீங்களே சொல்லுங்களேன். விடிய விடிய தொடர்ச்சியாக ஏதோ கின்னஸ் சாதனைக்காக ஆடுவதுபோல் ஆடினால் உடம்பெல்லாம் ஆட்டம் கண்டு விடாதா?

என்னுடைய புரோட்டா மாஸ்டர் இருக்கிறாரே? அவர் ஒரு சுரண்டல் பேர்வழி. ஆமாம். சிலசமயம் என்னை வைத்து தவ்வாவை போட்டு ‘சரக் சரக்’கென்று சுரண்டுவார். “அட.. கூறுகெட்ட ஜென்மங்களா.. ஒரு நடனக் கலைஞனை துப்புரவு தொழிலாளி ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணுறீங்களே” என்று ஆத்திரம் ஆத்திரமாக வரும்.

ஒருசமயம் சோத்துச் சீட்டு கொண்டு வந்த ஒரு பிச்சைக்காரன் பசி வேதனையில் ஒரு புரோட்டா கூடுதலாக கேட்கப் போக, இந்த மாஸ்டர் அடிப்பதற்காக என்னை எடுத்து ஓங்கி விட்டார், “அடப்பாவிகளா என்னை கொலைகாரனாக்கி வேடிக்கை பார்க்காதீங்கடான்னு“ என்று பதறிப்போய் கத்தி விட்டேன். ஆனால் ஓசைதான் வெளியே வரவில்லை.

புரோட்டா மாஸ்டர் மீதுதான் எனக்கு கோபமேயொழிய கடை முதலாளி பாபா பாய் மீது எனக்கு கோபமே கிடையாது. மாறாக ஒரு அளப்பரிய பாசம். என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய சீதேவியல்லவா?

“சாலிஹான சந்தனக்கட்டை” என்று ஊரார் சிலர் அவரை புகழும்போது எனக்கு பெருமையாக இருக்கும். ஒருநாள் ப்ளேட் கழுவுகிற சிறுவன் வேலைக்கு வரவில்லை. முதலாளியே எழுந்து என்னருகில் வந்தார், பாசமுடன் தடவிக் கொடுத்து, அவரே தன் கைகளால் என்னை கழுவி சுத்தம் செய்து வைத்தார். எனக்கு புல்லரித்துப் போய் விட்டது.

அவருக்காக எப்போதுமே விசுவாசமாக நாம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால்தான் சில சமயம் புரோட்டா மாஸ்டர் என்னை தோசைக்கல் மீது கொதிக்க கொதிக்க வைத்து விட்டு போகும்போது கூட பொறுமையாக சகித்துக் கொண்டிருந்தேன்.

இடையில் சில நாட்கள் பாபா பாய் கடைக்கு வரவில்லை. காய்ச்சல் வந்து வீட்டில் இருக்கிறார் என்று சொன்னார்கள். துடிதுடித்துப் போய் விட்டேன். கடைக்கு திரும்ப வந்து அவரது ஆசனத்தில் அமர்ந்தபின்தான் நான் நிம்மதி அடைந்தேன்.

அந்த வேளையில், ஒரு இளைஞன் வந்து “ஜதப்பா, சுள்ளாப்பா ஒரு கொத்துப் புரோட்டா போடுங்க சிங்கம்” என்று குசும்பாக ஆணையிட்டான். ஆடுவதற்கு தயாரானேன். தோசைக்கல் மீது அரங்கேறியதும் “நலந்தானா.. நலந்தானா.. உடலும் உள்ளமும் நலந்தானா” என்ற தாளத்துக்கேற்றவாறு ஆடி பாபாபாய் மீது நான் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிக்காட்டிக் கொண்டேன். அதனை அவர் புரிந்துக் கொண்டாரா என்பதை திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

வோறொரு நாள் எனக்கும் ஆணம் (கொழம்பு) சட்டியில் ‘அக்கடா’ன்னு கிடக்கின்ற கரண்டிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி விட்டது.

“ரொம்பத்தான் நீ அலட்டிக்கிறே” என்று அது என்னை சொல்லப் போக, நானும் பதிலுக்கு வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டேன்.

‘தகதக’வென்று கொதிக்கின்ற தோசைக்கல்லுக்கு மேலே நின்று தாளம் தப்பாமல் அது நடனமாடிப் பார்க்கட்டுமே? அப்போது புரியும் என்னோட கஷ்டம்.

இதே மாதிரி ஒரு சமயம் ராக்கெட்டை பார்த்து விமானம் கேட்டதாம். “நீ எப்படி இவ்வளவு வேகமாக விருட்டென்று பறக்கிறாய்?” என்று. அதற்கு ராக்கெட் சொன்னதாம் “உனக்கு பின்னாடியும் யாராவது நெருப்பு பத்த வச்சாங்கன்னு வச்சுக்கு அப்புறம் நீயும்தான் என்னை மாதிரி துண்டைக் காணோம் துணியைக் காணோமுன்னு பறப்பே” என்று.

