சும்மா

ஸும்ம

நன்றி : திண்ணை/ Friday October 19, 2007

– அப்துல் கையூம்

சும்மா இருந்த நேரத்துலே, சும்மா இருக்கிறதை விட்டுட்டு, சும்மா எதையாவது எழுதலாமேன்னு நெனச்சேன். எதப்பத்தி எழுதறதுன்னு மூளையை பிசைஞ்சிக்கிட்டு இருந்தப்போ, “சும்மா”வைப் பத்தியே எழுதுனா என்னான்னு மனசுலே தோணிச்சு. அதப்பத்தியே சும்மா எழுத ஆரம்பிச்சுட்டேன்.

சும்மா சொல்லக் கூடாது. இந்த உலகத்துலே எல்லாமே “சும்மா”வை சுத்திதான் இயங்கிக்கிட்டு இருக்கு. அத நாம மொதல்லே புரிஞ்சுக்கணும். அம்மாவுக்கு அடுத்தபடியா எல்லாரும் அதிகமா உபயோகப் படுத்தற ஒரு வார்த்தை இந்த உலகத்துலே ஒண்ணு இருக்குதுன்னா சொன்னா அது “சும்மா”தான்.

மாடுகூட “அம்மா”ன்னுதான் கத்துதுன்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கென்னமோ அது “சும்மா”ன்னு கத்துற மாதிரிதான் என் மனசுக்கு படுது.

இந்த கட்டுரையை இளையராஜா படிச்சு பாத்தாருன்னா நிச்சயம் “சும்மா என்றழைக்காத உயிரில்லையே”ன்னு உருக்கமா தன்னோட கட்டைக் குரலாலே பாடி இந்நேரம் நம்ம எல்லாரையும் உருக வச்சிருப்பாரு.

கடவுள் இந்த உலகத்தை படைக்காம சும்மா இருந்திருந்தா இன்னிக்கி நீங்களும் இல்லே, நானும் இல்லே. ஒண்ணுமே இல்லாம சும்மா கிடந்த பூமியிலேதான், மனுஷனோட முயற்சியினாலே இன்னிக்கு இத்தனை அடுக்கு மாடி கட்டிடமெல்லாம் மொளச்சிருக்கு.

நாம சும்மாவே இருக்கக் கூடாது. நம்மோட வாழ்க்கை நமக்கு சூசகமா இதத்தான் உணர்த்துது. சும்மா இருக்குற நேரத்துலே நீங்களே கொஞ்சம் ரோசனை பண்ணி பாருங்க. நான் சொல்லுறது எவ்ளோ பெரிய உண்மைங்குறது உங்களுக்கே நல்லா புரியும்.

குணங்குடி மஸ்தானோட பாடலை படிச்சு பாத்தீங்கன்னா “இந்த வாழ்க்கையே ஒரு சும்மாத்தான். அது ஒரு மாயை”ங்குற தத்துவத்தை அழகா நமக்கு போதிக்கிறாரு. அதத்தான் இன்னொரு சித்தரு “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” ன்னு பாடியிருக்கிறாரு.

“சும்மா”வை அப்படி இப்படின்னு தலைக் கீழா மாத்துறது என்னமோ விதியோட விளையாட்டுதான். சும்மா இருந்த ஒருத்தன் வாழ்க்கையிலே உசரத்துக்கு எங்கேயோ போயிடறான். உசரத்துலே இருக்குற மனுஷன் திடீர்ன்னு ஒண்ணுமே இல்லாம “சும்மா”வா போயிடறான்.

ஒரு மனுஷன் ஒரு வேலையும் செய்யாம வீட்டுலேயே சும்மா இருந்தான்னு வச்சுக்குங்க, அவன் பொறந்ததுக்கே அர்த்தம் இல்லாம போயிடுது. ரிடயர்ட் ஆனதுக்கப்புறம் சும்மா இருக்கலாம். நோ ப்ராப்ளம். (அப்பவும் சில ஜொள்ளு பார்ட்டிங்க அங்கே இங்கேன்னு லொள்ளு பண்ணிக்கிட்டு லோலாய் பண்ணிக்கிட்டு அலையுதுங்க. அது வேற விஷயம்)

ஆபிசுக்கு போய் அங்கே வேலையே செய்யாம ஒருத்தன் சும்மாவே இருந்தான்னா அவனுக்கு கல்தாதான். ஸ்கூலுக்கு போய் அவன் படிக்காம சும்மா இருந்தா அவன் நிச்சயம் பெயிலுதான். இப்படியே சும்மா சொல்லிக்கிட்டே போவலாம்.

இந்த உலகத்துலே எதுவுமே சும்மா கிடைக்கிறதில்லீங்க. “கையிலே காசு, வாயிலே தோசை” இதுதான் இந்த உலகத்தோட சுலோகம்.

சும்மா இருக்கிறவனை இந்த உலகம் மதிக்கிறது கூட கிடையாது. “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை”ன்னு சரியாத்தான் பெருசுங்க சொல்லியிருக்கு.

சிலபேரு சும்மா இருந்தே கோடி கோடியா சம்பாதிக்குறாங்க. அது எப்படின்னு கேக்குறீங்களா? ஒரு பேமஸ் கிரிக்கெட் வீரரு ஒரு பெரிய மேட்ச்சுலே நெசமா விளையாடாம ‘சும்மா’ இருக்க சம்மதிக்கிறாருன்னு வச்சுக்குங்க, அதுக்குகூட சில கோஷ்டிங்க கோடி கோடியா அள்ளிக் கொடுக்க தயாரா இருக்காங்க. அதுக்கு பேரு மேட்ச் பிக்ஸிங்காம். (என்ன எழவு அர்த்தமோ தெரியாது)

சும்மா சும்மா ஒரு விருந்தாளி ஒரு வீட்டுக்கு வந்துக்கிட்டே இருந்தார்னா அவருக்கு மருவாதி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டே போறதை நாம கண்ணாலே பாக்குறோம். (அந்த விருந்தாளி சத்தியமா நான் இல்லீங்க)

சும்மாவே இருந்து ஒரு பொண்ணு அவ கல்யாணத்துக்கு தன்னோட சம்மதத்தை தெரிவிச்சிடுவா. எப்படின்னு கேக்குறீங்களா? கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க மாப்பிள்ளே வருவாரு. மாப்ளே புடிச்சிருக்கான்னு யாராச்சும் அவக்கிட்ட போயி ரகசியமா கேப்பாங்க. சும்மாவே இருப்பா. பதிலே சொல்ல மாட்டா. லூசு மாதிரி கெடந்து லேசா சிரிப்பா. இவங்க புரிஞ்சுக்குவாங்க. (தமிழ்ப் பொண்ணுங்க இப்படித்தான் இருக்கனுமாம்)

மவுனம் சம்மதத்துக்கு அறிகுறின்னு பழமொழி வேற எழுதி வச்சிருக்காங்களே. இந்த Gap நம்மாளுங்களுக்கு போதுமே? அப்புறம் என்ன? டும் டும்தான்.

என்னோட நண்பர் வி.என்.எஸ்.மணி எனக்கு போன் பண்ணி “ ஹலோ.. எப்படி இருக்கீங்க? ஒண்ணுமில்லே.. சும்மாத்தான் போன் பண்ணுனேன்னு .. இழுத்தார்னா, ஏதோ வில்லங்கம், ஊர்வம்பு சொல்லப் போறாருன்னு புரிஞ்சுக்குவேன்.

சும்மாங்குற வார்த்தைக்கு தமிழிலே எக்கச்சக்கமான அர்த்தங்கள் இருக்குது. ஆனா அகராதியிலே அதையெல்லாம் பாக்க முடியாது. அனுபவத்துலே நாமேதான் புரிஞ்சிக்கணும்.

ஒருத்தர் இன்னொருத்தரைப் பார்த்து “உங்க மனைவி வேலைக்கு போறாங்களா?” ன்னு கேட்டு அவர் “இல்லை அவ வீட்லே சும்மாத்தான் இருக்குறா” ன்னு பதில் சொன்னார்னா, அவர் மனைவி Housewife-ஆ இருக்குறாங்கன்னு அர்த்தம்.

ஒரு அம்மா இன்னொரு அம்மாவைப் பாத்து “உங்க மருமவ இன்னும் சும்மாத்தான் இருக்கா?” ன்னு கேட்டா, புள்ளத்தாச்சியா இன்னும் ஆவலியான்னு அர்த்தம்.

ஒரு அம்மா தன்னோட புள்ளையைப் பாத்து “சும்மா, சும்மா என்னை தொந்தரவு செய்யாதே”ன்னா, அடிக்கடி என்னை பாடா படுத்தாதேடான்னு அர்த்தம்.

பட்டுக்கோட்டை “சும்மா கிடந்த நெலத்த கொத்தி” ன்னு பாட்டு எழுதுனார்னா, அது வேஸ்டா கெடந்த தரிசு நிலம்னு அர்த்தம்.

சும்மாங்குற வார்த்தைக்கு பின்னாலே இம்மாம் மேட்டரு இருக்குன்னு சொன்னா சும்மாவா?

ஒருத்தரு கேட்டாராம் “ நம்ம நாட்டுலே ஜனத்தொகையை குறைக்கிறதுக்கு நாம என்ன பண்ணனும்?”

அதுக்கு இன்னொருத்தரு “நீ கையையும் காலையும் வச்சிக்கிட்டு ஒண்ணுமே செய்யாம சும்மா இருந்தா அதுவே போதும்”-ன்னு பதிலு சொன்னாராம்.

ஸ்கூல்லே நான் படிக்கிற காலத்துலே “சும்மா”வாலே நிறைய சண்டைங்க வரும். ரெண்டு பசங்க சண்டை போட்டுக்குவாங்க. “ஏண்டா இப்படி பண்ணுனேன்னு?” வாத்தியாரு கண்டிப்பாரு. “இல்லே சார். நான் சும்மாச்சுக்காச்சும்தான் சார் சொன்னேன். அதுக்குப் போயி அவன் கோவிச்சுக்கிட்டான் சார்”ன்னு பதில் வரும்.

ஒரு பெரியவரு ஒரு இளைஞனைப் பாத்து “ஏம்பா, படிச்சு முடிச்சிட்டு இப்ப நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்குறே”ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு அவன் “எங்க அப்பாவோட ஜோலியிலே கூட மாட ஒத்தாசையா இருக்கேன்”னு சொல்லியிருக்குறான்.

“உங்க அப்பா என்னா செஞ்சிக்கிட்டு இருக்காரு?”ன்னு மறுபடியும் கேட்டதுக்கு “அவரு வீட்லே சும்மாத்தாங்க இருக்காரு”ன்னு பதிலு சொல்லியிருக்கான்.

வேலையே இல்லாம பொழுதை போக்குறதுக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுறாங்க பாருங்க. இதுக்கும் நம்ம கவியரசு (கவிப்பேரரசர் அல்ல) பாடியிருக்கருல்லே?

“வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்?” -ன்னு பாடி வச்சிட்டு போயிருக்காரு.

இந்த கட்டுரையை சும்மா முடிக்காம கடைசியிலே ஒரு மெஸேஜ் சொல்லி முடிச்சா நல்லா இருக்குமல்லவா? அந்த மெஸேஜ் இதுதான் :

தயவு செய்து இனிமேலாவாது வேலைக்கு போகாம வீட்லே இருக்குற பெண்மணிகளை “அவ வீட்லே சும்மாத்தான் இருக்குறா”ன்னு சொல்லாதீங்க.