மாரியம்மன் கோவிலில் தீ மிதி செய்கின்ற பக்தர்களைப்போல தினமும் நான் நெருப்பு மீது நின்று ஆட்டம் போடுகிறேன். கழுத்தில் மாலை கிடையாது. (அது ஒன்றுதான் குறைச்சல்)

என்ன வாழ்க்கை இது? நமக்கு விடிவுகாலமே வராதா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவேன். நம்மை யாராவது கடத்திக் கொண்டு போய் விட மாட்டார்களா? நாம் இரண்டாக உடைந்து எதற்கும் லாயக்கில்லாமல் போய் விட மாட்டோமா? என்றெல்லாம் கூட நினைத்துப் பார்ப்பதுண்டு.

பாபா பாய் கடையை விளம்பரம் செய்வதற்கும், அவரது வியாபரத்தை பெருக்குவதற்கும் நான் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறேன் என்று சொன்னால் அது பொய்யல்ல.

எப்படி என்று கேட்கிறீர்களா? ‘டக்டக் டட டட’, ‘டக்டக் டட டட’ என்று நான் ஆடும் ஜதியோசையில் அந்த வழியே செல்பவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு வந்து கொத்துப் புரோட்டா ஆர்டர் செய்வார்கள்.

பெருமைக்காகச் சொல்லவில்லை. அடியேனுடைய நடனத்தில் அப்படியொரு ஈர்ப்புச் சக்தி.

விஜய் நடித்த படத்தில் ஒரு பாட்டு வந்தது. “தொட்டபட்டா ரோட்டு மேலே முட்டை பறாட்டாநான் தொட்டுக்கிட சிக்கன் தரட்டா” என்று வரும். தொட்டபட்டா என்பது ஊட்டியிலே இருக்கின்ற மலை உச்சி. அங்கே எந்தக் கடையிலே முட்டை புரோட்டா போடுகிறார்கள்?

“பாட்டு எழுதுனா இவர்களுக்கெல்லாம் யதார்த்தமான முறையில் எழுதவே வராதா?” என்று நான் மனம் புழுங்கிப் போவதுண்டு.

ஒருநாள் கந்தூரி வரப் போவதாக கடையில் பேசிக் கொண்டார்கள். எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. கந்தூரி வந்தால் அவ்வளவுதான். ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்க வேண்டும். இரவு பகல் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். யாராவது “கொத்து..” என்று சொல்ல வாயெடுத்தாலே புரிந்துக் கொள்வேன், இன்று நம்முடைய கதை கந்தல் என்று.

எல்லாவற்றிற்கும் மேலாக கந்தூரி வைபவத்தின் கடைசி நாளாக கொடியிறக்குகின்ற தினம் வரும். அன்றைய தினம் எல்லோரும் தங்கள் வீட்டுக்கு ஒரு டஜன் இரண்டு டஜன் என்று கொத்துப் புரோட்டா பார்சல் வாங்கிக் கொண்டு போவார்கள்.

இது யார் ஆரம்பித்து வைத்த பழக்கமோ தெரியவில்லை. அன்றைய தினம் ஊர் முழுக்க கொத்துப் புரோட்டா வாசம் கமகமக்கும். கடைசியில் நாள் முழுவதும் கஷ்டப்படுவது நானாகத்தான் இருக்கும்.

ஒரு நாளாவது நமக்கு விடுமுறை கிடைக்காதா? ஓய்வு எடுக்க வாய்ப்பு வராதா? என்று தவியாய்த் தவிப்பேன். அதற்காக நான் செய்யாத வேண்டுதல் கொஞ்சநஞ்சமல்ல.

அந்த நாளும் வந்தது. அன்று என்னை எடுத்து சீண்டுவதற்கு யாருமே வரவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே ஆச்சரியமாக இருந்தது.

சற்று நேரத்திற்குப் பிறகு “இன்று கடை விடுமுறை” என்று ஒரு போர்டை கொண்டு வந்து யாரோ தொங்க விட்டார்கள். விசாரித்துப் பார்த்தபோது என் இருதயமே நின்று விடும் போலிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

ஆம். கடை முதலாளி பாபா பாய் மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டாராம். ‘எவன் உயிர் கொடுத்தானோ அவனே மீண்டும் எடுத்துக் கொண்டான்” என்று பொருள்படும் ஒரு இறை வசனத்தை கடை ஊழியர்கள் மொழிந்தார்கள்.

நான் விடுமுறை வேண்டும் என்று வேண்டுதல் புரிந்தததென்னவோ உண்மைதான். ஆனால் இதுபோன்ற ஒரு விடுமுறையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.