வேலைக்கு போற பெண்ணுங்களை விட அதிக வேலை பாக்குறது இவுங்கதான். ஒரு நாள் பூரா இவுங்க வீட்டுக்குள்ளேயே ரெண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்குறாங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது.

புள்ளைங்க பின்னாடியும், புருஷன் பின்னாடியும் லோலோன்னு அலைஞ்சு, சமையலை செஞ்சிக்கிட்டு, பாத்திரத்தை கழுவிக்கிட்டு, துணியை துவைச்சிக்கிட்டு, வீட்டை சுத்தமா வச்சிக்கிட்டு, ஷாப்பிங் பண்ணிக்கிட்டு, .. அடடடடா.. கொஞ்சமா நஞ்சமா?

கொஞ்ச நேரம் உக்காந்து சும்மா சிந்திச்சுப் பாருங்க. நான் சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மைங்குறது உங்களுக்கே நல்லா வெளங்கும்.

பங்க்ச்சுவாலிட்டி

Hurry

– அப்துல் கையூம்

உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ஆங்கில அகராதியில் உண்டென்றால் அது PUNCTUALITY என்பதுதான்.

“எப்பவுமே இவன் குண்டக்கா மண்டக்கான்னு பேசுறானே“ என்று என் நண்பர்களே எனக்கு பின்னால் பேசுவதுண்டு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்ற கலையில் இன்னும் சரியாக தேர்ச்சி பெறாததே இதற்கு காரணம். சரியென்று மனதில் பட்டதை உளறிக் கொட்டி நண்பர்களிடத்தில் கெட்டப் பெயர் வாங்கிக் கொண்ட அனுபவம் நிறையவே உண்டு,

பள்ளிப் பருவத்தில் காலந்தவறாமையின் அவசியத்தை எனக்கு எடுத்துரைக்காத ஆசிரியர்களே இல்லை எனலாம். காலந்தவறாமையை ஒருவன் தவறாது கடைப்பிடித்தால் அவன் வாழ்க்கையில் வெற்றிப் படிகளை எட்டி விட முடியும். இது அவர்கள் ஆற்றிய அறிவுரைகள்.

பின்னர்தான் எனக்குப் புரிந்தது காலந்தவறாமையை கடைப்பிடித்தால் மட்டும்போதாது, அறிவு இருந்தால் மட்டும் போதாது, எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் அவசியம் வேண்டும் என்று.

“டோஸ்ட் மாஸ்டர்ஸ்” என்ற இயக்கத்தில் என்னைச் சேர சொன்னார்கள். ஆரம்பத்தில் இது ஏதோ நட்சத்திர ஓட்டல் சமையற்காரர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் சங்கம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அப்புறமாகத்தான் தெரிந்தது அது பேச்சுக்கலையை வளர்ப்பதற்கான ஒரு இயக்கம் என்று.

PUNCTUALITY இது அவர்களுடைய தாரக மந்திரம். அதற்குத் தலைவராக இருக்கும் என் நண்பர் “டோஸ்ட் மாஸ்டர்ஸ்” கூட்டத்திற்கு சரியான நேரத்தில் சென்று சரியான நேரத்தில் கூட்டத்தை தொடங்கி விடுவார்.

காலந்தவறாமையின் அவசியத்தை ஒவ்வொரு கூட்டத்திலும் உணர்ச்சி ததும்ப எடுத்தியம்புவார். அதை விடுத்து மற்ற நேரங்களில் இத்தனை மணிக்கு வருகிறேன் என்று வாக்களித்து விட்டு மனுஷன் சரியான நேரத்துக்கு வந்ததாக சரித்திரமே இல்லை.

இவர்கள் ஒரு பேச்சுக்காகவும் பகட்டுக்காகவும் வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக மட்டுமே சில நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றும்.

அவசியம் நேர்ந்தாலொழிய மற்ற நேரங்களில் காலந்தவறாமையை கடைப்படிப்பதற்காக அவ்வளவுதூரம் மண்டையை போட்டு நாம் அதிகம் உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று நான் முடிவெடுத்து ஒரு சில வருடங்கள் ஆகிவிட்டன.

“ஏன்யா.. ஒருத்தன் வேலை தேடி ஒரு அலுவலகத்துக்கு இன்டர்வியூக்கு போறான்னு வச்சுக்க, அவன் கரெக்டான நேரத்துக்கு போவலேன்னா செலக்ட்டே ஆக முடியாது. இப்படியெல்லாம் இருக்கும் போது நீ வாசகர்களுக்கு அட்வைஸ் பண்ற லட்சணமாய்யா இது?” என்று நீங்கள் முனகுவது என் காதில் விழத்தான் செய்கிறது.

“இதோ.. பாருங்க மிஸ்டர்.. நீங்க எல்லோரும் இனிமே ஆபிஸுக்கு லேட்டாத்தான் போவணும். போயி நல்லா வாங்கிக் கட்டிக்கணும்” அப்படின்னு நான் சொல்ல வரலே. என்னோட அனுபவத்திலே நானும் எவ்வளவோ காலந்தவறாமையை கடைப்பிடிச்சு பார்த்துட்டேன். ஊஹும்.. பிரயோஜனமே இல்லை. உங்களுக்கு அது வொர்க் அவுட் ஆச்சுன்னா தாரளாமா கடைப்பிடியுங்க. நானா வேணாமுன்னு சொல்றேன்.

ஒரு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திலே நாம் ஆஜராகுறது என்பது பிரச்சினையே இல்லை. சில சமயம் அதை பாராட்டுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்பதுதான் வயிற்றெரிச்சல்.

நான் வசிக்கிற பஹ்ரைன் நாட்டிலே இந்தியச் சங்கங்கள் கலாச்சார விழாக்கள் நடத்தும். நேரத்தோடு சென்று பார்வையாளர்களுக்காக நாற்காலிகளை எடுத்து வரிசையாக போட்டதுதான் மிச்சம்.

நிகழ்ச்சி தொடங்கும் நேரம் மாலை 7 மணி என்று அறிவிக்கப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் பேனர் மாட்டிக் கொண்டிருப்பார்கள். மைக்செட்காரர் பொறுமையாக ஒலிபெருக்கியை கட்டிக் கொண்டிருப்பார்.

பங்க்ச்சுவாலிட்டி என்பது வேறொன்றும் இல்லை. முன்கூட்டியே ஒரு இடத்திற்குச் சென்று யார் யார் எவ்வளவு லேட்டாக வருகிறார்கள் என்று வேவு பார்க்க உதவும் ஒரு யுக்தி என்பது எனது கொலம்பஸ் கண்டுபிடிப்பு.

ஒரு கூட்டத்திற்கு ஒருத்தர் லேட்டாக வந்தால் அவர் வி.ஐ.பி. என்று அர்த்தம். ஆளுக்காளு எழுந்து நின்று கும்பிடு போடுவார்கள். இன்னும் படுலேட்டாக வந்தால் அவர் வி.வி.ஐ.பி. என்று அடையாளம் கண்டுக் கொள்ளலாம். அவருக்கு வரவேற்பு இன்னும் படுஉற்சாகமாக இருக்கும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

“The Early bird gets the worm, but the Early worm gets eaten”

முன்கூட்டியே செல்லும் நற்பண்பு கொண்ட அந்த புழுவுக்கு கிடைத்த சன்மானம் அது அந்த பறவைக்கு இரையாகப் போனதுதான். பார்த்தீர்களா? நான் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்களே?

நம்ம சூப்பர் ஸ்டார் ஒரு படத்திலே “நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்” என்று சொல்லும் போது தியேட்டரே துர்ள் கிளப்பும். அதற்கு என்ன அர்த்தம்? அவர் லேட்டாக வருவதை ரசிகர்கள் அங்கீகரிக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்?

நான் பள்ளியில் படிக்கும் போது அபுபக்கர் எப்போதும் வகுப்புக்கு லேட்டாக வருவான். வாத்தியார் அவனை சரியான “லேட் லத்தீப்”பாக இருக்கிறாயே என்று சொல்வார். இதற்கு முன் எந்த லத்தீப் இப்படி லேட்டாக வந்து உவமை காட்டக்கூடிய அளவுக்கு உயர்fந்த மனிதர் ஆனார் என்று தெரியவில்லை. அந்த லேட் லத்தீபை கண்டு மனதார பாராட்ட வேண்டும். “இன்று எல்லோரும் உதாரணம் காட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறீரே.. நீர் பலே கில்லாடி ஐயா” என்று.

என் பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நாகையில் சர் அஹ்மது மரைக்காயர் என்ற பிரமுகர். “சர்” என்ற கௌரவ பட்டம் ஆங்கிலேயன் தந்து விட்டுப் போனதாம். இந்த பிரமுகர் ரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் அவருக்கு வேண்டி ரயிலும் காத்திருக்குமாம். அவர் பொழுதோடு சென்று ரயிலேறி இருந்தால் இதனை ஒரு பெரிய விஷயமாக கருதி என் பாட்டி சொல்லியிருக்க மாட்டார்.

எந்த அரசியல்வாதியாவது சரியான நேரத்துக்கு பொதுக் கூட்டத்திற்கு வந்ததாக நீங்கள் சுட்டிக் காட்ட முடியுமா? எவ்வளவுக்கெவ்வளவு ஜனங்களுடைய பொறுமையை சோதித்து தாமதமாக வருகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் பெரிய பிரமுகர் என்று அர்த்தம்.

எத்தனையோ அரசியல்வாதிகள் சொன்ன நேரத்துக்கு வராமல் தாமதித்து வந்ததால்தான் அவர்கள் வெடிகுண்டிலிருந்தும், கண்ணி வெடியிலிருந்தும் தப்பித்து உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

நான் நெருங்கிய உறவினர்களுடைய வீட்டுக்கு விருந்துண்ண போனால் வழக்கப்படி தாமதமாக “லேட் லத்தீபாகவே” செல்வது வழக்கம். “என்ன இவ்வளவு லேட்டாக வந்திருக்கிறீர்களே?” என்று கேட்டால் கைவசம் ரெடியாக வைத்திருக்கும் இலத்தின் பழமொழியை எடுத்து விடுவேன். அது “Better Late than Never” என்பது.

லேட்டாக போவது பெரிய விஷயமே அல்ல. அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் நம் திறமையே அடங்கி இருக்கிறது. சமாளிஃபிகேஷன் என்பது ஒரு தனிக்கலை. (ஆயகலைகள் 64-ல் இதனை நம் முன்னோர்கள் சேர்த்தார்களா என்பது சரியாகத் தெரியவில்லை)

லேட்டாக அடிக்கடி போயி பழகிக் கொண்டால்தான் அந்த கலையை நாம் திறம்பட வளர்த்துக் கொள்ள முடியும். சமயோசித புத்தி என்பது இதில் வரப்பிரசாதம்.

பங்க்சுவாலிட்டியை கீப்-அப் செய்கிறேன் என்று கூறும் பேர்வழிகளுக்கு இந்த கலைத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அமையாது.

“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசுகிறான் பார்” என்று யாராவது நம்மை புகழ்ந்தால் ‘ஓரளவு இந்த கலையில் தேர்ச்சி பெற்று வருகின்றோம்’ என்று பொருள்.

மலேசியாவில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி. கவிஞர் கண்ணதாசன் மிகவும் தாமதமாக செல்கிறார், பார்வையாளர்களிடமிருந்து விசில் சத்தம் பறக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்களுடைய ரத்த அழுத்தம் எகிறிவிட்டிருந்தது. மின்னல் வேகத்தில் மேடையில் வந்த கண்ணதாசன் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார்.

“சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். ஆனால் எனக்கோ தாமதம் பிடிக்கும்” என்றார். அவ்வளவுதான் சோர்ந்து போயிருந்த கூட்டத்தினர் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து விட்டனர்.

இதே போன்று இன்னொரு முறை அறிஞர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் மாலை 6 மணிக்கு பேசுவதாக இருந்தது. சித்திரை மாதம் வேறு. புழுக்கம் தாங்க முடியவில்லை. இரவு பத்து மணியாகியும் அண்ணா வரவில்லை. கூட்டம் பொறுமையை இழந்து கூச்சலும் குழப்பமும் அதிகமாகி விட்டது. “பெரியோர்களே… தாய்மார்களே தயவுசெய்து அமைதி காக்கவும். இன்னும் சற்று நேரத்தில் தலைவர் அவர்கள் வந்து விடுவார்” என்று ஒரு கரைவேட்டிக்காரர் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். பத்தரை மணிக்கு அண்ணா மேடை ஏறினார்.

மாதமோ சித்திரை

நேரமோ பத்தரை

உங்களுக்கோ நித்திரை

என்று சமயோசிதமாய் அடுக்குமொழியில் பேச ஆரம்பித்து விட்டார். கூட்டத்தினருக்கு அசதியும் சோர்வும் பறந்து போயே விட்டது. தாமதமாக வரும் அளவுக்கு ஒருவர் உயர்ந்து விட்டால் அவர் எப்படிப்பட்ட நிலைமையையும் திறமையாக சமாளித்து விடுவார் என்று அர்த்தம்.

சரியான நேரத்தில் வந்து சரியான நேரத்தில் சில அரசு பேருந்துகள் கிளம்பி விடும். காலநேரத்தை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அவர்களுக்கு warning கிடைத்து விடும். பாதி இருக்கைகளுக்கு மேல் காலியாகவே இருக்கும். அந்த போக்குவரத்து நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கும்.

அதே பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் போக்குவரத்து லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கும். சரியான நேரத்துக்கு வந்து விடும். ஆனால் சரியான நேரத்துக்கு கிளம்பாது. டுர்.. டுர்.. என்று உறுமிக் கொண்டு கிளம்புவதைப்போல் பாவ்லா காட்டும். ஆனால் கிளம்பாது. ஒரு வழியாக பயணிகளுடைய வசைமொழிகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு எல்லா காலி இருக்கைகளையும் நிரப்பியே பிறகே நடத்துனர் விசிலை ஊதுவார். அதே பஸ்ஸில் கடுப்பாகி உட்கார்ந்திருக்கும் நான் வண்டி புறப்பட்டவுடன் ‘ஹு…ம் பிழைக்கத் தெரிந்தவர்கள்’ என்று மனதார அவர்களை பாராட்டிக் கொள்வேன்.

என் மனைவியின் தாய் வழி தாத்தா மிகவும் கண்டிப்பான பேர்வழி. சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். சரியான நேரத்துக்கு துர்ங்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். நேரம் தவறவே மாட்டார். கல்யாணமான புதிரில் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். பகல் 12.00 மணிக்கு மதிய உணவை பரிமாறிவிட்டு “மாப்பிள்ளே .. நல்லா சாப்பிடுங்க” என்றார், காலைச் சிற்றுண்ண்டி எப்போதுமே நமக்கு 11.00 மணிக்குத்தான். உள்ளே தள்ளிய இட்லியும் தோசையும் இன்னும் செரிமானமே ஆகவில்லை. இந்த லட்சணத்தில் தட்டை நிறைய சோற்றை குவித்து வைத்து “ஒரு வெட்டு வெட்டுங்க மாப்பிள்ளே..” என்று சொன்னால் எதை வெட்டுவது?

அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் இரவு 8.00 மணிக்கெல்லாம் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு “படுத்து நல்லா தூங்குங்க மாப்பிள்ளே..” என்று வேறு 144 சட்டம் போடுவார்’ “கிழிஞ்சது கிருஷ்ணகிரி போ..” என்று மனதுக்குள் முனகிக் கொள்வேன். நினைவு தெரிந்த நாளிலிருந்து இரவு 1.00 மணிக்கு முன்னர் தூங்கியதாக நினைவே இல்லை.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தாத்தாவைக் கண்டால் எல்லோருக்கும் குலை நடுக்கம். மறுத்துப் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. வீட்டில் நண்டு சுண்டு என்று ஏகப்பட்ட உருப்படி. “ஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் உங்க தாத்தா ஒரு கிராமத்தையே உருவாக்கி விட்டார்” என்று என் மனைவியை அவளது பள்ளிக்கூடத் தோழிகள் கிண்டல் செய்வார்களாம்.

தாத்தாவிடம் யாராவது உங்களை நான் 4 மணிக்கு பார்க்க வருகிறேன் என்று சொல்லி விடுவார்கள். மனுஷர் வச்ச பார்வை வாங்காது கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு ஐந்து நிமிடம் கடந்தாலும் போச்சு, அவ்வளவுதான்.. பார்க்க வருபவரை வாங்கு வாங்குன்னு வாங்கி விடுவார். “சொன்னா சொன்ன நேரத்துக்கு வர்றதில்லையா? என்னை என்ன வேலை மெனக்கெட்டவன்னா நெனச்சீங்க? ச்சே.. அனாவசியமா எந்நேரத்தை வீணாக்கிட்டிங்களே?” என்று விளாசித் தள்ளி விடுவார். (இதில் வேடிக்கை என்னவென்றால் தாத்தாவும் வீட்டில் பொழுது போகாமல் சும்மா உட்கார்ந்து கிடக்கின்ற கேஸ்தான்) தாத்தா வீட்டில் எப்பவுமே ‘பின்-ட்ராப் சைலன்ஸ்’தான். யாரும் உரக்க பேச மாட்டார்கள்.

அவருடைய மறைவுக்கு பல வருடங்களுக்குப்பின் அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றிருந்தேன். மனம் போன போக்கில் கூத்தும் கும்மாளமுமாக ஜாலியாக இருந்தார்கள். இத்தனை மணிக்கு எழ வேண்டும், இத்தனை மணிக்குத்தான் சாப்பிட வேண்டும் என்ற கண்டிஷனெல்லாம் இல்லை.

காதலி ஒருத்தி காதலனுக்காக காத்திருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். காதலன் தாமதமாக அந்த இடத்துக்குச் செல்கின்றான். வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் அவளுடைய முகம் கோபத்தால் சிவந்து விடுகிறது. சிணுங்கியும், கடிந்தும், பிகு செய்தும் அவள் ஊடல் புரிகின்றாள். காதலனும் அவன் பங்குக்கு இறங்கி வந்து குழைவாய்ப் பேசி சமாதானம் செய்கிறான். அந்த ஊடலின் இன்பம் இருக்கிறதே. அடடடடா..

வள்ளுவர் பிரான் இதற்காக ஒரு அதிகாரத்தையே தாரை வார்த்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த இன்பம் யாவும் லேட்டாக போவதினால்தான் கிடைக்கிறது. புரிகிறதா?

ஒருமுறை என் மைத்துனர் ஒரு விருந்துக்கு நேரத்தோடு சென்றிருக்கிறார். அங்கிருந்த கிண்டல் ஆசாமி ஒருவர் ‘சாப்பாடு என்றால் அடித்து மோதிக் கொண்டு முதலில் வந்து விடுகிறீரே” என்று நக்கல் செய்ய, பாவம் மனிதர் அன்றிலிருந்து நம்முடைய பாணியில் லேட்டாக செல்வதையே பழக்கமாக்கிக் கொண்டார்.

இதையெல்லாம் படித்துவிட்டு நீங்களும் லேட்டாக போக ஆரம்பித்தால், என்னை விட சந்தோஷம் அடைகின்ற ஆசாமி இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.

ஆங்கிலத்தில் B.P. என்று ஏதோ சொல்கிறார்களே. அது பெரும்பாலும் இந்த PUNCTUALITY பார்ப்பவர்களுக்குத்தான் வருகிறது. ‘கரெக்ட் டைமுக்கு கிளம்ப வேண்டும்’. ‘கரெக்ட் டைமுக்கு போய்ச் சேர வேண்டும்’ என்று பதஷ்டப்பட்டு பைக்கில் சென்று கையை காலை உடைத்துக் கொண்ட என் உறவுக்காரர்கள் சிலரை உதாரணம் காட்டலாம். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும். உயிர் முக்கியமல்லவா?

அதற்கு மாறாக “லேட் லத்தீப்” என்ற பெயரே தேவலாம்.

நன்றி : திண்ணை/ Thursday September 27, 2007

என் இசைப் பயணம்

Mandolin

Thursday October 11, 2007

– அப்துல் கையூம்

அப்ப நான் திருச்சி ஜமால் முகம்மது காலேஜ்லே பர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்த நேரம். தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு பேரு Birds Lodge. மன்னார்புரத்துலே இருந்துச்சு. கலாட்டா, அலம்பல், நையாண்டி, கேலி, குசும்பு எதுக்குமே குறைச்சலில்லே.

“பசுமை நிறைந்த நினைவுகளே.. பாடித்திரிந்த பறவைகளே”ன்னு செட்டிநாட்டுக்காரரு பொருத்தமாத்தான் பாடி வச்சிட்டு போயிருக்காரு.

ஒருநாள் ஹாஸ்டலுக்கு கீழே இருந்த ஆஞ்சநேயா ஹோட்டல்லே காப்பி குடிச்சிக்கிட்டு இருந்தேனா, அப்ப “மாஞ்சோலை கிளிதானோ? மான்தானோ? வேப்பந்தோப்புக் குயிலும் நீ தானோ?” -ன்னு ‘நிற்பன’. ‘நடப்பன’, ‘பறப்பன’ எல்லாத்தையும் கூவிக் கூவி ஜெயச்சந்திரன் சத்தமா பாடிக்கிட்டிருந்தாரு.

மூளையிலே சட்டுன்னு ஏதோ ஒரு மின்னல் வெட்டுனுச்சு. “நம்மளும் இளையராஜா போல ஆனா என்னா?” இந்த பொல்லாத ஆசை எங்கேந்துதான் பொத்துக்கிட்டு வந்துச்சோ தெரியலே. சீரியஸா நானும் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அதுக்கு கொஞ்சமாச்சும் இசைஞானம் வேணுமே? எந்த வாத்தியத்தை கத்துக்கறதுன்னு மண்டையை போட்டு உடைச்சுக்கிட்டேன். பசங்கக்கிட்ட அட்வைஸ் கேட்டேன். ஆளாளுக்கு இஸ்டத்துக்கு ஒண்ணு சொன்னானுங்க.

“மச்சி ! உனக்கு மீசை தாடி வச்சு தலைப்பாவும் கட்டிப் பாத்தா அப்படியே சர்தார்ஜி மாதிரியே இருப்பே. பேசாம மோர்சிங் வாசிக்க கத்துக்கோயேன்.” நகுதாதான் சொன்னான்.