பாபா பாய் பரிவோடு தடவிக் கொடுத்த என் தேகத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். எனக்கு முதலாளியாகவும், ஒரு நல்ல ரசிகராகவும் இருந்த ஒரு ஜீவனை இழந்து விட்டேன்.

அதற்குப் பிறகு நான் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தபோதும் புலம்புவதில்லை. சமாளித்துக் கொள்கிறேன். எதையும் தாங்கும் இதயத்தை பாபா பாயின் மரணம் எனக்கு தந்து விட்டது. கருமமே கண்ணாக இரவும் பகலும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறேன்.

குள்ள நரி

Fox

Thursday November 1, 2007

– அப்துல் கையூம்

நான் என் கூட்டத்தாருடன் காட்டில் நிம்மதியாக வசித்து வருகிறேன். என்னை ஆங்கிலத்தில் FOX என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ஏனோ தெரியவில்லை… தமிழர்கள் மாத்திரம் என்னை தரக்குறைவாகவே மதிக்கிறார்கள். எனக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? குள்ளநரி… ஆமாம், குள்ளநரி…

மனிதாபமானமுள்ள யாரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று பெரியவர்கள் பாடி வைத்து விட்டுப் போன பிறகும், இவர்கள் என் உருவத்தை வைத்து எடை போடுகிறார்கள்.

“கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது”. இப்படி ஒரு பழமொழியை வேறு எழுதி வைத்திருக்கிறார்கள். குள்ளமாக இருந்தால் என்ன? அது என் குற்றமா? என்னை விட குள்ளமான பிராணிகள் உலகில் இல்லையா?

உயரத்தில் குறைந்தவர்கள் பாரதப் பிரதமராகக் கூட ஆகி இருக்கிறார்களே? “லிட்டில் மாஸ்டர்” கவாஸ்கர் கிரிக்கெட்டில் பிரகாசிக்கவில்லையா? சார்ளி சாப்ளின் தான் சோகமாக இருந்த நேரத்திலும் உலகத்தாரை சிரிக்க வைக்கவில்லையா?

தட்டச்சு பயில வேண்டுமென்றாலும் மேலை நாட்டினர் முதலில் என் பெயரை எழுதச் சொல்லித்தான் கற்றுக் கொடுக்கிறார்கள்.

“The quick brown fox jumps over the lazy dog”

இந்த வாக்கியத்தைத்தான் முதலில் அடித்து பழக வேண்டும். 35 எழுத்துக்கள் உள்ள இந்த வாக்கியத்தில் அத்தனை ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளன. எப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை இவர்கள் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதை கவனித்தீர்களா?

அந்த வாக்கியத்தை கூர்ந்து கவனித்தீர்களேயானால் என்னை ஒரு வீரனாகவே வர்ணித்திருப்பார்கள்.

கணிணியில் ஒரு மென்பொருள் நுட்பத்திற்கு FOX-PRO என்று என் பெயரையே அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

Fox news channel, Fox sports, Fox Racing, Fox Movies என்று என் பெயரில் ஏராளமான சேனல்கள் வேறு. இங்கு நரி சேனல் என்ற பெயரில் தொடங்கினால் அது நிச்சயம் ஓடவே ஓடாது.

FUR என்ற எங்களுடைய ரோமம் நிறைந்த தோலுக்காக வேட்டையாடி காசு பார்க்கும் அநியாயத்தை எதிர்த்து அங்கு போர்க்குரல் எழுப்புகிறார்கள்.

இங்கு என்னடாவென்றால், நீதிக்கதை என்ற பெயரில் சின்னஞ்சிறு பாலகர்கள் நெஞ்சிலும் விஷத்தை பாய்ச்சி வைத்திருக்கிறார்கள்.

பாட்டி ஒன்று வடை சுட்டுக் கொண்டிருந்ததாம். காகம் அதை கொத்திக்கொண்டு போனதாம். குள்ளநரி அதனிடம் சென்று “காக்கா காக்கா ஒரு பாட்டு பாடேன்” என்றதாம். காகத்தின் வாயிலிருந்து வடை கீழே ‘பொத்’தென்று விழுந்ததும், அதை எடுத்துக்கொண்டு தந்திரமாக குள்ளநரி ஓடி விட்டதாம்.
நாங்கள் எல்லோரும் ஏமாற்று பேர்வழிகளாம். இதுதான் அந்த கதையின் சாராம்சம். என்ன அநியாயம் இது? மனிதர்களுடைய சகவாசமே வேண்டாம் என்று ஒதுங்கிதான் ‘அக்கடான்னு’ நாங்கள் காட்டில் இருக்கிறோம். மீண்டும் எங்களை வம்புக்கிழுத்தால் என்ன செய்வது?