என் முகம் செவந்து போனதை பாத்துட்டு “சரி..சரி….. கோவிச்சுக்கிடாதே”ன்னு சமாதானம் படுத்திட்டு ஐடியாவும் கொடுத்தான். “மச்சி நீ எதுக்கும் கீழே 13-ஆம் நம்பரு ரூமுலே ரஃபிக்கிட்டே விசாரி. அவந்தான் வீணை நல்லா வாசிப்பான்.”

குஷியா கிளம்பி ரஃபிக்கிட்ட போயி விசாரிச்சேன். “வீணைன்னு நீ ஒரு பேப்பருலே எழுதிக் காண்பிச்சா அத நான் வாசிப்பேன்”னு சென்னான். வழக்கப்படி கொஞ்சம் லேட்டாகத்தான் புரிஞ்சுது நகுதா என்னை கழட்டி விட்டுருக்கான்னு.

எங்கே நான் ஒரு பெரிய மாஸ்ட்ரோவா ஆயிடுவேனோங்கிற பொறாமையிலே அவன் இப்படி பிடரல் காஸ்ட்ரோ மாதிரி வில்லத்தனமா நடந்துக்கிட்டான்னு நெனக்கிறேன்.

யோசிச்சுப் பார்த்தேன். வீணைக்கு எஸ். பாலசந்தர், ஷெனாய்க்கு பிஸ்மில்லாகான், புல்லாங்குழலுக்கு ரமணி, சாக்ஸபோனுக்கு கதரி கோபால்நாத், வயலினுக்கு குன்னக்குடி, தவிலுக்கு வளையப்பட்டி இப்படி இருக்க மாண்டலினுக்கு யாருமே இல்லியே? (அப்போ மாண்டலின் சிரினிவாஸ் பொடியனா இருந்த நேரம்)

“மாண்டலின் கற்றுக் கொள் அதில்தான் உனக்கு பெரிய போட்டி கிடையாது” – பாலச்சந்தர் படத்திலே வர்ற மாதிரி என்னோட மனசாட்சியே கிளம்பி வந்து எனக்கு ஐடியா கொடுத்துச்சு.

“கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்” அப்படின்னு யாரோ பாடி வச்சது வேற ப்ளாஷ் அடிச்சுச்சு.

மெயின்கார்ட் கேட்டுக்குப் போயி மாண்டலின் ஒண்ணு வாங்கிட்டு வந்தேன். வர்ற வழியிலே நகுதாவை பாத்தேன். “கிடார் வாங்குனதுதான் வாங்குனே கொஞ்சம் பெரிய சைஸா பாத்து வாங்குனா இன்னா? உன்னோட சைஸ்லேயே வாங்கிட்டு வந்திருக்கிறியே?-ன்னு கலாய்ச்சான்.

“மவனே இரு. உனக்கு ஒரு நாளிக்கு தனியா வச்சுக்குறேன்”-னு மனசுக்குள்ளே ரகசியமா சொல்லிக்கிட்டேன்.

கஷ்டப்பட்டு சுப்பிரமணியபுரத்துலே சுந்தர் சாரை இசை குருவா கண்டுபுடிச்சேன். A-B-C-D ன்னு சொல்லிக் கொடுக்கறதுக்கு பதிலா மனுஷன் E-A-D-G ன்னு சொல்லிக் கொடுத்தாரு.

ஆளு இங்கிலீஸ்லே கொஞ்சம் ‘வீக்’கோன்னு நெனச்சேன். அப்பறந்தான் புரிஞ்சுச்சு அவரு அந்த வாத்தியத்துலே இருக்குற நாலு ஜோடி கம்பியை பத்தி பாடம் நடத்துனாருன்னு.

முதல்லே அவரு கத்துக் கொடுத்தது A.M.ராஜாவோட “பாட்டுப் பாடவா- ங்கிற பாட்டு. “பாட்டுப் பாடவா?” ன்னு அவரு பாடுவாரு. நான் “டிங்..டிங்..டிங்” ன்னு வாசிக்கணும். அடுத்தாப்புலே “பாட்டு கேட்கவா?” -ன்னு அவரு பாட நான் “டிங்..டிங்…டிங்” -ன்னு வாசிக்கணும். ஈஸியாத்தான் இருந்துச்சு.

இதுதான் மொத நாளு பாடம். “அடுத்த வாரம் கிளாசுக்கு வர்றச்சே நன்னா பிராக்டிஸ் பண்ணிண்டு வந்துருங்கோ”. சுந்தர் சாரு வேட்டியை மடிச்சுகிட்டே அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு.

ஹாஸ்டலுக்கு திரும்பி வர்றப்ப சைக்கிளை வேகமா மிதிச்சிக்கிட்டு வந்தேன். இளைய ராஜா அன்னக்கிளி ஹிட்டான உடனே ஒரு பேட்டியிலே சொல்லியிருந்தாரு. மியுசிக் நம்மள சுத்தி இருக்குதாம். நாய் ‘லொள்’ளுன்னு குரைச்சாலும், கதவு ‘கிரீச்’சுன்னு சத்தம் போட்டாலும், பூனை ‘மியாவ்’ன்னு கத்துனாலும் அது மியுசிக்தானாம்.

சைக்கிள்ளே போவும் போது ரோட்டுலே யாருமே இல்லாத டயத்துலே கூட பித்துக்குளியாட்டம் (பித்துக்குளி முருகதாஸ் தயவு செஞ்சு கோவிச்சுக்க கூடாது) வழி நெடுக்கா ‘கிணிங்..கிணிங்’ன்னு சைக்கிள் பெல்லை அடிச்சுக்கிட்டே போனேன். அந்த சவுண்டுலேயும் ஏதோ ஒரு மியுசிக் இருக்கிற மாதிரியே ஒரு பீலிங். இசை உலகுலே நாமும் ஒரு அங்கமா சங்கமிச்சு விட்டதை நினைக்கிறப்ப பெருமையா இருந்துச்சு.

ஹாஸ்டல் வாசல்லே சைக்கிள்ளேந்து இறங்குனப்போ எல்லாரும் என்னையே பாக்குற மாதிரி இருந்துச்சு. கழுத்துலே மொத்தமான டென்னிஸ் ரேக்கட் மாதிரி என்னோட மாண்டலின் கம்பீரமா தொங்கிக்கிட்டு இருந்துச்சு.

நல்லவேளை வீணை கீணை கத்துக்கலே. இவ்வளவு பெருசா தோளுளே சுமந்துக்கிட்டு சைக்கிள் ஓட்டிக்கிட்டு வந்தா ஹனுமாரு கதயை தூக்கிட்டு வந்த மாதிரி இருந்திருக்கும். பசங்க பாத்தாங்கன்னா ஆஞ்சனேயா ஹோட்டல்லேந்து வடையெல்லாம் வாங்கி வச்சு வடை மாலையை எனக்கு சாத்தியிருப்பானுங்க.

என் கெட்ட நேரம், யாரோட கண்ணுலே மாட்டக்கூடாதுன்னு நெனச்சேனோ அவன் கண்ணுலேயே மாட்டிக்கிட்டேன். நகுதா சொன்னான் “மச்சி.. இப்போ உன்ன பாக்க M.S.விஸ்வநாதன் மாதிரியே இருக்குதுடா”. நம்மள வச்சு காமடி கீமடி பண்றானா? எனக்கு ஒண்ணுமே புரியலே.

ரூமுக்கு போன உடனேயே பிராக்டீஸை ஆரம்பிச்சுட்டேன். “டிங்..டிங்..டிங்”……. டிங்..டிங்..டிங்”… ஓரளவுக்கு வந்துடுச்சு. அப்பாடா.. இசைத்துறையிலே பாதி கிணத்த தாண்டிட்ட மாதிரி ஒரு ஆத்மதிருப்தி.

ரூம்மேட் செய்யதலி A.M.ராஜா மாதிரியே பாடுவான். பாக்க சீனன் மாதிரி இருந்தாலும் தமில் பாட்டு நல்லாவே பாடுவான். அவந்தான் என்னோட இசை ஆர்வத்துக்கு சரியான சமயத்துலே கை கொடுத்தான்.

சீனன் பாட ஆரம்பிச்சான் “பாட்டு பாடவா…????”

“டேய் பாடாதே.. கொன்னுடுவேன்” – அடுத்த ரூமுலேந்து ஒரு அசரீரி

“பாட்டு கேட்கவா?”

“கேட்க மாட்டேன். என்னடா செய்வே?”

கத்துனது யாருன்னு சரியா ஞாபகமில்லே. அநேகமா அதுவும் நகுதாவாகத்தான் இருக்கணும்.

அன்னிக்கி முழுக்க எங்க ரூமிலே “பாட்டுப் பாடவா” தான். அவன் பாட, நான் வாசிக்க, நான் வாசிக்க, அவன் பாட, அடடடடா.. ஒரே ஜுகல்பந்திதான் போங்க. குலாம் அலியும், ரவிஷங்கரும் இணைஞ்ச மாதிரின்னு வச்சுக்குங்களேன்.

அடுத்த நாளு நகுதா நல்ல பிள்ளையாட்டம் என் ரூமுக்கு வந்தான். “ஆஹா.. திருந்திட்டான் போலிருக்கே”-ன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்.

“கன்கிராஜுலேஷன்…! உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே. எங்கே உன் சுரைக்காய்? அதை எடுத்து ‘டொய்ங்… டொய்ங்’ன்னு வாசித்துக் காட்டு”-ன்னு டயலாக் எடுத்து விட்டான்.

பாட்டுப் படிச்சுக்கிட்டேதான் என்னால வாசிக்க முடியும். என் குரலு சுமாராத்தான் இருக்கும். பரவாயில்லையா? –ன்னு கேட்டேன். (இந்த நேரம் பாத்து சீனன் எங்கே போய் தொலஞ்சான்னு வேற தெரியல)

“மச்சான்.. பரவாயில்லை பாடு. எங்களோட இதயம், எதையும் தாங்கும் இதயம்” –ன்னு கோரஸ் பாடிக்கிட்டே நாலைஞ்சு பசங்க திபு..திபு-ன்னு உள்ளார புகுந்தானுங்க. நகுதாதான் செட்டப் பண்ணி கூட்டி வந்திருக்கனும். படுபாவி.

டேக்.. ஒன். ரெடி.. ஸ்டார்ட்.. கோ– சொன்னான் ஒருத்தன்,

“பாட்டுப் பாடவா?” – இது நான்.
“டிங்..டிங்..டிங்” – இது என் மியுசிக்.

பாட்டு கேட்கவா?” – நான்

டிங்..டிங்..டிங். – மியுசிக்

பாடம் சொல்லவா? …………….

பறந்து செல்லவா? ……………..

(நல்லவேளை கடைசி ரெண்டு வரிக்கு டிங்..டிங்..டிங்,, கிடையாது)

முடிச்சதும் கோரஸா ஒன்ஸ்மோர் கேட்டானுங்க பசங்க. அடேங்கப்பா,.. நமக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா? –ன்னு சொல்லிட்டு உற்சாகமா மறுபடியும் வாசிச்சேன். மறுபடியும் ஒன்ஸ்மோர் கேட்டானுங்க.