இன்னொரு கதையும் உண்டு. உயரே இருந்த திராட்சைக் கொத்து எனக்கு அகப்படவில்லையாம். உடனே நான் “சீச்..சீ இந்த பழம் புளிக்கும். இதை தின்றால் பல் கூசும்” என்று நான் சொன்னேனாம். இதை யார் பார்த்தார்கள்? அதை முதலில் சொல்லட்டும்.

இவர்களுடைய கற்பனைக்கெல்லாம் ஒரு அளவே கிடையாதா? யாராவது குதர்க்கமாக ஏதாவது செய்தால் அவனுக்கு “குள்ளநரி புத்தி” என்று நையாண்டி வேறு. நயவஞ்சகத்தனத்திற்கு பெயர் “நரித்தன”மாம். அடக்..கடவுளே..

இப்படி பேசுகிற இவர்கள் அதிர்ஷ்டம் என்று கூறி எங்கள் நகத்தை நரிக்கொம்பு என்று கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். ஆடு பகை, குட்டி உறவாம். இது எப்படி இருக்கு?

குறவர்கள் எத்தனையோ மிருகங்களை வேட்டையாடுகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு நரிக்குறவர்கள் என்று கேலிப்பெயர். நரி என்றால் அவ்வளவு இளக்காரமா?

“நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க” என்ற சினிமா பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். வாத்தியார் பாட்டு.

“நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா நரி போல வஞ்சனைகள் செய்ய மாட்டோம்” – என்று வரும்.

அட .. பாவிகளா..! நாங்க எப்போ வஞ்சனைகள் செய்தோம்? யாருடைய சொத்தை நாங்க கொள்ளை அடிச்சோம்? யாருடைய வயிற்றெரிச்சலை

நாங்க கொட்டிக்கிட்டோம்? மனசாட்சியே இல்லாமல் இப்படி எழுதுறீங்களே?

இதைத்தான் என்னுடைய போன்சாய் கவிதை நூலிலே இப்படி குறிப்பிட்டிருந்தேன் :

மனிதா…. நீ

மறைந்திருந்து தாக்கினால் -அது
கொரில்லா தாக்குதல்

பேச்சு மாறினால் – அது
பச்சோந்தித்தனம்

பொய்ச் சொன்னால் – அது
கரடி விடுதல்

குறுக்கு புத்தி – அது
குரங்கு புத்தி

நயவஞ்சகம் – அது
நரித்தனம்

நீலிக் கண்ணீர் – அது
முதலைக் கண்ணீர்

என்ன அநியாயம் இது?

விவகாரம் புரிவது நீ
வீண்பழி மட்டும்
விலங்கினத்துக்கா?

என்று எழுதி இருந்தேன்.

“இங்கிலீஷ்காரனை பார்த்தியா? அவனுடைய அகராதிக்கு கூட நம்மோட பெயரைத்தான் ‘டிக்ஷநரி’ என்று வைத்திருக்கிறான்” என்று என் நண்பர்கள் மத்தியில் நான் கடிஜோக் அடிப்பது உண்டு. ஹி..ஹி..ஹி….

ஆங்கிலேயர்கள் அழகான இயற்கை காட்சிகளைக் கண்டால் “சீநரி” என்கிறார்கள். முன்னறிவு கொண்ட நோக்குத்திறனை “விஷநரி” என்கிறார்கள். இயந்திரத்தை “மெஷிநரி” என்கிறார்கள். நல்ல நல்ல வார்த்தைகளுக்கு எங்களுடைய பெயர். அவர்களுக்கு எவ்வளவு உயர்ந்த மனசு?

தஞ்சை மாவட்டத்தில் நரிமனம் என்ற ஊரில்தான் எண்ணெய் கிடைக்கிறது. இது தெரிந்தால் இப்படி இவர்கள் கேலி பேச மாட்டார்கள்.

கவியரசர் வைரமுத்துவுடைய விலங்கு என்ற கவிதையை ஒவ்வொரு மனிதனும் படித்துப் பார்க்க வேண்டும். அதில் அவர் சொல்லுவார் :

மனிதா
விலங்கை வணங்கு !
ஒவ்வொரு விலங்கும்
உன் ஆசான் !
யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை !
காட்டுக்குள்
மூட நம்பிக்கை இல்லை !
அங்கே ..
நெருப்புக்கோழி கூடத்
தீ மிதிப்பதில்லை!

ஒவ்வொரு வரிகளும் சுருக்கென்று மனதை குத்தும். இதை ஒருவன் படித்துணர்ந்தால் பிறகு எங்களைப் போன்ற இனத்தை இழிவாக பேசவே மாட்டான்.

இனியாவது இவர்கள் விலங்கபிமானத்தோடு நடந்துக் கொள்ளட்டும்.