திடீருன்னு எப்போவோ படிச்ச பாகவதர் ஜோக் ‘ஸ்ட்ரைக்’ ஆச்சு. “ஆஹா,, நாம சரியா வாசிக்கிற வரைக்கும் நம்மள இவனுங்க விட மாட்டானுங்க போலிருக்கே” –ன்னு உஷாராயிட்டேன்.

வாத்தியத்தை எடுத்து பேக்-அப் பண்ணிட்டு “இன்னிக்கி இவ்வளவுத்தான்” ன்னு கச்சேரியை சிம்பிளா முடிச்சிக்கிட்டேன்.

போவும் போது நகுதா “மாப்ளே.. நாளிக்கி எத்தனை மணிக்கி நீ பிராக்டீஸ் ஆரம்பிப்பே?” -ன்னு கரிசனமா கேட்டான். “ஏண்டா கேக்குறே?” ன்னு கடுப்படிச்சேன். “நீ கரெக்ட் டைம் சொன்னா நாங்க அந்த நேரத்துலே ரூமை காலி பண்ணிக்கிட்டு வெளியே போயிடாம்லே அதனாலேதான்”-ன்னு இழுத்தான்.

மறுபடியும் நம்மள வச்சு காமெடி பண்ணுறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு “போங்கடா வெளியே”ன்னு கதவை இழுத்து ‘படார்’ன்னு மூடிட்டேன்.

இவனுங்க கிண்டலுக்கெல்லாம் பயந்துக்கிட்டு நம்மளோட இசைப்பயணத்தே பாதியிலே நிறுத்திடக் கூடாதுன்னு அன்னிக்கி மங்கம்மா மாதிரி சபதம் எடுத்தேன்.

அடுத்தடுத்த கிளாஸ்லே சுந்தர்சார் ராகத்தோட பேரையெல்லாம் கத்துக் கொடுத்தாரு. தெரிஞ்ச சினிமா பாட்டையெல்லாம் ஞாபகப் படுத்தி இது என்னா ராகம்?, அது என்னா ராகம்?-ன்னு குடைஞ்சு மனப்பாடம் பண்ணி வச்சுக்கிட்டேன். பசங்க கேட்டா ‘டக்’குன்னு சொல்லலாம்லே?

சும்மா சொல்லக்கூடாது, ட்யூஷனுக்கு போனா சாரோட அம்மா நல்லாவே கவனிப்பாங்க. “அம்பி.. சூடா ஒரு பில்டர் காபி போட்டுத் தாரேன் ஷாப்ட்டு போப்பா”ன்னு உபசரிப்பாங்க.

ஒருநாளு ட்யூஷன் நடந்துக்கிட்டு இருக்கிறப்போ சுந்தர்சாரு ‘புசுக் புசுக்’குன்னு ரெண்டு மூணு தடவை பாத்ரூம் போயிட்டு போயிட்டு வந்தாரு. வவுத்தாலே போவுதுன்னாரு.

அந்த நேரம் பாத்து “சாரு வீட்டுலே இருக்காரா?”-ன்னு ஒரு பையன் தேடி வந்தான். சாரு உள்ளார “காம்பேதி” ராகம் பாடிக்கிட்டு இருக்காருன்னு சொல்லிப்புட்டேன். சார் காதுலே வாங்கிட்டாரோ என்னவோ. அன்னியிலேந்து ராகத்தோட பேரு கத்துக் கொடுக்கறதையே நிறுத்திப்புட்டாரு.

“நுதலும் தன் வாயால் கெடும்”ன்னு சொல்லுவாங்களே. அது இதுதான் போலிருக்கு.

ஒருநாளு ப்ரண்ட்ஸ்ங்களோட கிளாஸை கட்டடிச்சுட்டு ராதா கபேயிலே உக்காந்து காபி குடிச்சிக்கிட்டு இருந்தேன். பேக்கிரவுண்டுலே “மச்சானை பாத்தீங்களா.?” ன்னு ஜானகியம்மா குத்துப்பாட்டு பாடிக்கிட்டு இருந்தாங்க.

“பாவம் இந்தம்மாவும் தெனைக்கும் அவுக மச்சானை பாத்தியளா, மச்சானை பாத்தியளான்னு தேடிக்கிட்டு இருக்காக. எவனாச்சும் தேடி கொடுக்குறானா பாத்தியா..?” பின்னாள்லேந்து ஒரு கமெண்ட்.

எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு திரும்பி பாத்தா நகுதா சைத்தான் நின்னுக்கிட்டு இருந்தான். “மச்சான் இந்தப் பாட்டு எந்த ராகத்துலே போட்டுருக்கானுங்க?” என்னைப் பாத்துத்தான் கேட்டான். இவன் நம்மள கூடு விடுறான்னு ஒரே டேக்குலேயே புரிஞ்சுப் போச்சு.

ஆஹா.. நாம ஒண்ணு ரெண்டு ராகத்தோட பேரை சாருக்கிட்டே கத்துக்கிட்டு வந்த நியூஸை எவனோ இவன்கிட்ட போட்டுக் கொடுத்துட்டாங்குறதே கெஸ் பண்ணிட்டேன்.

“இது எந்த ராகம்? அது எந்த ராகம்?”-ன்னு நிறைய பாட்டோட குலம், கோத்திரத்தை தெரிஞ்சு வச்ச நான், இத மாத்திரம் கேக்காம உட்டுப்புட்டேன். இப்ப செமத்தியா இவங்கிட்டே மாட்டிக்கிட்டேன்.

“வாங்க.. வாங்க.. கிளாசுக்கு நேரமாயிடுச்சு”-ன்னு ப்ரண்ட்ஸ்ங்களை கூட்டிக்கிட்டு மெதுவா நழுவிட்டேன். அப்பாடா.. இன்னிக்கி ஒரு வழியா இந்த சைத்தான்கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்ன்னு ஒரே சந்தோஷம்.

நானும் என் பங்குக்கு இவனுக்காக ஏதாவது வேட்டு வைக்கணுமே? இவனுக்கு ஏதாவது பட்டப்பெயர் வச்சாத்தான் சரிப்பட்டு வருவான்னு நெனச்சேன். நகுதா எப்பப் பார்த்தாலும் மூக்கை சிந்திக்கிட்டே இருப்பான். சுந்தர்சாருக்கிட்டே கத்துக்கிட்ட ராகத்தோட பேரு இப்ப எனக்கு கைக்கொடுத்திச்சு. என் ஆத்திரம் தீர அவ்னுக்கு “சிந்து பைரவி”ன்னு பட்டப்பெயர் வச்சிட்டேன். அது பேமஸ் ஆயிடுச்சு.
ஒரு நாள் D.J. சாரு கிளாஸ்லே இங்கிலீஷ் பாடம் நடத்திக்கிட்டு இருந்தப்போ “சார். இவன் மாண்டலின் நல்லா வாசிப்பான்”னு

குணசேகரன் போட்டு குட்டை உடைச்சுட்டான்.

“வெரிகுட்..வெரிகுட் நாளிக்கே வந்து ட்ரூப்லே சேர்ந்துடு”ன்னாரு. காலேஜ்லே மியுசிக்குக்கு D.J. தான் இன்சார்ஜ். படு ஜாலியான ஆசாமி.

காலேஜ்லே D.J. இங்கிலீஷ் கிளாஸ் நடத்தும்போது கூட தெனைக்கும் ஒரு திருக்குறள் போர்ட்டுலே எழுதிட்டுத்தான் ஆரம்பிப்பாரு. அவரோட இந்த பழக்கம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. ஆங்கில இலக்கியம் கத்துக் கொடுக்குற ஒரு வாத்தியாரு தமிழ் மேல இப்படி ஒரு பக்தி வச்சிருக்காருன்னா அத பாராட்டணும்தானே?

ஒருநாளு “உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு” – ன்னு எழுதி வச்சாரு.

ஒரு மாணவன் எழுந்திச்சு “சார் நாடா சார்…?” – ன்னு கேட்டான். “ ஆமாம் நாடுதாண்டா”ன்னு கூலா பதில் சொன்னாரு. மறுபடியும் எழுந்து “நாடா சார்….?”-ன்னு கேக்க கடுப்பாயிட்டாரு. “நாடு…. நாடு.. நாடு… எத்தனை தடவை சொல்லுறது?” அப்டின்னு சத்தம் போட்டாரு.

அப்பத்தான் நானும் கவனிச்சுப் பாத்தேன். அவரோட அண்டர்வேரோட ‘நாடா’ பேண்ட்டுக்கு வெளியே தொங்கிக்கிட்டு இருந்திருக்கு. அதத்தான் அவன் அப்பத்திலிந்து “நாடா சார்.. நாடா சார்”ன்னு உஷார் படுத்துயிருக்குறான். ரொம்ப நேரம் கழிச்சு புரிஞ்சுக்கிட்ட வாத்தியார் நாடாவை எடுத்து உள்ளே விட்டுக்கிட்டு தர்மசங்கடுத்துலே நெளிஞ்சு அப்பறம் ஒரு மாதிரியா சமாளிச்சிட்டாரு.

D.J. சாரு, சொன்னாமாதிரியே என்னை மியுசி ட்ரூப்லே சேத்துக்கிட்டாரு. போனதுக்கு அப்புறந்தான் தெரிஞ்சது மியுசிக்குலே கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்குன்னு. ‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ன்னு சொல்லுவாங்களே அது ரொம்ப ரொம்ப கரெக்ட்டு.

மியுசிக் ரிகர்ஸல் நேரத்துலே நிறைய வேடிக்கையெல்லாம் நடந்திருக்கு. பாடகனா ஆவணும்னு நெறைய பேரு செலக்க்ஷன் ஆகுறதுக்காக வருவானுங்க. “சம்சாரம் என்பது வீணை”ங்குற பாட்டை ஒருத்தன் பாட ஆரம்பிச்சுட்டு “மணம், குணம்.. மணம், குணம்-ங்குற இடத்துலே திக்கிக்கிச்சு. அதுக்கு மேலே மேட்டரு வரல்லே. “காரம் மணம் குணம் நெறஞ்சது TVS மார்க் ரத்தினம் பட்டணம் பொடி”ன்னு D.J.சாரே முடிச்சு வச்சாரு.

இன்னொருத்தன் பந்தாவா வந்து ஆராதனா படத்துலே வர்ற “கோரா காகஸ்கா” –ங்கற பாட்டுலே வர்ற “ஆஹா.. ஏஹே.. ஓஹோ”-ன்னு தொகையறாவை இழுத்துட்டு சம்மந்தமே இல்லாம “ரூப் தேரா மஸ்தானா”–ங்குறா இன்னொரு பாட்டோட பல்லவியை ஆரம்பிச்சான் பாருங்க D.J. வாழ்க்கையே வெறுத்துட்டாரு.

காலேஜ் மியுசிக் ட்ரூப் ஒரு அருமையான டீமா அமைஞ்சிருந்துச்சு. பாட்டுப் பாட சுரேஷ். லீட் கிடாருக்கு சுரேஷ் பாபு, லீட் வயலினுக்கு ரமேஷ், பேஸ் கிடாருக்கு ராபர்ட் – இன்னும் ஆர்கன், ரிதம் கிடார், ட்ரம் செட், ரோட்டோ ட்ரம், காங்கோ, பேங்கோஸ், பெர்க்யூஷன்னு சொல்லிட்டு ஒரு முழு செட்டப்பே இருந்துச்சு. மாண்டலினுக்கு வேறு வழி இல்லாம என்னை போட்டிருந்தாங்க. “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம்பூ சக்கரை”ம்பாங்களே அது மாதிரி.

“அடுத்தாத்து அம்புஜத்தே பாத்தேளா”-ங்குற பாட்டை கிடாருலே சுரேஷ் பாபு தனி ஆவர்த்தனம் பண்ணுவான் பாருங்க.. அப்பப்பா.. “என்னத்தெ செய்வே?” “அடக்கி வைப்பேன்”, “அதுக்கு மேலே..?” “பல்லை உடைப்பேன்” அத தொடர்ந்து ஒரு சிணுங்கலான அழுகை- இது எல்லாத்தையும் ஒண்ணு விடாம அப்படியே அவன் வாசிக்கும்போது ஆடியன்ஸ் பயங்கரமா கைத்தட்டுவாங்க.

“வான் நிலா, நிலா அல்ல” பாட்டுக்கு ரமேஷ் வயலின் வாசிச்சான்னா ஒரிஜினல் ரிகார்ட் பீஸை கேக்குற மாதிரியே இருக்கும்.

பாம்பே டூ கோவா -ங்குற படத்துலே வர்ற “தேகானா”, “எக் தின் பித் ஜாயேகா மாட்டீக்கே மோல்”-ங்குற முகேஷ் பாட்டு, ஷோலே படத்துலே “மெஹ்பூபா, மெஹ்பூபா” இதெல்லாம் பாடி செயின்ட் ஜோஸப் காலேஜ், தேவர் ஹால், தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அங்கங்கே நடந்த அனைத்து கல்லூரி போட்டியிலே நாங்கத்தான் முதல் பரிசை தட்டிக்கிட்டு வருவோம்.

சில சமயத்துலே D.J. சாரே கெஸ்ட் ஆர்டிஸ்ட்டா மேடையிலே வந்து அக்கார்டின் வாசிப்பாரு. மனுஷன் போட்டு அசத்துவாரு.

ஒரு ஏழெட்டு பாட்டோட BGM பீஸ் துக்கடா துக்கடாவா தெரிஞ்சு வச்சிக்கிட்டு நானும் ஒரு பெரிய இசை கலைஞனாட்டம் மூணு வருஷத்தை எப்படியோ ஓட்டினேன்.

எங்க மியுசிக் ட்ரூப் நிறைய பரிசை தட்டிக்கிட்டு வந்ததைப் பாத்து நகுதா வாயடைச்சு போயிட்டான். நான் ‘கூட்டத்தோட கோவிந்தா’ போடுற சமாச்சாரம் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அவன் கண்ணுக்கு நான் மியுசிக்லே ஒரு பெரிய மேதாவி. என்னை பப்பி லஹ்ரி ரேஞ்சுக்கு புகழ ஆரம்பிச்சுட்டான். வித்தியாசம் என்னான்னா அவரு ஒரு அரை கிலோ வெயிட்டுலே செயின், டாலர், மோதிரம். பிரேஸ்லெட்டுன்னு மாட்டிக்கிட்டு அலைவாரு. நான் ஒண்ணுமே போடாம அலைஞ்சேன். (இருந்தாத்தானே போடுறதுக்கு?)

காலேஜ் லைப் முடிஞ்ச பிறகு அந்த மாண்டலினை தொட்டுக்கூட பாக்கலே. ஏன்னா கம்மி அறுந்துப் போனா மாட்டத் தெரியாது. ட்யூனிங் பண்ணக்கூட தெரியாது. என்னோட மாண்டலின், வீட்லே ஒரு மூலையிலே கம்பியெல்லாம் அறுந்து பரிதாபமா கெடந்துச்சு. ஒரு தடவை என் தங்கச்சி பர்வீன், கையிலே வச்சுக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கறதுக்கு அது உபயோகமா இருந்துச்சு. ஒரு நாளு என் பாட்டி குளிக்கறதுக்கு தண்ணி சுட வைக்கிறேன்னு சொல்லிட்டு விறகுக்கு பதிலா அத வச்சு எரிச்சுட்டாங்க.

அந்த விஷயம் கேள்விப்பட்டதுமே எனக்கு ரொம்ப வருத்தமா போயிடிச்சு. இன்னொரு பக்கம் சந்தோஷமா இருந்துச்சு, ட்யூனிக் ப்ண்ணுற டென்ஷன் ஒழிஞ்சுச்சேன்னு.

அதுக்கப்புறம் எத்தனையோ வருஷம் கழிச்சு நகுதாவை மெட்ராஸ்லே வச்சு சந்திச்சேன். ஒரு பேமஸ் காலேஜ்லே காமர்ஸ் புரோபஸரா வேலை பாக்குறதா சொன்னான்.

“மச்சான் காலேஜ்லே படிக்கும்போது உன்னைப் போட்டு பயங்கரமா கலாட்டா பண்ணுனேன். அந்த பாவமோ என்னமோ தெரியலே இப்ப என் ஸ்டூடண்ட்ஸ் என்னைப் போட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறானுங்க. பேசாம சிங்கப்பூருக்கு ஓடிடலாமான்னு இருக்கேன்”னு சொன்னான். பாக்க பாவமா இருந்துச்சு. அவ்னுக்காக பரிதாபப்பட்டேன்.

கடைசியா “சரி மாப்ளே போயிட்டு வர்றேன்”னு சொல்லிட்டு கிளம்பினேன். போவும்போது, “மச்சி.. அந்த பாட்டு பாடவா பாட்டை ஒரு தடவை பாடி காண்பியேன். என்றான்.

“போடா….ங்..”

ஊஹும்…… இவன் இந்த ஜென்மத்திலே திருந்தவே போறதில்லேன்னு முடிவு செஞ்சிட்டேன்.

நன்றி : திண்ணை

தைலம்

Tiger Balm

Thursday October 4, 2007

– அப்துல் கையூம் 

 டெரிக் ஓ பிரெயின் குழந்தைகளுக்கு பொது அறிவுப் போட்டி நடத்த பஹ்ரைன் வந்தபோது, ஒரு துண்டுச்சீட்டில் “தைலத்தை கண்டுபிடித்தது யார்?” என்ற கேள்வியை எழுதி நான் தயாராக வைத்திருந்தேன். ஒருக்கால் அவருக்கு தெரியாமல் போனாலும் கூட யாரிடத்திலிருந்தாவது சரியான விடை உதித்து வந்து, நம்முடைய சந்தேகம் தீராதா என்ற நப்பாசை மிகுந்திருந்தது.

வேறென்ன? யார் கண்டு பிடித்தார்கள் என்ற உண்மை தெரிந்தால் அவர்களை மனதார திட்டித் தீர்க்கலாமே என்றுதான். என்னுடைய கணிப்பில் சீன தேசத்தைச் சேர்ந்த யாராவது கண்டுபிடித்திருக்க வேண்டும். யார் கண்டது? அது சீன யாத்ரிகர் ஹுவான்-சுவாங் ஆகவும் இருக்கலாம்.

புகையிலை, சிகரெட், மூக்குப்பொடி, சுருட்டு போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களையாவது திருத்தி விடலாம். ஆனால் இந்த தலைவலி தைலத்திற்கு அடிமையானவர்களை திருத்தவே முடியாது போலிருக்கிறது.

என் சொந்த ஊர் நாகூரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் பாம் கலாச்சாரம் சற்று அதிகமாகவே தலைவிரித்தாடியது. ஆமாம். டைகர்பாம் கைவசம் வைத்திருக்காத வீடுகளே இல்லை எனலாம்.

இந்தியத் தயாரிப்பிலும் அமிர்தாஞ்சன், சந்து பாம், இமாமி பாம் என்று ஏகப்பட்ட இத்யாதிகள் மலிந்திருந்தன. தைலம் என்ற வார்த்தைக்கு இணையாக நானும் ஆங்கிலத்தில் தேடித்தேடி பார்த்தேன். ஆயில், ஆயின்மெண்ட், லினிமெண்ட், பாம் என்ற வார்த்தைகள் இருக்கிறதே தவிர பொருத்தமான பதம் இல்லவே இல்லை.

வெளிநாட்டில் இருக்கும் தன் மகன் ஊருக்கு வருகின்றான் என்றால் தாய் சொல்லுவாள் “தம்பி வரும்போது குருவித் தைலம், பச்சை தைலம், கிளி தைலம், கோடாலித் தைலம், மீசைக்காரத் தைலம், ஒமேகா தைலம், டைகர் பாம், ஒடுக்கலாம் இதெல்லாம் மறக்காம வாங்கிட்டு வந்துவிடு” என்று அறிவுரை கூறுவாள்.

என் ஊர்க்காரர்கள் தாயகம் திரும்பும்போது பெட்டியில் பாஸ்போர்ட் எடுத்து வைக்க மறந்தாலும் மறப்பார்களே தவிர இந்த அயிட்டங்களை மறக்கவே மாட்டார்கள்.

துபாய், மலேசியா, சிங்கப்பூரிலிருந்து புறப்படுபவர்கள் அங்கு கடைக்காரரிடம் சென்று “ஊருக்கு போகிறேன்” என்று சொன்னாலே போதும். கடைக்காரர் அவராகவே இந்த சாமான்கள் அனைத்தையும் எடுத்து ரெடி பண்ணி வைத்திடுவார்.

மணப்பெண்ணாக புகுந்த வீடு வந்த என் மனைவி சீர் செனத்தியுடன் ஒரு பாட்டில் டைகர் பாமையும் சீதனமாக கொண்டு வந்தாள். நமக்கு பாம் என்றாலே படு அலர்ஜி. கல்யாணமான சில நாட்களில் அவளுக்கு தலைவலி வந்து விட்டது போலும். (இப்படி மூச்சு விடாமல் நான் பேசினால் வராமல் என்ன செய்யும்?) குன்னக்குடி வைத்தியனாதன் பட்டையாக திருநீரு பூசிக் கொள்வாரே அது மாதிரி பூசிக் கொண்டாள். அப்புறம் நான் ஏன் பள்ளியறை பக்கம் போகிறேன்?

தேன் நிலவுக்கு ஊட்டிக்கு போனோம். தனியாகவா? என்று கேட்காதீர்கள். ஜோடியாகத்தான். எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு புது மனைவியாச்சே ஏதாவது புடவை வாங்கி கொடுக்கலாமே என்று நினைத்து “என்ன வேண்டும்?” என்று ஆசையாக கேட்டபோது அவள் குதுகூலமாக சொன்ன பதில் “இங்கு நீலகிரி தைலம் கிடைக்குமாமே? வாங்கித் தாரீங்களா..? “ஏண்டா கேட்டோம்” என்று ஆகி விட்டது.

இதாவது பரவாயில்லை சிங்கப்பூருக்கு ஒருமுறை சுற்றுலா சென்றோம். அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் சாண்டோசா தீவு, மிருகக் காட்சி சாலை, பறவைகள் பூங்கா, மீன் பண்ணை, ஊர்வன பூங்கா, லிட்டில் இந்தியா என்று எத்தனையோ இடங்கள் இருந்தன. என் மனைவி கறாராக சொன்னால் “எதை நீங்கள் சுற்றி காண்பிக்கிறீர்களோ இல்லையோ எனக்கு கட்டாயமாக டைகர் பாம் தோட்டத்தை சுற்றிக் காண்பித்து விடுங்கள்”. டைகர் பாம் தோட்டத்தில் இலவசமாக அள்ளி கொடுப்பார்கள் என்று நினைத்து விட்டாலோ என்னவோ.

என் உறவுக்காரர் ஒருவர் அவரது அத்தைக்கு பயணத்திலிருந்து வந்த போது நிறைய சாமான்கள் வாங்கி வந்திருந்தார். ஆனால் தைலம் மாத்திரம் கொடுக்க மறந்துவிட்டார். அவ்வளவுதான். பெரிய குடும்ப பகையே ஏற்பட்டு விட்டது.

புத்திசாலித்தனமாக மினியேச்சர் சைஸிலும் தைலம் பாட்டில்களை கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். பெண்களின் டம்பப்பையில் லிப்ஸ்டிக், கண்ணாடி, சீப்பு, இதர மேக்கப் சாமான்களுடன் இந்த பாழாய்ப் போன தைலக்குப்பியும் பிரதானமாக இடம் பெற்று விடுகிறது.

எந்த இங்கிலீஷ்காரனோ அல்லது காரியோ பையிலே கோடாலித் தைலம் பாட்டிலை வைத்துக் கொண்டு அலைந்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த தைலத்தை இந்தியர்களை கெடுப்பதற்காகவே சீனாக்காரன் கண்டுபிடித்திருக்கான் போலும்.

ஒருமுறை என் நண்பர் தலைவலி மிகுதியால் கடையில் நின்று தலையில் தைலத்தை தடவிக்கொண்டிருக்க, அங்கு வந்த ஒரு அரபி நண்பர் “ஷினு ஹாதி?” (பொருள் : என்ன இது?) என்று கேட்க, அந்த பாட்டில் சமாச்சாரத்தை அப்படியே உள்ளங்கையில் கொட்டி ஏதோ பன்னீரை எடுத்து பூசுவதைப்போல முகம் முழுதும் பூசிக் கொண்டார்.

அதற்குப் பிறகு சொல்லவும் வேண்டுமா? மூன்றாம் பிறையில் க்ளைமாக்ஸ் காட்சியில் கமலஹாசன் குரங்கு சேஷ்டை செய்வாரே அது போல செய்த வண்ணம் “ஹா..ஹா..ஹூ…ஹூ..” என்று குதிக்க ஆரம்பித்து விட்டார். பாவம். இதற்கு முன் இந்த தைலம் சமாச்சாரத்தை வாழ்க்கையில் அவர் பார்த்ததே இல்லையாம். கடைசியில்தான் சொன்னார். போகும்போது கடுப்பாகி “வல்லா ஹிந்தி முக் மாஃபி” என்று திட்டிவிட்டு போயிருக்கிறார்.

ஒருமுறை ரதி மீனா சொகுசு பேருந்தில் சென்னையிலிருந்து நாகூருக்கு பிரயாணம் செய்துக் கொண்டிருந்தேன். என் கையில் நாகூர் ரூமியின் “அமைதியைத் தேடி” என்ற புத்தகம் இருந்தது. லயித்துப் போயிருந்தேன். பின் இருக்கையில் யாரோ தைலத்தை தடவ ஆரம்பித்தார்கள். ஏசி காற்றிலே நெடி கும்மென்று தூக்கியது. பஸ் முழுதும் விஷவாயு பரவியது போல் இருந்தது.

சற்று நேரத்தில் என் முன் இருக்கையில் இருந்த பெண்மணியும் எடுத்து பூச ஆரம்பித்து விட்டார். ஒட்டுவார் ஒட்டி என்பார்களே அது இதுதானோ? நன்றாக இருந்த எனக்கும் தலைசுற்றுவதைப் போல் ஓர் உணர்வு. மற்றவர்கள் பூசும் தைலத்தை முகர்ந்துக் கொண்டு பயணம் செய்வதை விட நாமே எடுத்து பூசிக் கொள்ளலாமே என்றிருந்தது. இனிமேல் எங்கே அமைதியை தேடுவது? புத்தகத்தை எடுத்து பேசாமல் மூடி வைத்து விட்டேன்.

சில நாட்களுக்கு முன் என் ஏழு வயது மகள் மோனா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். உலகம் சுற்றும் வாலிபன் படம் ஓடிக் கொண்டிருந்தது. டைகர் பாம் தோட்டத்தை சுற்றிச் சுற்றி எம்.ஜி,ஆர், “சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா” என்று பாடிக் கொண்டிருந்தார். மோனா மிகவும் ரசித்தபடி காட்சியில் மூழ்கியிருந்தாள். நான் ஓடி வந்து டிவியை நிறுத்தி விட்டேன். மகள் அழுதுக் கொண்டே தாயிடம் சென்று முறையிட, கனல் தெறிக்க வந்து “டிவியை ஏன் ஆஃப் செய்தீர்கள் என்று என் மனைவி கேட்க, என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் ‘ஆடு திருடிய கள்ளன்’ போல் முழி முழி என்று முழித்தேன்.

தலைவலி வந்தால் தலையில் எரிச்சல் ஏற்படும், பாராஸிடமால் மாத்திரை சாப்பிட்டால் ஓடியே போய் விடும். இந்த பாம், தைலம் சமாச்சாரங்கள் இன்னும் எரிச்சலை ஏற்படுத்தி விடுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. சின்ன எரிச்சலை பெரிய எரிச்சல் விழுங்கி விடுவதால், நிவாரணம் கிடைத்து விட்டதைப் போல் ஒரு போலியான உணர்வு. அவ்வளவேதான்.

இப்படி நான் சொல்லுவதால் யாராவது என்னை நம்புவார்களா என்றால் நிச்சயம் நம்பப் போவதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். இந்த உலகம் உள்ளவரை தைலத்தின் மோகம் அடங்கப் போவதில்லை. அதுவரை என்னைப் போன்றவர்கள் சகித்துத்தான் ஆக வேண்டும்.

 நன்றி : திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=70710041&format=html

மீசை

Moustache

 Thursday September 20, 2007

 அப்துல் கையூம்

(மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்)

 சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான்.

 மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பளிப்பூச்சியை மோவாயில் சுமந்துக் கொண்டு திரிவதென்றால் எரிச்சலாக இருக்காதா பின்னே?

 “ஆம்பளைன்னா அவனுக்கு மீசை இருக்கோணும்” இப்படி அதிகப்பிரசிங்கித்தனமாக அறிவுறுத்தும் ஆசாமிகளைக் கண்டால் எனக்கு பற்றிக் கொண்டு வரும். இப்படி ஒரு பார்முலாவை ஒரு பேச்சுக்கு உண்டாக்கி வைத்துச் சென்ற அந்தக் கால பெருசுகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். எனக்கென்னமோ மீசை என்ற வார்த்தையே தமிழ் வார்த்தைபோல் தோன்றவில்லை. வடமொழியாக இருக்கலாமோ?

 மீசைக்கு நம்மவர்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து விட்டார்களோ என்று சில சமயம் எண்ணத் தோன்றும். ஆங்கிலேயர்களோ, மற்ற நாட்டினரோ மீசை இருந்தால்தான் ஆண்பிள்ளை என்று சொல்ல நாம் கேள்விப்பட்டதில்லையே?

 முறுக்கிய மீசை வானத்தை பார்த்தவண்ணம் இருந்தால் வீரத்தின் எதிரொலி என்று அர்த்தமாம். என்ன அநியாயம் இது? சீனர்களுடைய மீசை பூமியை பார்த்த வண்ணம் புடலங்காய் போல தொளதொளவென்று தொங்கிய வண்ணம் காட்சி தரும். அவர்கள் இனத்தில் வீரர்கள் இல்லவே இல்லையா? பூனைக்குகூட மீசை இருக்கிறதே? அது என்ன பெரிய வீரனா? மீசையே இல்லாத ஜான்ஸிராணியை வீரத்தின் உதாரணமாக நாம் சொல்வதில்லையா?

 பிளாஷ் பேக் – எனக்கு என் வீட்டில் பெண் பார்க்க அலைந்தார்கள். இந்தி நடிகன் போல் ஸ்டைலாக காட்சி தரவேண்டும் என்ற காரணத்துக்காக நான் மீசையை மழித்துக் கொண்டிருந்தேன். “ஏம்பா நீ மீசை வச்சா என்னா?” என் தகப்பனாருடைய தொந்தரவு தாங்க முடியவில்லை. “இது என்ன இது பொறிச்ச வாடா மாதிரி” என் பாட்டியின் தோழி அய்ஷானுடைய குசும்பு. இந்த நக்கல் ஓவர்தானே?

 “பெண் வீட்டாருக்கு கொடுக்க வேண்டும் உன் போட்டோவை அனுப்பி வை” என்று என் தகப்பனார் கடிதம் எழுதியபோது மீசை இல்லாத போட்டோவைத்தான் அனுப்பி வைத்தேன். பார்த்து முகம் சுளித்திருப்பாரோ என்னவோ?

கல்யாணத்திற்குப் பின் ஒருநாள் என் மனைவி சொன்னாள். “உங்க போட்டோவை முதன் முதலில் பார்த்தபோது 16-வயதினிலே படத்தில் வர்ற டாக்டர் மாதிரியே ஸ்டைலா இருந்துச்சா, எனக்கு மிகவும் புடிச்சுப் போச்சு.” அட்றா சக்கை. எனக்கு அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. காலம் முழுக்க மீசையே இல்லாமல் ஜாலியாக பொழுதைக் கழிக்க சால்ஜாப்பும் லைசன்சும் கிடைத்த ஏகபோக ஆனந்தம் எனக்கு.

மீசை வைப்பவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட மீசை இல்லாதவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. மீசையை ஒதுக்குகிறேன், ட்ரிம் செய்கிறேன் என்று கூறி பாத்ரூமில் பாதி நேரத்தை செலவழித்து விடுவார்கள். பொன்னான நேரத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் இந்த மீசை இல்லாதவர்கள் என்று நான் மார்தட்டிச் சொல்ல முடியும்.

போன்சாய் என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை சமீபத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் மீசையை பற்றி இப்படி எழுதியிருந்தேன்.

 இன்றோடு போகட்டும்
இந்த நச்சரிப்பு மீசை

உதட்டோரம் எனக்கு
வீண் சுமை

வெறுமனே ஒரு
முகப்புத் தோரணம்

முணுமுணுக்கும்
கம்பளிப் பூச்சி

உண்மையைச் சொன்னால் .. ..

மோக யுத்தத்தில்
முத்தத்தின் எதிரி

இதைப் படித்துப் பார்த்த என் சித்தப்பா டாக்டர் அப்துல் ரசாக்கிற்கு என்ன ஆத்திரமோ தெரியவில்லை.

மீசை
மோக யுத்தத்தில்
முத்தத்தின் எதிரி

என்று எழுதியிருந்தாய். மீசை செய்யும் குறும்பை நீ அறியமாட்டாய் என்று விமர்சனம் செய்து எழுதி இருந்தார்.

அவர் கறுகறுவென்று தடிமனான மீசை வைத்திருப்பார். அவருடைய அனுபவத்தை அவர் சொல்லியிருக்கிறார். நாம் ஏன் அநாவசியமாக விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பானேன் என்று பேசாமல் இருந்து விட்டேன்.

சினிமாவில் காமெடி செய்வதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு உபகரணம் அல்லது யுக்தி இந்த மீசை என்பது நான் வைக்கும் வாதம். சந்திரபாபு, ஏ.கருணாநிதி, தங்கவேலு, நாகேஷ் இவர்களுடைய மீசையைப் பார்த்தாலே ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.

பழைய கறுப்பு வெள்ளை படங்களiல் ஹாஸ்ய நடிகர் “துடிக்கிறது என் மீசை” என்று வீர வசனம் பேசுவார். ஒட்டு மீசை துள்ளி கீழே விழும். தியேட்டரில் சிரிப்பு அலைமோதும். சமீபத்தில் வெளிவந்த 23-ஆம் புலிகேசி என்ற படத்தில் வடிவேலுவின் நடிப்பை விட அவருடைய கொடுவா மீசையின் நடிப்புக்கே பெரும் வரவேற்பு கிடைத்தது. (போதாதக்குறைக்கு கிச்சுகிச்சு மூட்ட மீசைக்கு மேலே இரண்டு பூக்கள் வேறு. கொடுமையடா சாமி)

மீசை என்ன பொல்லாத மீசை? அதே போன்சாய் தொகுப்பிலே இன்னொரு கவிதை இப்படி எழுதியிருந்தேன்.

மீசை முளைத்தோரெல்லாம்
பாரதி என்றால்
எனக்கும் ஆசை
கவிதை வடித்திட .. ..

இப்படிக்கு பாசமுடன்
கரப்பான் பூச்சி

ஒரு சமயம் சலூனில் அமர்ந்து படுஜாலியாக மீசையை மழித்துக் கொண்டிருந்தபோது வானொலியில் அந்த பழைய பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.

மணமகள் தேவை – நல்ல
மணமகள் தேவை

ஆணழகன் ஒருவனுக்கு
அரும்பு மீசைக் காரனுக்கு
தேவை தேவை தேவை
மணமகள் தேவை

எனக்கு எரிச்சலாக வந்தது. அரும்பு மீசை இருந்தால் அவன் ஆணழகனா? இந்த பாடலை எழுதிய கவிஞனிடம் நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கத்தோன்றியது. பென்சிலால் வரைந்ததுபோல் சிலர் மெல்லிய மீசை வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் அரும்பு மீசையாம். இது மோவாயில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதற்குப் பெயர் மீசையா? பேனாவும் பேப்பரும் கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா? இப்படியெல்லாம் மனதுக்குள் கொதித்துப் போவேன்.

ஹிட்லர் மீசை, மா.பொ.சி மீசை, வீரப்பன் மீசை. என்று சிலருடைய மீசை மிகவும் பிரபலமாகி விட்டது. மா.பொ.சி. இவ்வளவு பெரிய மீசையை வைத்துக் கொண்டு உண்ணுவதற்கும் பருகுவதற்கும் மனுஷர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.

மீசை முருகேஷ் என்ற அருமையான இசைக் கலைஞர். எல்லா விதமான பக்க வாத்தியங்களும் இவருக்கு அத்துப்படி. வாயினாலேயே எல்லா விதமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸும் கொடுப்பார். அவருடைய அபரிதமான இசைஞானத்திற்கு அவருக்கு கிடைத்த பாராட்டுதல்களைவிட அவருடைய மீசைக்கு கிடைத்த பாராட்டுதல்களே அதிகம். மீசை இன்று இருக்கலாம் நாளை காணாமல் போகலாம். இதுக்குப்போய் இத்தனை ஆரவாரமா? என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.

“மீசைக் கவிஞன் பாரதி” என்று கவிஞர்கள் பாராட்டும் போது எனக்கு கோபம் கோபமாக வரும். அவனுக்கு மீசை இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? அவன் எழுதிவைத்திருப்பதை பாராட்டுவதை விட்டுவிட்டு அனாவசியமாக மீசையை பெரிதுப் படுத்தி புகழ்கிறார்களே என்று ஆத்திரம் வரும்.

நானும் சில உண்மைகளை வெளiப்படையாகச் சொல்லத்தான் வேண்டும். என்னதான் மீசை மீது ஒரு வெறுப்பிருந்தாலும் அவ்வப்போது மீசை வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்ததென்னவோ உண்மைதான். அந்த ஆசை அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.

வெளிநாட்டில் வசிக்கும் நான் ஒருமுறை தாயகம் புறப்பட ஆயத்தமாகும் தறுவாயில் மீசையோடு ஊருக்குப் போனால் சற்று வித்தியாசமாக இருக்குமே என்று மீசை வளர்த்தேன். இதற்காக மெனக்கெட்டு எந்தவிதமான முயற்சியோ கஷ்டப்படவோ இல்லை. ஒண்ணுமே செய்யாமல் சிவனேன்னு இருந்தேன். அதுவாக வளர்ந்து விட்டது. ஓரளவு வளர்ந்த பிறகு மீசையை அழகு படுத்தலாமே என்று முனைந்து ஒதுக்க ஆரம்பித்தேன். அது என்னடாவென்றால் ஒரு பக்கம் பெரிதாகவும் மற்றொரு பக்கம் சிறிதாகவும் போய்விட்டது. மேலும் என் திறமையை காண்பிக்கப்போக, குரங்கு அப்பத்தை பிய்த்த கதையாக அது ஹிட்லர் மீசையாட்டம் அலங்கோலமாக போய்விட்டது. அன்று மீசை மீது எனக்கு வந்த கோபம் சொல்லிமாளாது. மீசை என்று யாராவது பேச்செடுத்தால் அவர்களை கடித்துக் குதறவேண்டும் போலிருந்தது.

அப்போதுதான் என் தாயாருடைய போன் வந்தது. “நீ ஊர்வரும்போது அவசியம் மீசைக்காரத் தைலம் கொண்டு வா மறந்து விடாதே” என்று உரக்கச் சொன்னார். “அதெல்லாம் முடியாது நான் கோடாலித் தைலம் வாங்கி வருகிறேன்” என்று அதைவிட உரக்கமாக கத்தினேன்.. “நீ எப்பவும் இப்படித்தான் நான் ஒண்ணு சொன்னால் நீ ஒண்ணு செய்வே” என்று சலித்துக் கொண்டு போனை வைத்தார். என்னுடைய கஷ்டம் அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

“மீசை நரைத்தாலும் இவனுக்கு ஆசை நரைக்கவில்லை பாருங்கள்” என்று நடுத்தரவயதினரைப் பார்த்து யாராவது கிண்டலடித்தால் நான் கடுப்பாகி போவேன். மீசை நரைத்தால் என்ன? ஆசை இருக்கக் கூடாதா? விடலைப் பருவத்தின்போது வருவது வெறும் காதல் மயக்கம். ஆத்மார்த்த காதல் பிறப்பதோ நடுத்தர வயதில்தான் என்பது என்னுடைய பயங்கரமான கண்டுபிடிப்பு. ஜொள்ளர்கள் இந்த வயதில்தான் அதிகம்.

“At Forty Men become naughty; Women become fatty”

 என்று ஆங்கிலேயன் சும்மாவா சொல்லி வைத்துப் போனான்? எத்தனை அனுபவம் பொதிந்த வாக்கியம் இது?

 இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் என் மனைவி கரிசனமாக அருகில் வந்து “எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டாள். நம்மை ஒரு அறிவு ஜீவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளiடம் போய் நான் என் மீசையைப் பத்திதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று உண்மையைச் சொன்னால் “இவனுக்கு கழன்றுவிட்டதோ?” என்பதுபோல் ஒரு மாதிரியாக பார்ப்பாள். எதற்கு இந்த தொந்தரவென்று இரண்டு கைகளாலும் எழுதுவதை மறைத்துக் கொண்டேன். கடுப்பாகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

 எந்த வித முணுமுணுப்பும் இல்லாது இத்தனை வருஷம் மீசை இல்லாமல் ஜாலியாக ஓட்டி விட்டேன். திடீரென்று இந்த விபரீத ஆசை மீண்டும் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சென்ற மாதம் மறுபடியும் மீசை வளர்க்க ஆரம்பித்தேன். பாதி வெள்ளை முடி, பாதி கறுப்பு முடி. கண்ணாடியில் பார்த்தபோது வயதானவன்போல் ஒரு தோற்றம். ஒரு விருந்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணுக்கு இடும் மையை லேசாக ஆட்காட்டி விரலால் தடவி மீசை மீது பூசிக் கொண்டால் ஒண்ணும் தெரியாது என்று என் மனைவி சூப்பர் ஐடியா ஒன்றைச் சொல்ல அதுபோலவே செய்தேன். இழந்த இளமை ஒருவழியாக மீண்டு வந்ததுபோல் ஓர் உணர்வு. விருந்துக்கு போன பிறகு கைகழுவச் சென்ற நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் ஈரமான என் கைகளை முகத்தில் பூசிக் கொண்டேன். சபையில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்கப் போக, அப்பொழுதுதான் புரிந்தது. என் மேக்கப் கலைந்து முகமெல்லாம் கரியை பூசிக் கொண்டதுபோல் ஆகிவிட்டது. வெட்கித்துப்போய், பூனைபோல் மெதுவாக அங்கிருந்து நழுவி வந்தேன்.

 அதற்குப் பிறகு நண்பன் ஒருவனின் உபதேசத்தின்படி ‘டை’ செய்தால் என்ன என்று தோன்றியது. அது கறுப்பு மருதாணி என்று சொன்னார்கள். முதன் முறை என்பதால் எப்படி பூசுவது என்று தெரியவில்லை. பசைபோல கரைத்து என் மனைவியிடம் கொடுத்து பூசச் சொன்னேன். என் மீது என்ன கோபமோ தெரியவில்லை, ஒரு பட்டையான பிரஷ்ஷை எடுத்து சுவற்றுக்கு சுண்ணாம்பு பூசுவதைப் போல் விளாசித் தள்ளி விட்டாள். அரைமணி நேரம் நகரக் கூடாது என்று கண்டிஷன் வேறு. முடி கன்னங்கரேல் என்று ஆகிவிட்டது.

 அடுத்த நாள்தான் அந்தக் கொடுமை. அந்த மருதாணியில் என்ன கெமிக்கல் சேர்ந்திருந்ததோ தெரியவில்லை. என் முகம் முழுதும் புஸ்ஸென்று வீங்கி அரிப்பும் எரிச்சலும் தொடங்கி விட்டது. மீசையை அப்படியே பிய்த்து எறிந்து விடலாம் என்று தோன்றியது. மோவாயெல்லாம் புண்ணாகி விட்டது. டாக்டரிடம் சென்று ஊசி போட்டுக் கொண்டேன். அலர்ஜி ஆகிவிட்டதாம்.

புண் ஆறியதும் முதல் வேலையாக மீசையை மழித்து வீசி எறிந்தப் பின்தான் எனக்கு திருப்தி. இப்பொழுதெல்லாம் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. விபரீத ஆசையும் வருவதில்லை. இளமையாகவே இருப்பதுபோல் ஓர் உணர்வு, உற்சாகம். முகத்தை லேசாக வருடிக் கொண்டேன். வழுவழுவென்று அட்டகாசமாக இருந்தது.

 நன்றி : திண்ணை